திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டம் காஞ்சியம்பதிக்கு மேற்கு அழிவிடை தாங்கி மதுரா பைரவபுரம் அமைந்துள்ளது.இங்கு அருள்மிகு சொர்ண கால பைரவர் கோயில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார். அருள்மிகு பைரவ பெருமான் குரோத பைரவர்,சண்ட பைரவர் , குருபைரவர் , ஆசிதுங்க பைரவர்,ஸ்வர்ண ஆதர்சன பைரவர் என பன்முகங்களில் அருள் பாலித்து வருவது வழக்கமாக உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சன்னதிகளில் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்திருக்கும். ஆனால் தனிக்கோயில் என்பது அரிதானது .அந்த வகையில் அருள்மிகு சொர்ண கால பைரவர் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறார். சிவபெருமான் எடுத்த அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரமாக கருதப்படுவது பைரவர் அவதாரமாகும்.
இக்கோயில் அழிவிடை தாங்கி, கோணன்மேடை, வயலூர், பைரவபுரம் ,ஜம்போடை, தக்காம்பாளையம், எடப்பாளையம், பெருமாள்பேட்டை ஆகிய 8 கிராமங்களுக்கு சொந்தமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இக் கிராமங்கள் முக்கியமான எட்டு திருவிழா நாட்களில் உற்சவத்தை எடுத்து நடத்துகின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு காஞ்சிபுரம், ஆற்காடு ,செய்யாறு ஆகிய வழித்தடங்களின் வழியாக பயணித்து வெம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 5.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழிவிடைதாங்கி ஊராட்சி நோக்கி செல்லும் போது பைரவபுரம் பெயர் பலகை வரவேற்கும். சற்று தொலைவில் மெயின் ரோட்டில் அருள்மிகு சொர்ண கால பைரவரின் ராஜகோபுரம் தெரியும். கோயிலை அடைந்த மகிழ்வில் உள்ளே சென்றால் மூலவரான பைரவ பெருமானை தரிசிக்கலாம்.
கிபி 3ஆம் நூற்றாண்டுக்கும் ,6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அழிவிடை தாங்கி தொண்டை மண்டலத்திற்கு உட்பட்ட, தொண்டை காருண்யம் என்ற வனமாக இருந்ததாகவும், அதை திருத்தி நாடாக்கி பௌத்த மன்னர்கள் ஆண்ட பகுதியாக கூறப்படுகிறது. மேலும் இங்கு கல்விக்கூடம் இருந்து வட இந்தியாவில் இருந்து மாணவர்கள் வந்து தங்கி கல்வி பயின்றதாகவும் கூறப்படுகிறது. நாளடைவில் சமணர்களின் ஆதிக்கத்தில் சமண அறிஞர் அசுலிங்கர் வாதத்தால் பௌத்தம் அங்கிருந்து இடம்பெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது சமயம் இவ்வூர் அறவழி தாங்கி என்று அழைக்கப்பட்டதாக தெரிகிறது.
பிற்காலத்தில் பல்லவர்கள், சோழர்கள் பக்தி வளர்ப்பு போட்டியில் சிவபெருமானை போற்றும் சைவம் வளர்ந்தது .கிபி 14ஆம் நூற்றாண்டில் வீர சம்பூர்வராய அரசன் இங்கு கோட்டை கட்டி ஆண்டு வந்ததாகவும் பின்னர் அக்கோட்டை காலப்போக்கில் பருவநிலை மாற்றத்தால் முழுவதுமாக அழிந்து போனதாகவும் தடயங்கள் நமக்கு கூறுகின்றது.
வடக்கிலிருந்து யாதவராயன் என்ற மன்னர் இங்கு படை எடுத்து வந்து நடந்த சண்டையில் சம்பூர்வராயர் படைகள் அழிவதை கண்ட மன்னன் வருத்தம் அடைந்ததாகவும் , அன்று இரவு கால பைரவர் கனவில் தோன்றி நாளை போரில் உமக்கு துணை இருப்பேன் என்று கூறியதாகவும், கூறப்படுகிறது. பின்னர் போரில் வெற்றி பெற்ற வீர சம்பூர்வராராய மன்னர் பைரவரால் பட்டினத்தையும், படையையும் காப்பாற்றப்பட்டவராய் இவ்வூருக்கு அழிபடை தாங்கி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் காலப்போக்கில் மருவி அழிவிடைதாங்கி என்று அழைக்கப்படுகிறது.
பல நூற்றாண்டு பழமையான இந்த சொர்ண கால பைரவர் கோயிலில் மூலவர் தெற்கு நோக்கி உடுக்கை ,நாக பாசம் ,முத்தலை சூலம், கபாலம் ஏந்தி, மோத்த இசையுடன் தமது வாகனம் சூழ வில்வ இருக்கையில் அருள்பாளிக்கின்றார்.
