tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் செஞ்சேரிமலை முருகன் சிறப்பு

எங்கள் குலதெய்வம் செஞ்சேரிமலை முருகன் சிறப்பு

 

"யாமிருக்க பயமேன்" என்ற பக்தி வாசகம் நம் கண்ணில் பட்டால் 

 அது முருகன் நேரில் வந்து நம்மை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவது 

 போல இருக்கும். ஒவ்வொருவர் வாழ்விலும் அப்படி ஒரு சம்பவம் 

 நிச்சயம் நிகழ்ந்திருக்கும். எல்லாம் அவனே என்ற நிலையில் இருப்பவர்கள் 

 இதற்கு சாட்சி. நாம் சோர்ந்திருக்கும் சமயங்களில் சுறுசுறுப்பு உண்டாக்கி 

 நம்மை இயல்பு நிலைக்கு கொண்டு வருபவன் அவன்தான். கார்த்திகை 

 மாதத்தில் கந்தன் குடிகொண்டு இருக்கும் மலை கோவில்களுக்கு சென்று வர 

 முடிவு செய்தேன். குறிப்பிட்ட தேதியில் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

 அதற்கு முதல் நாள் வயிறு கோளாறு காரணமாக உடல் சோர்வாக இருந்தது. சரி 

 பயணத்தை ஒத்தி வைக்கலாம் என்று அரைகுறை மனதோடு இருந்தேன். நேரம் 

 செல்ல செல்ல கோயிலுக்கு செல்வது பற்றிய சிந்தனையே சுற்றி சுற்றி வந்தது.

 யாமிருக்க பயமேன் என்று முருகன் எனது பயணத்தை முடிவு செய்தான்.

 அப்படி சென்ற ஒரு மலைக்கோயில் தான் கோவை மாவட்டத்தில் உள்ள 

 செஞ்சேரி மலை முருகன் கோயில் ஆகும். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 

 கோயில் இது. திருப்புகழில் அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளார்.

 

 

 செஞ்சேரிமலை கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ளது. கோவை மாவட்டம் 

பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் பயணித்தால் இந்த 

முருகன் கோயிலுக்கு செல்லலாம். தென்சேரிமலை என்ற பெயரும் இத்தலத்துக்கு உண்டு.

மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் ஏறி சென்றால் 

மலை உச்சியை அடையலாம். கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்தும் மலை 

உச்சியை அடையலாம். அதற்கு தனிப்பாதை உள்ளது.  

 

 

முருகப்பெருமான் சூரர்களை சம்ஹாரம் செய்ய செல்லும் முன்பு அன்னை பராசக்தி 

ஈசனிடம் 'நம் புதல்வன் சிறு பாலகன், சூரர்கள் மாயையில் வல்லவர்கள் ஆயிற்றே 

அவர்களை வெல்ல முருகனுக்கு பஞ்சாட்சரம் (நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்) 

உபதேசித்து அருளவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் முருகனிடம் 

தர்ப்பையும் கங்கையும் தோன்றும் இடமும், வேதங்கள் கடம்ப மரமாக காட்சி அளிக்கும் 

இடமும் அதன் அருகில் உள்ள சின்னமலையில் மகாவிஷ்ணு சிவ தீட்சை பெற்ற இடமும் 

கொண்ட மந்திரமலை என்னும் மலையில் (தென்சேரி மலை) என்னைக் குறித்து வழிபட 

அத்தலத்தில் மந்திர உபதேசம் செய்வதாக சொன்னார். முருகன் அவ்வாறே இத்தலத்திற்கு 

வந்து சிவபெருமானை ஆராதித்து தவம் புரிந்தார். மனம் மகிழ்ந்த ஈசனும் எதிரிகளை 

வெல்லக்கூடிய மந்திரங்களை உபதேசம் செய்து பதினோரு ருத்ரர்களை பதினோரு 

ஆயுதங்களாக மாற்றி சூரனை வெற்றி கொள்ள ஆசி வழங்கினார். மந்திர உபதேசம்

பெற்றதால் இத்தல முருகன் "மந்திரகிரி வேலாயுதசாமி" என்ற திருப்பெயர் பெற்றார்.  

