tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் திற்பரப்பு மகாதேவர் சிறப்புகள்

எங்கள் குலதெய்வம் திற்பரப்பு மகாதேவர் சிறப்புகள்

எங்கள் குலதெய்வம் திற்பரப்பு மகாதேவர் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம் ஆகும் .மூலவர் பெயர் வீரபத்திரர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரண்டு ஆலயங்களில் இது மூன்றாவது ஆலயம். குமரிக் குற்றாலம்' என்று திற்பரப்பு அருவி அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக்காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.கோவிலின் மூலவர் வீரபத்திரர் லிங்க வடிவில் உள்ளார். ஜடாதரர் என்றும் மகாதேவர் என்றும் அழைக்கபடுகிறார். மூலவர் வழக்கத்துக்கு மாறாக மேற்கு நோக்கி இருக்கிறார். நந்தி மூலவருக்கு நேர் எதிரில் அமராமல் சற்று விலகி உள்ளது.. கோதை ஆற்றின் கரையில் திற்பரப்பு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 13 கி.மீ. ஓடி வந்து இங்கு 15 மீ உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. மார்த்தாண்டத்திலிருந்து 18 கி.மீ. வடக்கில் திருவட்டாறு – களியல் சாலையில் உள்ளது. கோதை ஆற்றின் கரையில் அருவிக்கு தெற்கில் ஆலயம் உள்ளது. மகாதேவர் கோயிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இந்தக் குகை கோயிலுக்கு பாதை உள்ளது எனவும் இந்த குகைக் கோவிலின் உள்ளே பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

 

 

திற்பரப்பு சிவன் கோவில் இரண்டு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் உள்ளது. நான்குபுறமும் 4.50 மீ கருங்கல் மதிலால் சூழ்ந்துள்ளது. நான்கு புறமும் வாசல்கள் உண்டு. மேற்கு வாசலில் மணிமண்டபம் உள்ளது. 

 

மேற்கு பிராகாரதில் உள்ள சாஸ்தா கோவிலில் 1995-ல் நிறுவப்பட்ட 16 மீ. உயரமுள்ள செப்புக் கொடிமரம் உள்ளது. தென்மேற்கில் சிறிய சாஸ்தா கோவில் உள்ளது. சாஸ்தா பூரணை மற்றும் புஷ்கலையுடன் சுகாசனத்தில் உள்ளார். 

 

உள்ளே இருக்கும் கிருஷ்ணன் கோவில் பிராகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோயில், முருகன் கோயில், மணமேடை ஆகியவை உள்ளன. கிருஷ்ணன் கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். எதிரில் முருகன் கோயில் உள்ளது. 

 

கிழக்கு வெளி பிராகாரதின் வாசலில் 8 தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இவ்வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 

 

தெற்குப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர் பெயரில் பரிவார கோவில் உள்ளது. இக்கோயிலின் பொதிகை கட்டுமானத்தை கொண்டு இது 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது . 

 

இக்கோவிலில் நிர்மால்ய தரிசனம், உஷா பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை, அத்தாழ பூஜைகள் உண்டு. மேலும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு சடங்குகளும் உண்டு. 

 

இக்கோவிலின் திருவிழா பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் கொடிஏற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். மூன்றாம் திருவிழாவில் கலச பூஜையும் முளையடி பூஜையும் நிகழும். ஆறாம் திருவிழாவில் வட்டதீபம் நிகழ்ச்சியும் இரவில் கதகளியும் நடக்கும். எட்டாம் நாள் தாரை பூஜையும் ஒன்பதாம் நாள் பன்றி வேட்டையும் நடைபெறும். இவ்விருநாட்களில் மேள தாளாங்களுடன் யானை ஊர்வலம் உண்டு. பத்தாம் நாள் ஆறாட்டு நிகழ்ச்சி அரவங்காடு காணிக்காரர்கள் மற்றும் மலையர்களின் பங்களிப்புடன் நடைபெறும்.

திற்பரப்பு சிவன் கோவிலுக்கு எழுத்து வடிவில் தலபுராணம் இல்லை. சிவ புராணம் சார்ந்த வாய்மொழிக் கதையே உள்ளது. 

சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக்கோவில் ஒரு கலைப்பொக்கிஷமாகும். கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது காலம், காலமாக நடைபெற்று வரும் சிறப்பான நிகழ்வாகும். 

