சென்னையைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சமீபத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் உடலில் கொழுப்பின் அளவு மற்றும் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. மேலும் அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்தார். இரைப்பைப் பிரச்னைகளும் இருந்துள்ளன. ஒழுங்கான உணவு முறையின்மை, உடல் செயல்பாடு இன்றி அமர்ந்தே இருப்பது போன்ற நவீன வாழ்க்கை முறையால் தூக்கமின்மை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி அவரது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்ததுடன், கல்லீரல் பிரச்னைக்கும் சிகிச்சை அளித்த நிலையில் 3 முதல் 4 மாதங்களில் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக கொச்சியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மஞ்சு ஜார்ஜ் கூறினார்.
இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?
“காலை உணவைத் தவிர்ப்பது, சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்வது, இரவு உணவைத் தாமதமாக எடுத்துக்கொள்வது, நள்ளிரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, இவற்றுடன் உடல் செயல்பாடு இல்லாதது உடல் எடையை அதிகரிக்கும்.இது கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிப்பதுடன், உணவில் சர்க்கரை அளவை முடிந்தவரை குறைக்க வேண்டும். அதேபோல இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்” என்று டாக்டர் மஞ்சு பரிந்துரைக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் உணவுக் கட்டுப்பாடு முறையை கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடும்(malnutrition) சரி, அதிக ஊட்டச்சத்தும்(overnutrition) சரி இந்த இரண்டினாலுமே உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் கூறுகிறார்.
2018 மார்ச் மாதம் லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட, இந்தியாவில் பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய ஆய்வில், 9 மாணவர்களில் ஒருவர் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது ஊட்டச்சத்துக் குறைவாக இருப்பது, அதிகமாக இருப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் சமநிலைத் தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு
ஆஸ்டர் மெட்சிட்டியின் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் சஜனா, “குழந்தைகள் மற்றும் பதின்வயதினரிடையே தற்போது ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடங்கங்கள்தான் இதற்குக் காரணம். இதில் வரும் உணவு விளம்பரங்களைப் பார்த்து குழந்தைகள் கேட்கும்போது பெற்றோர்களும் வாங்கிக்கொடுக்கின்றனர்” என்று தெரிவித்தார்.