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "மந்திர மாமலை மேயாய் போற்றி" என்று சிவபெருமானை 

குறிப்பிடுவது இத்தலத்தைதான். இதுதான் இத்தல வரலாறு. கந்தசஷ்டி கவசத்தில் வரும்

 "மந்திர வடிவேல் வருக வருக.." என்ற வரி இத்தல முருகனை குறிக்கிறது." 'செஞ்சேரி மலை'  

கண்டு நெஞ்சார துதிப்போர்க்கு அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா"-துணைவன் திரைப்படத்தில் 

இடம்பெற்ற 'மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே" பாடலில் இந்த மலை பற்றிய 

வரிகள் அமைந்திருக்கும். 

 

 

மலையடிவாரத்தில் வலது பக்கத்தில் சுமார் ஆறு அடி உயரத்தில் பாதவிநாயகரும் இடது 

பக்கத்தில் ஞான தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள். இந்த பாத விநாயகர் சன்னதியில் 

இருந்து மேலே செல்ல படிக்கட்டுகள் ஆரம்பமாகின்றன. இந்த பாதையில்தான் தல விருட்சமான 

கடம்ப மரம் தல தீர்த்தமான ஞான தீர்த்தம் உள்ளது. கங்கைக்கு நிகரான தீர்த்தம் இது. 

முருகப்பெருமானுக்கு பூஜை , அபிஷேகங்களுக்கு தீர்த்தம் இங்குதான் எடுக்கப்படுகிறது. 

 

 

மலை உச்சியை அடைந்ததும் அமைதியான சந்தோஷமான மன நிறைவு நமக்குள் ஏற்படும்.

கருவறையில் ஆறுமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் முருகப்பெருமான் 

வள்ளி தெய்வானையுடன் சக்திவேல் தாங்கி எட்டு திசைகளுக்கும் காவலாக காட்சியளிப்பதை காணலாம்.  

கருவறைக்கு எதிரில் மயில் வாகனம் அமைந்துள்ளது. மற்ற தலங்களில் சேவற் கொடியோடு 

காட்சியளிக்கும் முருகன் இங்கு சேவலை கையில் ஏந்தி இருப்பார். மகாவிஷ்ணு கையில் சிவ 

லிங்கத்துடன் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். 1 1/2 கிலோ மீட்டர் அளவில் மலையை சுற்றி 

கிரிவலப்பாதை அமைந்துள்ளது.

 

 

சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்றதாலும் நினைப்பவர்களை காப்பாற்றக்கூடிய வல்லமை பெற்றதாலும் 

மந் - நினைப்பவரை திர - காப்பாற்றக்கூடிய கிரி - மலை மந்திரகிரி என்று அழைக்கப்படுகிறது.

சிவதீட்சை யும் மந்திர உபதேசமும் பெற்று இத்தலத்தில் இருந்து சூரசம்ஹாரம் செய்ய முருகன் 

எழுந்தருளியதால் ஆதி படை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் போகர் 45 தினங்கள் 

பூஜித்து அஷ்டமாசித்திகளை பெற்றதாக கூறப்படுகிறது.  

 

 

இந்த மலைத் தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை, முனைவர் திரு.முத்துக்குமார் (DEAN N.G.M. COLLEGE POLLACHI)

அவர்கள் வழிகாட்டுதலோடு (GUIDE) திரு.இளங்கோவன் அவர்கள் (ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி 

செஞ்சேரிமலையடிப்பாளையம்) அக்டோபர் 2018 ஆண்டு சமர்ப்பித்துள்ளார். அதில் கி.பி. 1339 ஆண்டு 

கொங்கு நாட்டின் ஒரு பிரிவான வாரக்க நாட்டின் தலைவன் மெய்ஞான தேவன் இக்கோயிலை புதுப்பித்ததாகவும் மேற்படி நாடு 

