தீபாவளியை அனைவரும் கோலாகலமாக கொண்டாடி முடித்ததும்
அடுத்து வருவது 'கந்த சஷ்டி' திருவிழா ஆகும். அனைத்து முருகன்
தலங்களிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். சூரனை
வதம் செய்த திருச்செந்தூர் நோக்கி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக
செல்வார்கள். கந்த சஷ்டி என்றாலே 'துதிப்போர்க்கு வல்வினை போம்
துன்பம் போம்..' -சூலமங்கலம் சகோதரிகளின் பாடல் காதில் ஒலிக்கும்.
கந்த சஷ்டி அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. முருகனை தமிழ் கடவுள் என்று
அழைப்பது வழக்கம்.
"பழம் நீ அப்பா...ஞானப்பழம் நீ அப்பா...
தமிழ் ஞானப்பழம் நீ அப்பா..."
தனது கம்பீரமான குரலில் ஔவையாராக வரும் கே.பி.எஸ். அவர்கள்
பாடும் போது நமக்குள் பக்திப் பரவசம் ஏற்படும். உடனே வேலவனை
அறுபடை வீடுகளில் ஒன்றில் தரிசிக்க எண்ணம் மேலோங்கும். அந்த
பாடலின் இறுதியில்
"உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமையுண்டு..." - என்ற வரிகளை கேட்கும் போது மெய்சிலிர்க்கும்.
உரிமையோடு இறைவனை கண்டிக்கும் அந்த மூதாட்டியை நினைக்க
நினைக்க பெருமையாக இருக்கும்.
அறுபடை வீடுகளைத் தாண்டி வேறு சில முருகன் தலங்கள் இருக்கின்றன.
அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவை.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் ஏழு கி மீ தொலைவில்
உள்ளது 'திருவிடைக்கழி' என்ற ஊர். இங்கு புகழ்பெற்ற முருகன் கோயில்
உள்ளது. திருப்புகழில் அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றிப் பாடியுள்ளார்.
திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் மற்றும் அவனது தம்பிகளோடு போர் நடத்திய
நாட்களே சஷ்டி விரத நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சூரபத்மனோடு
நடந்த போரில் அவன் இறக்கும் தருவாயில் அவனது உடலின் ஒரு பகுதி மயிலாகவும்
இன்னொரு பகுதி சேவலாகவும் மாற, அவைகள் முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும்
திகழ வேண்டும் என்று அவன் வரம் கேட்க, கேட்டதைக் கொடுத்தார் முருகன். சூரபத்மனின்
மகனான இரண்யாசுரன் முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் மீன் வடிவம்
எடுத்து ஒளிந்து கொண்டான். அன்னை பராசக்தியின் அருளால் அவனையும் முருகன்
வதம் செய்தார். சிவபக்தனான அவனை கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது.
அந்த பாவத்தை அவர் போக்கிய இடம்தான் 'திருவிடைக்கழி'. இத்தலத்தில் இருக்கும்
குரா மரத்தடியில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இக்கோயிலின் தலவிருட்சம்
குரா மரம். முருகனுக்கு உகந்த மரம் இந்த குரா மரம். இந்த அரிய வகை மரம்
திருவிடைக்கழி மற்றும் பழனி போன்ற சில தலங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
மலைகளில் மட்டுமே காணப்படும் இந்த மரம் திருவிடைக்கழியில் சம தளமான
மண்ணில் வளர்ந்து தலவிருட்சமாக இருப்பது என்பது சிறப்பு.
சங்க இலக்கியங்களான நற்றிணை மற்றும் ஐங்குறுநூறில் இந்த மரம்
பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த மரத்தின் பூக்கள் மணம் மிக்கது. இத்தலத்திற்கு
'திருக்குராவடி' என்ற பெயரும் உண்டு . முருகனுக்கு ' திருக்குராத்துடையார்' என்ற
பெயரும் வந்தது என்று கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.தினமும் அர்த்தஜாம பூஜையின்
போது முருகன் பூஜித்த இந்த குரா மரத்தடி சிவலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும்.
இந்த குரா மரத்திற்கு அருகில் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இத்தலம் வந்து முருகனை தரிசித்தால்
பாவம் நீங்கும்.
திருமணத்தில் பெண் பார்க்கும் படலம் முக்கியமானது. அதற்கு அடுத்ததாக
மிக மிக முக்கியமானது நிச்சயதார்த்தம். இந்த பெண்ணுக்கும் இந்த ஆணுக்கும் இந்த தேதியில் இந்த
இடத்தில் திருமணம் என்று நிச்சயிக்கப்படும். முருகனை மண முடிக்க தெய்வானை தவமிருந்த தலம்
இது. முருகனுக்கும் தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது இந்த ஊரில்தான்.
"தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்"
என்று பெங்களூர் ரமணி அம்மாள் பாடியது காதில் ஒலிக்கிறதா...?அந்த திருப்பரங்குன்றம்
செல்ல தெய்வானை முருகனிடம் விடை பெற்று சென்றதால் இத்தலம் 'விடைக்கழி என்று அழைக்கப்படுகிறது.
பட்டினத்தாரிடம் தலைமை கணக்கராக பணியாற்றியவர் சேந்தனார். அவர் பிறந்தது
திருநாங்கூர் என்ற ஊரில் . சிறந்த சிவ பக்தர். திருவாதிரையின் போது
ஓடாது சிக்கி நின்ற தேரை 'திருப்பல்லாண்டு' பாடி ஓட வைத்தவர். திருவிசைப்பாவில் திருவிடைக்கழி
தலம் பற்றி பாடியுள்ளார். இந்த ஊரில் ஒரு மடத்தை நிறுவி முருகனை வழிபட்டு வந்தார்.
தைப்பூச நாளில் முக்தி அடைந்ததாக வரலாறு சொல்கிறது.
முருகன் மற்றும் சிவபெருமான் இருவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்புரியும்
அற்புத தலம் இது. முருகன் தியானம் செய்த குரா மரத்தடியில் அமர்ந்து ராகு பகவான்
முருகனை வழிபட்டு இருக்கிறார். ஆதலால் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் ராகு தோஷம்
நீங்கும். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லாததால் முருகனே நவ நாயகராக
இருந்து அருள் பாலிக்கிறார். அவரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகி விடும்
என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் தெய்வானையை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
இங்கு தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி உட்பட முக்கிய விழாக்கள்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மயிலாடுதுறையில் இருந்து திருவிடைக்கழி செல்ல A 31 என்ற நகரப்பேருந்து உள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி
வரையிலும் நடை திறந்திருக்கும்.
"கந்தனிடம் செல்லுங்கள்...என்ன வேண்டும் சொல்லுங்கள்...வந்த வினை தீர்ந்து விடும்.
மற்றவற்றை தள்ளுங்கள்." -கந்த சஷ்டியில் அவன் திருவருளைப் பெறுங்கள்.
===
-திருமாளம் எஸ். பழனிவேல்