tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் 'கடலூர் வரவூர் மாரியம்மன்' சிறப்பு

எங்கள் குலதெய்வம் 'கடலூர் வரவூர் மாரியம்மன்' சிறப்பு

வரவூர் மாரியம்மன்' கோயில் கடலூரில் வண்டிப்பாளையம் என்ற 

இடத்தில் உள்ளது. கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 

இரண்டு கி மீ தொலைவில் உள்ளது வண்டிப்பாளையம். சுமார் 

100 ஆண்டுகள் பழமையான கோயில் இது. கோவிலுக்கு செல்ல 

நகரப் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

 

 

100 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயி ஒருவர் பருவ மழை பெய்த 

காலத்தில் வண்டிப்பாளையத்தில் இருந்து இரட்டை மாடு பூட்டிய 

வண்டியில் திருப்பாதிரிபுலியூர் சென்று கொண்டு இருந்தார். அப்போது 

பனை ஓலை குடையுடன் கையில் லாந்தர் விளக்குடன் வந்த 

மூதாட்டி ஒருவர் விவசாயியிடம் 'கருட நதிக்கரைக்கு எவ்வளவு தூரம் 

செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் ஏன் அங்கு 

செல்கிறீர்கள் என்று கேட்டதும்...'கருட நதிக்கரையில் மயானத்திற்கு

அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர வந்துள்ளேன் என்று சொல்லியபடி 

அவரைக் கடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப் பார்த்த 

விவசாயியின் கண்களுக்கு விளக்கு ஒளி மட்டுமே தெரிந்தது. மூதாட்டி 

உருவம் தெரியவில்லை. (கெடிலம் நதிதான் கருட நதி என்று முன்பு 

அழைக்கப்பட்டது. இந்த கெடிலம் நதிக்கரையில் தான் அப்பர் பெருமானை 

ஆட்கொண்ட இறைவன் எழுந்தருளியிருக்கும் திருவதிகை வீரட்டானம் 

மற்றும் சுந்தரரை தடுத்தாட்கொண்ட ஈசன் குடிகொண்டு இருக்கும் 

திருநாவலூர் தலமும் உள்ளது. இந்த தகவலை பொன்னியின் செல்வன் 

நான்காம் பாகத்தில் கல்கி அவர்கள் குறிப்பிட்டு இருப்பார்.) கண் முன் 

நடந்த சம்பவத்தை அந்த விவசாயி ஊர் மக்களிடம் சொல்ல அனைவரும் 

கெடில நதிக்கரையில் உள்ள மயானத்திற்கு சென்று மூதாட்டியை தேடினார்கள்.

அங்கு வேப்ப மரத்தடியில் இருந்த புற்று ஒன்றின் மீது நாகம் படமெடுத்து 

ஆடியது. அப்போது 'நான் வரவூரில் இருந்து வந்திருக்கிறேன். என்றும் உங்களுக்கு 

உறுதுணையாக இருப்பேன். என்னை வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வு 

தருவேன்' என்று அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அன்று முதல் புற்றுக்கு 

பால் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். சில ஆண்டுகள் கழித்து அங்கு 

காலரா நோய் பரவியது. அம்மன் அருளால் நோய் குணமாகும் என்று நம்பிய 

மக்கள் பூஜைக்காக புற்றுக்கு ஈசான்ய திசையில் கிணறு ஒன்று தோண்டினார்கள்.

அப்போது கிணற்றில் பழமையான மாரியம்மன் சிலை ஒன்று கிடைத்தது. அதை 

கீற்றுக் கொட்டகையில் வைத்து 'வரவூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபட 

ஆரம்பித்தார்கள். அன்று முதல் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் கிணற்று நீர் 

தீர்த்தத்தை உடலில் தெளித்து அருந்தினால் சகலவிதமான நோய்களும் 

தீர்ந்து விடும் என்று நம்பினார்கள். இதுதான் இக்கோயில் வரலாறு. 

 

 

ஒருமுறை இக்கோயிலை ஒட்டியுள்ள உள்ள மாமரத்தின் அருகில் மக்கள் 

பொங்கல் வைத்து பூஜை செய்து கொண்டிருந்த போது பலத்த மழை பெய்யத் 

தொடங்கியது. அப்போது அம்மன் இருந்த ஓலை கொட்டகை மீது மரம் ஒன்று 

விழுந்தது. விழுந்த மரத்தை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த 

போது காளியம்மன் சிலை ஒன்று அங்கு கிடைத்தது. காளிகா பரமேஸ்வரி 

என்று பெயர் சூட்டி மாரியம்மன் சிலைக்கு அருகே அதை நிறுவினார்கள்.

 

 

மற்ற ஊர்களில் நாம் பார்க்கும் மாரியம்மன் கோயில் போல் அல்லாமல் இந்த கோயில் 

வேறு வடிவில் இருக்கும். கொல்கத்தாவில் உள்ள கோயில்கள் போன்று இருக்கும். ஆண்டுதோறும் 

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவிழா நடைபெறும். ஆடி வெள்ளியும் சிறப்பாக கொண்டாடப் 

படுகிறது. வீட்டிலே சக்கரை பொங்கல் செய்து கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனிடம் 

வைத்து பூஜை செய்கிறார்கள். மாவிளக்கு போடுகிறார்கள், கூழ் ஊற்றுகிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் 

சகல தோஷங்களும் நிவர்த்தி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

பிரார்த்தனை நிறைவேறியதும் அலகு குத்தி செடல், பாடை கட்டி செடல்,அக்னி சட்டி 

ஏந்துதல், மற்றும் 108 அலகுகள் குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

 

 

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும்

நடை திறந்திருக்கும்.

 

                                                                         ===

 

 

 

 

 

 

 

 

 

--

திருமாளம் எஸ். பழனிவேல்