விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்.
மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரணப் பெயரானது.
இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.
ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு சாபமிட, சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவ பெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.
அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றனர் .
பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கும்.
அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்
சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையிலும் மாதந்தோறும் அமாவாசையிலும் அங்காளம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.
அமாவாசை தினத்தன்று நடக்கும் அர்த்தசாம பூஜையை கண்டால் பிரச்சினைகள் தீரும், நோய் தீரும் என்பது ஐதீகம்.
அமாவாசைதோறும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மாதம் மஹா சிவராத்திரியன்று தொடங்கி 7-ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.
தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியத்துக்கு "திரிமதுரம்" என்று பெயர். இந்த நைவேத்தியம் அங்காள பரமேஸ்வரிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்யமாகும்.
மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்காளம்மனை நினைத்துக் கொண்டு, மாலையில் விளக்கேற்றி, குடும்பத்தாரை நடுஹாலில் அமரச்சொல்லி, திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
அன்னையாய் இருந்து நமக்கு அருள்பாலிப்பாள் அங்காளம்மன்!
சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவாசைக்கும் மேல்மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஓம் சக்தி!!
கீதா ராஜா, சென்னை 41