தருமபுரி நகரின் மையத்தில் அமைந்துள்ளது கோட்டை. இந்த கோட்டையில்தான் ஶ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நுளம்பர் கட்டிய பல கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று. நாளடைவில் கோவில் பாழடைந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்றவாறு இல்லை.
வண்ணானைக் கும்பிட்டார் என்னும் சிவனடியார் இந்த ஆலயம் வந்துள்ளார். ஆலயம் பாழடைந்துள்ளதை பார்த்து வருந்திய அடியார் அதியமானிடம் குறையை தெரிவித்துள்ளார். அதியமானும் இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் வழிபாட்டுக்கு ஏற்றவாறு செய்துள்ளார்.
எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக இந்த மல்லிகார்ஜுனேஸ்வரரை துர்வாசர், காசியபவர், அகத்தியர், பரத்வாஜர், கவுசிகர் ஆகிய முனிவர்களும், இந்திரன், வருணன், எமன், நிருதி, அக்னி, வாயு, குபேரன், அஷ்ட பாலகர்கள், பஞ்ச பாண்டவர்கள், ஐராவதம் என்னும் வெள்ளை யானை, ராமர், யோக நரசிம்மர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் என ஒட்டுமொத்த தேவலோகமே இந்த சிவனை வழிபாடு செய்துள்ளனர்.
இங்கு மூலவராக மல்லிகார்ஜுனேஸ்வரரும், அம்பாளாக காமாட்சி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாக கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
ஒரு சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக சிவபெருமானே வேதியர் உருவத்தில் வந்து அவிர்பாகத்தை வாங்கிய சிறப்பு இந்த கோவிலுக்கு உள்ளது.
எல்லா சிவன் ஆலயத்திலும் லிங்கத்தின் ஆவுடையானது வட்ட வடிவில் இருக்கும். ஆனால் இங்குள்ள லிங்கத்தின் ஆவுடையானது சதுர வடிவில் இருப்பது சிறப்பாகும்.
இங்குள்ள லிங்கமானது 36 தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் பட்டைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த ஆலயத்திலும் இல்லாத மற்றொரு சிறப்பாக மூலவர் சன்னதிக்கு எதிராக இரண்டு தூண்கள் உள்ளன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு மெல்லிய துணியையோ விட்டால் மறுபுறம் எந்த தடையும் இல்லாமல் வந்துவிடுகிறது. அதாவது இந்த தூண்கள் தொங்கும் வகையில் உள்ளது. ஆனால் இந்த தூண்கள் பல டன் எடை உடையது. பூமியில் படாமல் தொங்கும் தூணில் ஆலயம் அமைந்திருப்பது ஆச்சர்யத்திலும் அதிசயமாக உள்ளது. இந்த தூணை ' தொங்கும் தூண்கள்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
ஆலய விதானத்தில் அஷ்டதிக் பாலகர்கள் வெவ்வேறு அமைப்பிலும் வடிவிலும் அமையப் பெற்றுள்ளது மற்றொரு சிறப்பாகும்.
கருவறை வாசலில் உள்ள கஜலட்சுமி உருவம் இருபுறமும் மாறுபட்ட உருவில் நீர் சொரியும் முறையில் உள்ளது.
இங்குள்ள முருகனும் வித்தியாசமான முறையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதாவது சபரிமலை ஐயப்பன் போல குந்தணமிட்ட நிலையில் மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். மயிலின் வாயிலும் முருகனின் திருவடிகளிலும் நாகம் காணப்படுகின்றன.
இங்குள்ள விநாயகப்பெருமானும் அவரின் வாகனமான மூஞ்சுறு எலியும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையாக காட்சியளிக்கிறது.
இங்குள்ள காமாட்சி அம்மன் சன்னதி ஶ்ரீசக்கரத்தின் மேலேயே எழுப்பப்பட்டுள்ளது.
18 படிகள் அமைத்து அதன் மேல் அம்மன் வீற்றிருக்கிறார். மேலும் இந்த சன்னதியை 15 யானைகள் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நீர் தெளித்து வேண்டிக்கொண்டால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஆலயத்தை ஒரு முறை சுற்றி வந்தால் ராமாயணம் கண் முன் கொண்டு வரும்படி சித்திரங்களும் காவியங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த கோட்டை கோவிலில் எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு வந்து வழிபாடு செய்தால் எம பயம் நீங்கும்.
எருமை தலையின் மேல் ராஜதுர்க்கை அமர்ந்துள்ளார். இந்த துர்க்கைக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தருமபுரி நகரத்தின் மையத்தில் கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தை ஒரு முறையேனும் தரிசனம் செய்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.
- வெ.ராஜம்மாள்,
கீரைப்பட்டி, அரூர்.