சென்னை, ஏப். 23–
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆலங்குளம் தொகுதி அதிமுக உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேசுகையில், ‘‘எனது தொகுதிக்கு உட்பட்ட கடையம் யூனியன், தோரணமலை முருகன் கோவிலில் கிரிவலப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘தோரணமலை முருகன் கோவில் சித்தர்கள் வழிபாடு மேற்கொண்டது. இதற்கு 900 அடி உயரத்தில் அமைந்துள்ள கிரிவலப் பாதை 3 கி.மீ. நீளம் மற்றும் 10 அடி அகலம் கொண்டது. இந்த கிரிவலப் பாதையை சீரமைக்க ரூ.2 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு போதிய நிதி வசதி இல்லாததால் உபயதாரர் நிதி எதிர்நோக்கி இருக்கிறோம். அது இயலாத பட்சத்தில் கமிஷனர் பொது நல நிதியில் இருந்து அதற்குண்டான நிதியை பெற்றுத் தந்து அந்த பணிகளை 3 மாத காலத்துக்குள் மேற்கொள்வோம்’’ என்றார்.