சென்னையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டார் குப்பம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் *900 ஆண்டுகள் பழமையான பால சுப்ரமணிய சுவாமி கோவில்* புகழ்பெற்ற கோவிலாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
*தப்பாமல் இப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்தமர்ந்த ...... பெருமாளே...*
அருணகிரிநாதர் 'தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே' என்று இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.
முருகப்பெருமான் நாடாண்டு, படையாண்டு ஆண்டியாக காட்சித் தந்து குடியேறிய இடமே ஆண்டியர் குப்பம் என்று அழைக்கப்பட்டு இன்று ஆண்டார் குப்பம் என்று அழைக்கப்படுகிறது. புதுவீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து செங்கல் அடுக்கி வைத்து வேண்டிக்கொண்டால், நிச்சயமாக வீடு கனவு நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான் கிழக்கு நோக்கி பாலசுப்பிரமணியனாக நின்றக்கோலத்தில் காட்சித் தருகிறார். இவருடைய வல இடமாக வள்ளி, தெய்வானை என இரண்டு தேவியர்களுக்கும் தனிசன்னதி அமைந்துள்ளன.
இந்தத் தலத்து முருகனுக்கு வேறொரு சிறப்பும் உண்டு.
அலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானைத் தரிசிக்கும்போது, காலை வேளையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும் மாலையில் வயோதிகனாகவும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
"அந்நியருக்கும் அருளியவர் இந்த ஆண்டவன்” எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
ஒரு முறை இந்தப் பகுதி வழியே படைநடத்திச் சென்ற சுல்தான் ஒருவன், இந்த முருகனைத் தரிசிக்க வந்த அடியார்களிடம் தனக்காகவும் பிரார்த்திக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டானாம். அவர்களும் சுல்தானுக்காக முருகனிடம் பிரார்த்தித்துக்கொள்ள, அவரருளால் போரில் வெற்றி கிடைத்ததாம் சுல்தானுக்கு.
அதற்கு நன்றிக்கடனாக சுல்தான், முருகனுக்குக் கோயில் எழுப்ப நிலம் வழங்கியதாக சரித்திரத் தகவல்கள் சொல்கின்றன. மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் சிற்பம் திகழ்கிறது; பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலைதூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம்.
அருணகிரிநாதர், வாரியார் ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோரும் இந்தத் தலத்து முருகனைப் போற்றி வழிபட்டுள்ளார்கள்.
இந்த ஆலயத்திற்கு வந்த அடியவரான ஒரு முருக பக்தர், இத்தலத்தில் நீராட நினைத்தார். அங்கிருந்த ஆண்டிகளிடம், “இங்கே நீராடும் இடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அப்படி தீர்த்தம் எல்லாம் இந்த ஆலயத்திற்கு கிடையாது” என்றனர். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவனாக அங்கு வந்த முருகன், தீர்த்தம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஓரிடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார். அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து வந்து குளமாக மாறியது. அதுவே இங்கு ‘வேலாயுத தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.
இப்படி, அற்புத மகிமைகளோடு அழகன் முருகன் அருள்பாலிக்கும் இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
செல்லும் வழி
சென்னையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆண்டார் குப்பம் உள்ளது. ஆண்டார்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன. நாமும் அங்கு சென்று முருகனின் அருள் பெறலாம்.
கீதா ராஜா சென்னை