எங்கள் குலதெய்வம் பச்சைமலை கோவில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ளது. கோபி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உள்ளதால், கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். கோவிலுக்கு மேலே செல்ல மலை பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் 40 கிமீதொலைவில் உள்ளது.
நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை ( மரகதாச்சலம்/ மரகதகிரி) என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான்.
பச்சைமலை மூலவர் பால தண்டயுதபாணியாகக் காட்சி தருகிறார். பச்சைமலை மூலவரின் புன்னகை சிறப்பு. பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. இங்கு மூலவருக்கு ஸ்வர்ணபந்தனம் செய்யப்பட்டுள்ளது.பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம்.
ராஜன் சர்மா
பழையபாளையம்