tamilnadu epaper

ஆவணி ஞாயிறு விரதம்.

ஆவணி ஞாயிறு விரதம்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

 

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்கு வோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். 

 

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.

 

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். 

 

ஆன்மீக அறிவுக்காகவும் தேகநலனுக்காக வும் சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

 

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். 

 

முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்து தான் கிடைக்கின்றது. சூரியனுக்காக விரதம் இருந்தால் சரும நோய் நீங்கும்.

 

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரிய உதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். 

 

இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

 

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். 

 

அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் ஞாயிறன்று சூரியனை வணங்க சூரிய தோஷம் நீங்கும்.

 

கவிதா சரவணன்.