tamilnadu epaper

இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடாளுமன்றம் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு  நாடாளுமன்றம் பாராட்டு


புதுடெல்லி, மார்ச் 11–

துபாயில் நேற்று முன்தினம் நடந்த 9வது ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று, சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக கைப்பற்றியது.

இதையொட்டி, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘ஐசிசி சாம்பியன் கோப்பையை தாயகத்திற்கு கொண்டு வரும், நமது கிரிக்கெட் அணியால் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள், இந்த தொடர் முழுவதும் அற்புதமாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது அணிக்கு வாழ்த்துகள்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டம் நேற்று தொடங்கியது. மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் சபையை நடத்தினார்.

 அவர் கூறுகையில், ‘‘ஐசிசி சாம்பியன் டிராபியை நமது கிரிக்கெட் அணி, 3வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு, மாநிலங்களவை உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

மக்களவையிலும் நேற்று கேள்வி நேரம் முடிந்து பூஜ்ய நேரம் தொடங்குவதற்கு முன், ஐசிசி சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, வாழ்த்துக்களை தெரிவிப்பதாக, சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.