tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் கருவாழக்கரை காமாட்சி அம்மன்

எங்கள் குலதெய்வம் கருவாழக்கரை காமாட்சி அம்மன்

இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். மயிலாடுதுறை --பூம்புகார் சாலையில் , மயிலாடுதுறையிலிருந்து 8 கி. மீ. தூரத்தில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.சாலையை ஒட்டி காமாட்சி அம்மன் கோயில் வளைவு உள்ளது.அதிலிருந்து வெகு அருகில் ஆலயம் உள்ளது.
   ஆரம்பத்தில் மாரியம்மன் என்று தான் மக்கள் கருதி வழிபட்டு வந்தார்கள். காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் ,  இந்தக் கோவிலுக்கு வந்திருந்த  பொழுது, இவள் மாரியம்மன் அல்ல, சாட்சாத் காமாட்சி அம்மன் என்று கூறினார். அதன்பிறகு தான் காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
  இந்த அம்மனைப் பற்றி இரண்டு விதமான வரலாறுகள் கூறப்படுகின்றன.
முதலாவது, இந்த ஊர் குளத்திலிருந்து அம்மன் கிடைத்தது என்றும், இரண்டவதாக, இந்த ஊரைச் சேர்ந்த ஒரு அய்யர், ஒரு பிள்ளைமார், ஒரு அய்யங்கார் ஆகிய மூவரும் ஒரு வழக்கு சம்பந்தமாக தஞ்சாவூர் சென்று விட்டு, ஊருக்குத் திரும்பி வரும், வழியில் ஒரு ஆற்றில் குளித்த பொழுது ,துணி துவைக்கும் நேரத்தில் அந்தக்கல் அசைந்ததால் புரட்டிப் பார்த்தார்கள்.அது ஒரு அழகான அம்மன் சிலை.மூவரும் மாற்றி,மாற்றி சுமந்து வந்து, தமது ஊரில் பிரதிஷ்டை செய்ததாகவும்,அவள் தான் இந்த காமாட்சி அம்மன் என்றும் உறுதி செய்யப்படாத ஒரு தகவல் கூறுகிறது.
  எனவே, காமாட்சி அம்மன், ஸ்மார்த்த, வைஷ்ணவ அந்தணர்கள், பிள்ளைமார் ஆகியோரின் குலதெய்வமாகும்.தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு வைத்தீஸ்வரன் கோவில் குலதெய்வமாகும். அதுபோல, மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர் மக்கள் பலருக்கும் கருவாழக்கரை காமாட்சி அம்மன் குலதெய்வமாகும்.
    கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி,வேண்டியவர்களுக்கு வேண்டுவன தருபவள்.அவள் இடது காலை மடித்து,வலது காலை தொங்கவிட்டபடி அமர்ந்த கோலம். பாசம் ,சூலம் ,கட்கம், கபாலம் தாங்கிய நான்கு கரங்களுடன் கூடிய விக்ரஹம்.
இக்கோயிலில் விநாயகர், வீரன்,பேச்சியம்மன், காத்தவராயன் சந்நிதிகளும் உள்ளன.
 குலதெய்வக் கோயில்களுக்குரிய பிரார்த்தனைகளான முடியிறக்குதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற சம்பிரதாயங்கள் இங்கு நிறைவேற்றப் படுகின்றன.
 சித்திரை மாதம் தீமிதி சிறப்பாக நடைபெறும். செவ்வாய், வெள்ளி, நவராத்திரி சிறப்பான நாட்களாகும்.
 குழந்தையில்லாத பெண்கள் காத்தவராயன் சந்நியில் , வயிற்றில் வாழை இலை அல்லது தாம்பாளத்தில் வாழைப்பழத்தை தேனும், நெய்யும் சேர்த்து நன்றாகப் பிசைந்து , அதில் திரியை வைத்து தீபம் ஏற்றுவார்கள்.பின்னாளில் குழந்தைப் பேறு நிச்சயம்கிடைக்கும்.
  நவக்கிரகம், செவ்வாய், ராகு, கேது   தோஷம் உள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் , புதுப்பானையில் முக்கால் பங்கு தண்ணீரை நிரப்பி ,அதில் ஒரு வாழைப் பூவை பிய்த்துப் போட்டு,வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய்  ஒன்றாகக் கலந்து, 27 தென்னங் குச்சிகளில் பஞ்சை வைத்து அந்த எண்ணெயில் நனைத்து, தீபம் ஏற்றிவைத்து விட்டு, பிரகாரம் சுற்றி வருதல் ஒரு பரிகாரமாகும்.
----------
வி. வெங்கட்ராமன்.