 

திற்பரப்பில் மகாதேவர் கோவில் ஒரு மகாசிறப்பு என்றால், கோவிலின் அருகே திற்பரப்பு அருவிப்பகுதியில் மறைந்திருக்கும் காளி குகைக் கோவில் மற்றொரு சிறப்பு என்று உள்ளூர் மக்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். இங்கு ஒரு காளி குகைக் கோவில் அருவியின் உள்பகுதியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அருவியின் கீழ் பகுதியிலுள்ள கல்மண்டபத்தின் எதிரே பாறையில் தென்படும் இடைவெளி தான் குகையின் முகப்பு எனவும் கூறுகின்றனர். மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும் இந்த குகைக் கோவிலுக்கு பாதை உள்ளது எனவும், இந்தக் குகைக் கோவிலினுள் பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலில் நம்பூதிரிகள் தாந்திரீக பூஜைகள் செய்ததாகவும் செவிவழிச் செய்திகள் உலாவுகின்றன. 

 

சிவனின் பேச்சை மதிக்காமல் பார்வதி தட்சனின் யாகத்துக்கு செல்கிறாள். சிவன் தனது அம்சமான வீரபத்திரனை அனுப்புகிறான். தட்சனின் யாகத்தை அழித்து ஆவேசமுடன் இருக்கும் வீரபத்திரன் அமைதியடைய வேண்டி நதியை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறான். காளியும் உடன் வந்து தியானத்தில் அமருகிறாள். 

 

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும் நதியை பார்க்க மேற்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார் வீரபத்திரர். மூலவர் மேற்கு நோக்கி இருப்பதற்கு இந்த தொன்மமே காரணமாக சொல்லப்படுகிறது. இத்தொன்மபடி நந்தி நதியை மறைக்காமல் இருக்கவே சற்று விலகி இருக்கிறது. 

 

தெற்கு பிராகாரத்தில் பத்திரகாளி கோயில், ஊட்டுப்புரை, ஒடுக்குப்புரை, சமயலறை ஆகியவை உள்ளன. 

 

மேற்கு வெளிப்பிராகாரத்தில் கிழக்கு நோக்கி ஜுரதேவர் ஆலயம் உள்ளது. முன்மண்டபம் ஒன்று இருபுறம் பெரிய திண்ணைகளுடன் 20 தூண்களுடன் உள்ளது. தூண்களில் சிற்பங்கள் உள்ளன. முன்மண்டபத்தின் வழிப்பாதையில் பலிபீடமும் வாடாவிளக்கும் உள்ளன. தென்புற திண்ணையில் கிழக்கு நோக்கி பார்வதி கோயில் உள்ளது. வடக்குத் திண்ணையில் விநாயகர் கோயிலும் விளக்கு மண்டபம் செல்ல திட்டிவாசலும் உள்ளன. 

 

முன்மண்டபத்தை அடுத்து வாத்திய மண்டபமும் இரண்டு பக்கங்களிலும் சிறு மண்டபங்களும் உள்ளன. இந்த மண்டப தூண்களில் சைவ மரபை ஒட்டிய வேலைப்பாடில்லாத துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மேலும் கிருஷ்ணன், ஆஞ்சநேயர், விநாயகர், நின்ற கோலத்தில் தேவி சிற்பங்களும் உள்ளன. 

 

வாத்திய மண்டபத்தை அடுத்து 16 தூண்கள் கொண்ட பூஜா மண்டபம் உள்ளது. பூஜா மண்டபம் கேரள ஓட்டுப் பாணியால் ஆனது. மேல்கூரையில் மரத்தாலான நவக்கிரக உருவங்கள் உள்ளன. இதன் எதிரே கருவறை உள்ளது. 

 

பூஜா மண்டபம் மற்றும் கருவறையை சுற்றி 23 தூண்களை கொண்ட திருச்சுற்று மண்டபம் உள்ளது. மண்டபத்தின் தென்பகுதியில் இருந்து வெளிபிராகாரம் செல்ல திட்டிவாசல் உள்ளது. மண்டபத்தின் பிறபகுதிகளில் சிறிய அறைகள் உள்ளன. தென்மேற்கில் உள்ள ஒரு அறையில் அருவி அருகே உள்ள குகைக்கு செல்லும் பாதை உள்ளது. 

 

திருச்சுற்று மண்டபத்திற்கும் பூஜா மண்டபத்திற்கும் தரைமட்ட அளவில் நந்தி உள்ளது. 

 

கோவில் வட்ட வடிவில் உள்ளது. கூம்பு வடிவ விமானம் செப்புத்தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. விமானத்தின் உட்புறம் செவ்வக வடிவில் உள்ளது. கூரையில் மூன்று கும்பங்கள் உள்ளன. 13 நாக சிற்பங்கள் காணப்படுகின்றன. and 

 

ரா.பே.பொன்சரவணகுருசெங்கோட்டை