அறிமுகம்
"அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோவில்" தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 'அரியலூர்' எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம்.
### 1. மூலவர் மற்றும் அமைவிடம்:
மூலவர்: கோட்டை முனியப்பன்
ஊர்: அரியலூர்
மாவட்டம்: அரியலூர்
மாநிலம்: தமிழ்நாடு
### 2. திருவிழா:
'பவுர்ணமி மற்றும் அமாவாசை' ஆகிய நாட்களில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இது மற்ற நாட்களைக் காட்டிலும் மிகவும் விமரிசையாக ஒரு திருவிழா போன்று இருக்கும்.
### 3. தல சிறப்பு:
வெட்டவெளியில் வானம் பார்த்து வரிசையாக குத்தப்பட்டிருக்கும் வேல்கம்புகள், விண் ஒளியை மறைத்து கிளைபரப்பி நிற்கும் வயது முதிர்ந்த அரச விருட்சம். அருகில் கோட்டை முனியப்ப சுவாமி அருவமாகக் காவல் இருப்பது என இக்கோவில் பல சிறப்புகளை கொண்டதாகும்.
### 4. கோவில் நேரம்:
'காலை 6-11 மணி' மற்றும் 'மாலை 5-8 மணி' ஆகிய நேரங்களில் கோவில் நடை திறந்திருக்கும்.
### 5. பிரார்த்தனை:
நினைத்த காரியம் நிறைவேற மக்கள் இங்கு வந்து, கோட்டை முனியப்பனை வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
### 6. தல வரலாறு:
பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தார்கள் ஆட்சிக் காலத்தில் எப்படி பிரதிஷ்டை செய்தார்களோ அப்படியே மாறாமல் இருக்கிறது கோவில் தோற்றம் மற்றும் அமைப்பு. அதைப்போலவே அந்தப் பகுதி மக்கள் கோட்டை முனியப்பசாமி மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் இன்றளவும் மாறாமலிருக்கிறது. கோவில் எழுந்த காலம் எவருக்கும் தெரியவில்லை. என்றாலும் மன்னரின் கனவில் வந்த முனியப்பன் தனக்கு ஒரு இடம் தருமாறும், ஊருக்கே நான் காவலாக இருப்பதாகச் சொன்னதுமான செவிவழிக்கதை மட்டும் பலருக்கும் தெரிந்திருக்கிறது.
### 7. தல பெருமை:
இந்த ஊரில் எந்த வீட்டில் விசேஷம் நடந்தாலும் முதல் மரியாதை முனியப்பசாமிக்குத் தான். அவர் உத்தரவு தந்த பின்பு தான் காரியத்தை துவங்குகிறார்கள். அந்த ஊரில் குழந்தை பிறந்தவுடன் முனியப்ப சாமியின் பெயரையே முதலில் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு முதல் முடியிறக்குவது முனியப்ப சுவாமிக்குத்தான். வருடத்திற்கு ஒரு முறை ஊரில் அனைவரும் ஒன்றுகூடி திருவிழா நடத்துகிறார்கள். திருவிழாவின் போது பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். கோட்டை முனியப்பருக்கு கோட்டை ஏதும் இல்லாவிட்டாலும் சிறு கோவிலில் அமைந்திருப்பதே ஊருக்கு கோட்டை அமைந்தது போல் காவலாக உள்ளது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
### 8. நேர்த்திக்கடன்:
திருவிழாவின் போது பால்குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் மற்றும் கெடா வெட்டியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
### 9. கோவில் முகவரி:
அருள்மிகு கோட்டை முனியப்பன் திருக்கோவில்,
அரியலூர்,
அரியலூர்,
தமிழ்நாடு - 621704.
### 10. செல்லும் வழி:
அரியலூர் மாவட்டத்தில், பிரதான பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிர்மலா பள்ளி நிறுத்தத்தின் அருகே வெட்ட வெளியில், கோட்டை முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.
முடிவாக
'அரியலூர் - அருள்மிகு கோட்டை முனியப்பனை' வழிபட்டு, நாம் வாழ்வில் நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டி, இத்துடன் நிறுத்திக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
தொகுப்பு மற்றும் ஆக்கம்/-
பாவலன் பாரத்
அரியலூர்.