மூலவர் சன்னதி, உட்பிரகாரம், அதனைத் தொடர்ந்து வெளி பிரகாரத்தில் அன்னம், மயில் ,குதிரை ,யானை, சிங்கம், கருடன், சுனம், நாய் உள்ளிட்ட எட்டு சிறிய அளவிலான சிலைகளும் ,சற்று பெரிய சிலையாக ரிஷப வாகன சிலையும் சேர்த்து 9 வாகனங்கள் எதிரே பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் அஷ்டமி கல்மரம் தல விருட்சமாக பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு அம்சமாகவே கருதப்படுகிறது. அதற்கு முன்னும் பின்னும் பைரவரின் தனி வாகனங்கள் உள்ளது . கருவறை, அந்தராலம் ,மகா மண்டபம் என்ற மூன்று நிலைகளிலும், வெளிப்பிரகாரத்தில் உற்சவர் மூர்த்தி வைக்கும் அறையும், கோயில் பொருட்கள் வைக்கும் அறையும் உள்ளன. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பிரதானமாக உள்ளது.
இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வழிபாட்டில் பக்தர்கள் பெரும் ழதிரளாக கலந்து கொண்டு தரிசிப்பது வழக்கமாகும். அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காலை எட்டு மணி முதல் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையில் கோயில் நடை திறந்திருக்கும். எமகண்டகால பூஜையும் விசேஷமானதாகும் .மற்ற நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் ஏழு மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
பல்வேறு வகையான குடும்பப் பிரச்சனைகள், சுப காரிய தடைகள், பல்வேறு தோஷங்கள் பில்லி, சூனியம் ,ஏவல், அகன்றிட கோரிக்கைகளை முன்வைத்து பக்தி சிரத்தையுடன் வேண்டினால் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அருள்மிகு பைரவர் சன்னதி உபாசகரும் ,இக்கோயில் அர்ச்சகருமான கார்த்திகேயசர்மா(65) கூறியதாவது, அழிவிடைதாங்கி- பைரவபுரம் சொர்ண கால பைரவர் மகா சக்தி கொண்டவர். வேண்டியவருக்கு வேண்டிய அருளை தருகின்றார். தாம் 35 ஆண்டுகளுகு மேலாக இக்கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருவதாகவும், பக்தர்களின் நேர்மையான கோரிக்கைக்கு செவி சாய்க்கின்றார். சாஸ்திர, சம்பிரதாயத்திற்கு மாறாக நடப்பவரை , உதாசீனப்படுத்துவோரை தண்டிக்கவும் செய்கின்றார். என்பது கண் கண்ட உண்மையென தமது அனுபவத்தை பகிர்கின்றார். மேலும் மூலவரை படம் எடுக்கக் கூடாது, படம்பிடித்து வீட்டில் வைக்கவும் கூடாதுஎன்றும், மானசீகமாக பிரார்த்தனை செய்தாலே எல்லாம் வல்ல பைரவரின் அருள் கிட்டும் என்றார்.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகர் சுவாமிகள் இவ்வூரில் தங்கி கொட்டகையில் யாகம் நடத்தி உள்ளதாகவும், ஆரம்ப காலத்தில் ஆதிசங்கரர் இக்கோயிலின் சிலையை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. காஞ்சி மடத்திற்கு நெருக்கமாக இருந்த குமாரசாமி தீட்சிதர் தமக்கு உபதேச குருவாகவும் இருந்தார் .என்று அர்ச்சகர் கார்த்திகேயன் சர்மா குறிப்பிடுகின்றார்.
அருள்மிகு சொர்ண கால பைரவர் அறக்கட்டளை தலைவராக தற்போது ஜெ.சி.கண்ணன் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் கோயில் வளர்ச்சிபணிகளை செய்து வருகின்றனர்.இக்கோயிலானது அருகில் உள்ள எட்டு கிராமத்திற்கு சொந்தமானதாக கருதப்பட்டாலும், எட்டாத தூரத்தில் உள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் பைரவரை தமது சொந்தம் ஆக்கிக் கொண்டுள்ளனர் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கால பைரவரை பக்தி சிரத்தையுடன், நேர்மையுடன் வந்து வழிபடுபவருக்கு வேண்டி விரும்பியதை நிறைவேற்றித் தருவார் என பலன் கண்ட பக்தர்கள் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர். வாருங்கள் கால பைரவரை தரிசிப்போம். வருங்காலத்தை வசந்தமாக்குவோம்.
எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.