ஹொய்சாள மன்னன் மூன்றாம் வீரவல்லாளன் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது என்றும் இந்த 

கல்வெட்டு ஆதாரம் 2008 ஆண்டு கும்பாபிஷே பணிகள் நடந்த போது அழிந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'சோழ பூர்வ பட்டயத்தில் (கொங்கு மண்டலத்தில் பல சமூக மக்கள் குடியேற்றத்தை பற்றி கூறும் ஆவணம்)

இந்த கோயில் கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் கிழமையன்று சத்ரு சம்ஹார திரி தசை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

எதிரிகளை நல்வழிப்படுத்தி அனைவருக்கும் அருளும் தன்மையே இந்த பூஜையின் சிறப்பு ஆகும்.

உடல்நலக்குறைவு, திருமணமாகதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், பூமி சம்பந்தமான பிரச்சனை 

உடையவர்கள் எதிரிகளால் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் வைத்து பூஜை 

செய்தால் நினைத்த காரியம் கைகூடும். 

 

 

இத்தலத்தில் பூ கேட்டல் என்ற சிறப்பு வழிபாடு உண்டு. முருகனின் வலது மற்றும் இடது கரங்களில் 

பூ வைத்து பூஜை செய்வார்கள். ஒரு காரியம் நடைபெறும் என்றால் வலது கையில் இருந்து பூ விழும்.

நடைபெறாது என்றால் இடது கையில் இருந்து பூ விழும். இருபுறமும் விழாமல் இருந்தால் அக்காரியம் 

தாமதமாக நடைபெறும் என்று பொருள்.

 

 

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க முருகப்பெருமான் சன்னதி முன்பு அவர்கள் நாக்கில் வேலால் 

மூல மந்திரம் எழுதி ஆசீர்வதிக்க குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மனநிலை சரி 

இல்லாதவர்கள் இங்கு வந்து 48 தினங்கள் கிரிவலம் வந்து ஞான தீர்த்தத்தில் நீராடி அர்த்தஜாம சந்தனத்தையும் 

எலுமிச்சம் பழத்தையும் நீரில் கலந்து உட்கொண்டு வர அவர்கள் குணமடைவார்கள்.

 

 

தினசரி நாலு கால பூஜை நடைபெறுகிறது. தைப்பூசம் பத்து நாட்கள் பிரம்மோத்சவமாக கொண்டாடப்பட்டு 

வருகிறது. ஆறாம் நாள் வள்ளி திருமணம் நடைபெறும். 10 ஆம் நாள் மகாவிஷ்ணுவுக்கு சிவதீட்சை 

அளித்ததை குறிக்கும் வண்ணமும் முருகனுக்கு மந்திர உபதேசம் செய்ததை குறிக்கும் வண்ணமும் 

நடராஜ பெருமானுடன் சின்னமலை சுந்தரராஜ பெருமாளும், மந்திரகிரி முருகப்பெருமானும் எழுந்தருளி 

தரிசனம் கொடுப்பார்கள். கந்தசஷ்டி உட்பட முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக 

கொண்டாடப்படுகிறது.

 

தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரையிலும் மாலை 4.00 இரவு 8.00 வரையிலும் நடை 

திறந்திருக்கும். மலை மேல் பூஜை சாமான்கள் விற்கும் கடை உள்ளது.

 

பல்லடத்தில் இருந்து செஞ்சேரிமலை செல்ல பேருந்து வசதி உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டி 

வழியாக செஞ்சேரிமலை வரலாம். காரில் பழனி சென்று விட்டு அங்கிருந்து இங்கு வர நினைப்பவர்கள் 

பழனி பொள்ளாச்சி சாலையில் மடத்துக்குளம் என்ற ஊர் வழியாக கோட்டமங்கலம், பெதப்பம்பட்டி 

கடந்து ஒரு மணி நேரத்தில் வந்து சேரலாம்.

 

-திருமாளம் எஸ். பழனிவேல்