தமிழ் வருடப்பிறப்பு பிறந்தது.. அனலும்.. புனலும் மழையும் கலந்த பங்குனி சித்திரை மாதங்களில் திருமயம் நகரின் காவல் தெய்வங்களுக்கு படையலிட்டு, பொங்கல் வைத்து நமது மக்கள் கூடி விழா எடுத்து வணங்குவர்.
அந்த வகையில் முதலில் நமது எல்லைக் காவல் தெய்வங்கள் கொண்டாடப் படுகின்றனர்.
திருமயம் கோட்டை அடிவாரத்தில் குடைவரைக் கோவிலாக திகழ்வன.. ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் உடனாய வேணுவனேஸ்வரி ஆலயமும்... ஸ்ரீ உச்சீவனத்தாயார் உடனுறை ஸ்ரீ சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயமும் பெருமை மிக்கதாகத் திகழ்கின்றன.
இந்த சைவ வைணவ ஆலயங்களைத் தவிர திருமயத்தின் காவல் தெய்வங்கள்.. கோட்டையைச் சுற்றி நான்கு திசையிலும் பிரபல்யமானவைகளாக திகழ்கின்றன.
அந்த திருமயம் காவல் தெய்வங்களைப் பற்றிப் பார்ப்போம்.
*1. அருள்மிகு இளஞ்சாவூர் முத்து மாரியம்மன்.*
திருமயம் கடியாப்பட்டி சாலையிலே.. வயல்கள் சூழ்ந்த வளமான கிராமம் இளஞ்சாவூர். களத்து மேடுகளும்.. உழவர்குடியினரும் சூழ திருமயத்தின் காவல் தெய்வமாக ஸ்ரீ இளஞ்சாவூர் மாரியம்மன் அருளாட்சி செய்கின்றாள்!பங்குனி மாதத்தில் பூச்சொரியல் பொங்கல் திருவிழா.. அனைத்து மக்களும் ஒன்று கூடி வணங்கி வருகின்றனர் ஸ்ரீ இளஞ்சாவூர் முத்து மாரியம்மனை.
*2.ஸ்ரீ பிடாரியம்மன்*
அரியநாயகி அம்மனாக கல்லடிப் பள்ளச்சுனையின் அருகே தாமரைக் கண்மாய் அலைசூழ நீர் தேவதையாக காட்சித் தருகின்றாள். சித்திரை பிறக்கும் முன்பே ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி விழா எடுக்கின்றனர். அன்னையை ஊர்வலமாக அழைத்து பாடிப் பணிந்து படையலிட்டு கொண்டாடி மகிழ் கின்றனர்.
*3.திருமயம் ஸ்ரீ கோட்டை கால பைரவர்.*
திருமயம் புதுக்கோட்டை சாலையோரம் கோட்டை மதில்சூழ் காவல் தெய்வமாக.. தமிழகத்திலேயே மிக அரிதான வடக்கு நோக்கி காட்சி தருகின்றார் கோட்டை கால பைரவர். சிவாலங்களில் சிவ லிங்கசந்நிதி அருகே காட்சி தருகின்ற பைரவர் திருமயத்தில் சிவன் கோவிலின் வெளியே கோட்டை மதில் அருகே வடக்கு நோக்கி காட்சி தருவது சிறப்பானதாகும். சாலைப் பயணத்திலும் நம் வாழ்க்கை பயணத்திலும் நமக்குத் துணையாக கேட்ட வரங்களை வாரி வழங்குகிறார் கோட்டை கால பைரவர். திருமயத்தை கடந்து போகின்ற அனைத்து வாகனங்களும் நின்று சிதறுகாய் அடித்து வணங்கி பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.
*4.கோட்டை முனீஸ்வரர்*
எழில் நகராம் திருமயத்தின் கடைவீதி அருகே கோட்டை வாசல் கம்பீரமாக காட்சித் தருகின்றது. அங்கே அருள்வடிவாக.. காவல் தெய்வமாக காட்சித் தருகிறவர் ஸ்ரீ கோட்டை முனீஸ்வரர். எப்போதும் சாம்பிரானி மணம் கமழ.. வேல் அறிவாள் ஊன்றப்பட்டு காவல் தெய்வம் காட்சித் தருகின்றார். தமிழ்வருடப் பிறப்புக்கு சிறப்பு வழிபாடு நடக்கின்றது. செலவ்வாய் வெள்ளிக் கிழமைகள் விஷேச பூஜைகள் நடக்கின்றது. கோட்டை வாழ் மக்களின் குல தெய்வமாக அருள் வாரி வழங்குகிறார் முனீஸ்வரர்.
*5.ஸ்ரீ ஆலமரக்கருப்பர்.!*
காலத்தை மாற்றுகிற நேரத்தில் காக்கின்ற திருமயம் காவல் தெய்வமாக காட்சி தருகின்றார் ஸ்ரீ ஆலமரக்கருப்பர்.
பலநூறு ஆண்டுகள் கடந்து, ஓங்கி வளர்ந்த ஆலமரம் ஊர் நடுவே கோட்டைக்குள் உயர்ந்து நிற்கின்றது.! அதன் உச்சியிலே அதிகாலையிலும் மாலை வேளையிலும் குயில்கள் கிளிகள்.. காக்கைக் குருவிகள் வந்தமர்கின்றன.. குரல் எழுப்புகின்றன திருமயம் காவல் தெய்வமாகவீற்றிருக்கு ஆலமர கருப்பரை வலம் வந்து வாழ்த்துரக்கின்றன. பக்தர்கள் வந்து வணங்க வினைகள் விலக.. வளங்கள் பெருகின்றன. நினைத்தது நடக்க வைக்கும் ஆலமரக்கருப்பர் ஆலயத்தை அழகுற மிளிர வைத்து அன்றாட பூசைகளை நடக்க வைத்து.. தமிழ் வருடப் பிறப்புநாளில் திருவிழா நடத்துகின்றார் திருமயம் சரவணன் ஐயா.! அவர் மண்ணின் மைந்தர். செயல்வீரர்.. ஆலமரக்கருப்பரின் பக்தர். யார் வரம் கேட்டாலும் தவறாது வழங்கிறார் திருமயம் ஆலமரக் கருப்பர்.
திருக்கோவில்கள் சூழ்ந்த திருமயத்தில் காவல் தெய்வங்கள் மக்களின் விழியாக.. அன்பின் மொழியாக வழி வழியாக காத்து வருவதால் திருமயம் மக்கள் விழா எடுத்து வணங்கி மகிழ்கின்றனர். நாமும் வணங்குவோம் வாழ்வில் வரங்களைப் வளங்களைப் பெறுவோமாக.
திருமயம் புலவர்மகன்
வே.கல்யாண்குமார்.எம்.ஏ.