தருமபுரி என்றாலே அதியமான் ஒளவைக்கு கொடுத்த நெல்லிக்கனிதான் ஞாபகத்திற்கு வரும். அதற்கடுத்தாற்போல் தருமபுரியின் அடுத்த சிறப்பு அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவில்தான். இந்தியாவில் காலபைரவருக்கு என்று சிறப்பான இரண்டு இடங்களில் கோவில்கள் உள்ளன.
முதலில் காசியில் உள்ளது. இரண்டாவதாக தருமபுரி அதியமான்கோட்டையில் உள்ள தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலாகும். ஆதியும் இவரே.. அந்தமும் இவரே.. மொத்தம் 64 வகையான பைரவர் உள்ளனர். அதில் முதன்மையான பைரவர் உன்மந்திர பைரவர். அந்த பைரவர்தான் இங்கு வீற்றிருக்கின்றார்.
தருமபுரியை அதியமான் என்ற சிற்றரசர் ஆண்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. என்னதான் அரசர் என்றாலும் மன்னருக்கு பயமும் பதற்றமும் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. தனக்கு பகை ஏதும் நேராமல் இருக்க என்ன செய்யலாம் என்று தனது அமைச்சர்களையும் ராஜகுருக்களையும் கலந்து ஆலோசித்தார்.
பிறகு முடிவாக தனக்கு தெய்வ சக்தி இருந்தால் நல்லது என்றும் அந்த தெய்வசக்தி காலபைரவர்தான் என்றும் முடிவெடுத்தார்.
சிவன் ஆலயங்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் இருக்கும் கால பைரவர்தான் தனக்கு துணையாக இருக்க முடியும் என்று எண்ணி காலபைரவருக்கு ஓர் ஆலயம் ஏற்படுத்த விரும்பினார்.
தனது ராஜகுரு, அமைச்சர்களை காசிக்கு அனுப்பி காலபைரவர் சிலையை எடுத்து வர சொன்னார். அவர்கள் வருவதற்குள்ளாக அதியமான்கோட்டையில் ஆலயம் கட்டும் பணியை தொடங்கினார் அதியமான்.
கோவில் வேலை முடிவதற்குள்ளும் காலபைரவரின் விக்கிரகம் வருவதற்குண்டான நேரமும் சரியாக இருந்தது. பிறகு கட்டிய ஆலயத்தில் காலபைரவரை பிரதிஷ்டை செய்தார் அதியமான்.
காலபைரவரின் கருவறையில் நவக்கிரகங்களின் திருவடிகளையும் வடித்தார். நவக்கிரகங்களின் ஆற்றல் கோவிலுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணிதான் காலபைரவரின் சன்னதிக்குள்ளேயே நவக்கிரகங்களை அதியமான் வடித்ததாக கூறப்படுகிறது.
அதியமான் தனது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவரின் கரத்தில் போர்வாள் இடம்பெற்றிருக்கும்.
ஆலயத்தில் அதியமானின் ஆட்சி முறையும் மக்களின் அன்றாட நடைமுறைகளையும் சிற்பங்களாக காணலாம். காசிக்கு அடுத்தபடியாக தனியாக காலபைரவர் இங்கு பக்தர்களுக்கு காட்சி தருவதால் இந்த ஆலயத்தை முக்தி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தருமபுரி மட்டுமல்லாது கேரளா கர்நாடகா மாநில மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி ஹோமமும், அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
அன்று நள்ளிரவு 1008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
தட்ஷிணகாசி காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து தப்பிப்பதுடன் நினைத்த காரியம் முக்தியடையும் என்றும் நம்பப்படுகிறது.
அதியமான் மன்னரால் 9ம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. இது 1200 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவரை ஒருமுறையேனும் வழிபட்டால் நினைத்த காரியத்தில் முக்தி கிடைக்கும்.
தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் 7 வது கி.மீட்டரில் அதியமான்கோட்டை அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து வசதி, ஆட்டோ வசதி உள்ளது.
- வெ.சென்னப்பன், அரூர், தருமபுரி