மனக்குழப்பம், சித்த பிரமையால் வாடுவோரைக் குணப்படுத்தி நிம்மதி தருகிறார் திருச்சியை அடுத்த குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி (வேங்கடேசப்பெருமாள்)
மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமான இங்கு திருப்பதி ஏழுமலையானே மூலவராக இருக்கிறார்.
பெருமாள் பக்தரான குணசீலர் தன் ஆஸ்ரமத்தில் ஏழுமலையானை வழிபட்டு வந்தார். குணசீலரின் குருநாதரான தால்பியர் என்பவர் குணசீலரை தன் ஆஸ்ரமத்திற்கு கூப்பிடவே, பூஜை செய்யும் பொறுப்பை சீடன் ஒருவனிடம் ஒப்படைத்துச் சென்றார். அன்றிரவு வனவிலங்குகள் ஆஸ்ரமத்திற்குள் நுழையவே சீடன் அங்கிருந்து தப்பித்தான். இதன்பின் ஏழுமலையான் சிலை மண்ணுக்குள் புதைந்தது.
இப்பகுதியை ஆட்சி செய்த ஞானவர்மன் காலத்தில் அரண்மனைப் பசுக்கள் காட்டில் மேய்ந்தன. குறிப்பிட்ட இடத்தில் பசுக்கள் தினமும் பாலைச் சொரிந்தன. விஷயத்தை அறிந்த மன்னர் காட்டிற்கு வந்த போது, புற்றுக்குள் பெருமாள் சிலை இருப்பதாக அசரீரி ஒலித்தது. அந்த இடத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு கோயில் கட்டப்பட்டது.
கருவறையின் இருபுறமும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. காலை, மாலையில் பூஜையின் போது பிரசாதமாக தீர்த்தம் தருகின்றனர்.
பெருமாளே பிரதானம் என்பதால் தாயார், பரிவார மூர்த்திகள் இல்லை. உற்சவர் ஸ்ரீனிவாசர் சாளக்ராம மாலையணிந்து
கையில் செங்கோல் தாங்கி அரச வேங்கடநாதனாக இங்கு அருள்கிறார்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம், சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது குணசீலருக்கு காட்சியளித்த வைபவம் நடக்கும். மாதந்தோறும் திருவோணத்தன்று கருடசேவை நடக்கிறது. மனம், உடல் குறைபாடு உள்ளவர்கள் நிம்மதி வேண்டி
பிரார்த்திக்கின்றனர்.
இங்கு விசேஷ நாட்கள் - சித்ரா பௌர்ணமியில் தெப்ப திருவிழா, புரட்டாசி பிரம்மோற்சவம், கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீ ராம நவமி.
குணசீலம் பெருமாள் , திருமாா்பில் திருமகளைத் தாங்கி நின்று, அா்ச்சாவதாரத் திருக்கோலத்தில் எழுந்தருளி இன்றும் என்றும் பக்தர்கள் மனம் கனிய அருள்பாலிக்கிறார்.
திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம்.
குணசீலத்து வேங்கடவன் துணையிருக்க ஏது குறை! ஏது வினை! ஏது பயம்! பக்தவத்சலா போற்றி, பரமதயாளா போற்றி, பாண்டவர் தூதே போற்றி, மனநலம் காக்கும் மாதவா போற்றி போற்றி!
ராஜா சக்ரவர்த்தி சென்னை 41