புதுடெல்லி, மே 11–
இந்தியா தாய் - சேய் சுகாதாரக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டஅறிக்கை:
தாய் - சேய் இறப்பு விகிதக் குறைப்பில் 2030-ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் பேறுகால இறப்பு தொடர்பான அறிக்கை 2019– 21-ன் படி, நாட்டில் பேறுகால இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2014–16-ம் ஆண்டில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 130 என இருந்த இந்த விகிதம் 2019–21-ம் ஆண்டில் 93 ஆகக் குறைந்துள்ளது.
இதேபோல், புள்ளிவிவர அறிக்கை 2021-ன் படி, குழந்தை இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 39 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 27 ஆகக் குறைந்துள்ளது.
பிரசவ இறப்பு குறைவு
பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கும் விகிதம் 2014-ல் 1000 பிறப்புகளுக்கு 26 ஆக இருந்தது. 2021-ல் இது 1000 பிறப்புகளுக்கு 19 ஆகக் குறைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2014-ல் 1000 பேருக்கு 45 ஆக இருந்தது, 2021-ல் இது 1000 பேருக்கு 31 ஆகக் குறைந்துள்ளது. பாலின விகிதம் 2014-ல் 899 ஆக இருந்தது. 2021-ல் இது 913 ஆக உயர்ந்துள்ளது.
தாய்- சேய் இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் இந்தியாவின் முன்னேற்றம் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளது. 1990 முதல் 2023 வரையிலான 33 ஆண்டுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் இந்தியா 78% வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது உலகளாவிய வீழ்ச்சியான 61% என்பதை விட சிறந்த செயல்பாடாக உள்ளது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகித வீழ்ச்சியில் உலக அளவில் 54% வீழ்ச்சி என்பதை ஒப்பிடும்போது இந்தியாவில் 70% வீழ்ச்சி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.