திருச்சி மலைக்கோட்டை சிவன் கோயிலில் ஸ்ரீ மட்டுவார் குழலம்மை சன்னதி எதிரில் ஒரு பாதாள அறையில் ஸ்ரீபாதாள ஐயனார் அருள்பாலிக்கின்றார்.
பொதுவாக ஸ்ரீஐயனார், கோயிலினுள் தனிச்சன்னதி கொண்டு எழுந்தருள்வது மிக மிக அபூர்வம். இங்கு ஸ்ரீபாதாள ஐயனாரை தரிசித்த பின்னரே ஸ்ரீ அம்பிகையை தரிசிக்க வேண்டும்.
ஸ்ரீபாதாள ஐயனார் சந்நதியில்
1. விளைச்சலின் புதிய பொருட்களை அர்ப்பணித்தல் (விளைச்சலில் முதல் தேங்காய், மா, பலா, வாழை, காய், கனிகள், நெல், கரும்பு தான்யங்கள் போன்றவை ) மூலம் நல்ல விளைச்சல் ஏற்படும். விளைச்சலில் இயன்ற அளவு இங்கு ஏழைகட்கு உணவாகவோ வேறு விதத்திலோ தானம் செய்திடப் பஞ்சம் ஏற்படாது காத்திடலாம்.
2. ஸ்ரீ ஐயனாருக்கு இளநீர், சந்தனம், பானகம், கரும்புச் சாறு, தேன் இவற்றால் அபிஷேகம் செய்து குறைந்தது 1008 பேருக்காவது அன்னதானம் செய்திட மழைப்பொழிவு உண்டாகும்.
3. வற்றிய கிணறு, குளம், புதிய கிணறு ஆகியவற்றில் நீரோட்டம் நன்கு பெருகிட ஸ்ரீ பாதாள ஐயனாருக்குப் பிரார்த்தனை செய்து இளநீர், பானகம், பழரசங்கள், நீர், மோர்போன்றவற்றை வறியவர்களுக்கு அளிக்க வேண்டும்.
4. ஸ்ரீ ஐயனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றை அவரவர் பூமியில் சேர்த்திட நீர்ப்பொழிவும், நல்விளைச்சலும் ஏற்படும்.
5. உப்புசம், வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக பாதிப்புகள் உள்ளோர் ஸ்ரீ பாதாள ஐயனாருக்குப் பிரார்த்தித்து கிழங்குவகைக் காய், கனிகளுடன் அன்னதானம் செய்து ஏழை எளியோருக்கு இலவச மருந்துகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அளித்து வரவேண்டும்.
6. தங்கள் குலதெய்வம் இன்னதென்று அறியாதோர் மாதந்தோறும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாதாள ஐயனாருக்கு (வெல்லப்) பொங்கல் படைத்து அன்னதானம் செய்துவர (குறைந்தது மூன்று பெரிய படி) கனவிலோ, யார் மூலமாகவோ, ஏனைய சற்குரு மூலமாகவோ தக்க விளக்கங்களைப் பெறுவர்.
-ப.சரவணன்.