tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் சிந்தாமணி சொக்கலிங்க சாமி மீனாட்சி அம்மன் சிறப்புகள்

எங்கள் குலதெய்வம் சிந்தாமணி சொக்கலிங்க சாமி  மீனாட்சி அம்மன் சிறப்புகள்

எங்கள் குலதெய்வம் தென்காசி மாவட்டம், சிந்தாமணியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு சொக்கலிங்க சுவாமி-மீனாட்சி அம்பாள் கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

மதுரை- குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இரண்டு பகுதிகளாக காணப்படும் இக்கோவிலின் தெற்கில் மீனாட்சியம்மன் கோவிலும், வடக்கில் சொக்கலிங்கசுவாமி கோவிலும் உள்ளன. 

 

  இரண்டு பகுதிகளிலும் தனித்தனி கர்ப்பக்கிரஹம், அர்த்தமண்டபங்கள், மாமண்டபங்கள், மணி மண்டபங்கள், கொடிமர மண்டபங்கள் என ஐந்து பிரிவுகளாக உள்ளன. சுவாமி சந்நிதியின் மேற்கில் ஆறுமுகநயினார் சன்னதி அமைந்துள்ளது.

மதுரையை ஆண்டு கொண்டிருந்த பூலியன் என்ற மன்னன் வேட்டையாடுவதற்காக இந்தப்பகுதிக்கு (தற்போது புளியங்குடி என அழைக்கப்படுகின்ற ஊர்) வந்தாராம். அப்போது இந்தப் பகுதியில் நிறைந்திருந்த புளியமரக்காட்டினை அழித்து பெரிய நகரை உருவாக்கி அந்த நகருக்கு புளியங்குடி என பெயரிட்டு அங்கு தங்கினாராம். 

 

  நாள்தோறும் சொக்கலிங்கசுவாமியை வணங்கும் வழக்கமுடைய மன்னனின் கனவில் மதுரையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சொக்கலிங்கசுவாமி தோன்றி புளியங்குடிக்கு கிழக்கே சிந்தாமணி என்ற நகரை அமைத்து அங்கு சொக்கலிங்கசுவாமி-மீனாட்சி அம்பாள் திருக்கோவிலை கட்டி தினமும் வழிபடும்படி கூறினாராம்.

 

 

 

  இதனையடுத்தே பாண்டிய மன்னன் சிந்தாமணி நகரை அமைத்து கோவிலை கட்டியதாக புளியங்குடி தல புராணம் பாடிய முத்துவிடுக்கவிராயரின் பாடல்கள் கூறுகின்றன.

 

 

 

  எனவேதான், இக்கோவிலின் அமைப்பு மதுரை மீனாட்சி அம்மனின் கோவில் போன்ற அமைப்பை பெற்றுள்ளது. மதுரையில் அம்மன் சந்நிதிக்கு எதிரே பொற்றாமரைக் குளம் உள்ளது போல் இங்கும் உள்ளது. 

 

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தின் அமைப்பு வியப்பானதாகும். இங்கு சிவனை விட்டு ஆவுடையாரை பிரிக்க முடியாது. ஆவுடையாரை வேறாக எடுக்க நினைத்தால் எப்பக்கத்தில் திருப்பினாலும் கர்ப்பக்கிரஹ சுவர்களில் தட்டிக் கொள்ளும் அமைப்பில் இது உள்ளது.

 

 

 

  இக்கோவிலில் எழுந்தருளியுள்ள சுவாமி-அம்மனை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. தினந்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வரும் இக்கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும். 

 

இது தவிர சூரசம்ஹாரம், சஷ்டிவிழாக்கள், பிரதோஷம், சங்கடஹரசது ர்த்தி, பெüர்ணமி விளக்குப்பூஜை,மஹா சிவராத்திரி,அஷ்டமி பூஜை, ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்டவை விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. 

 

பல்வேறு சிறப்புகளையுடைய எங்கள் குலதெய்வம் சிந்தாமணி சொக்கலிங்க சுவாமி -மீனாட்சி அம்மனை அனைவரும் வழிபட்டு அருள் பெற வேண்டுகிறோம். 

 

  

புளியங்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் செல்ல முடியும். அல்லது சிந்தாமணி பேருந்து  நிலையத்திலிருந்து நடைபயணமாக செல்ல முடியும். சங்கரன்கோவில் வருபவர்கள் மிக எளிதாக சிந்தாமணிக்கு வர முடியும். 

 

  திருமணம் கைகூடாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.