சாமுண்டீஸ்வரி சப்த கன்னியர்களில் ஒருவர். ருத்திரனின் அம்சமாவார். இவர் வெற்றி தேவதை. எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளஇவரை வழிபட வேண்டும்.
முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்த திருநெல்வேலியில் வசுசேனன் என்ற மன்னன் இருந்தான். நீண்ட நாட்களாக குழந்தை கிடையாது. ஒரு நாள் தன் மனைவியோடு சென்று சிவபெருமானிடம் கண்ணீர் விட்டு தங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டிக்கொண்டான்.
கருணை வடிவான அன்னை பார்வதி தேவி இறைவனிடம்
பிள்ளையில்லா அந்த தம்பதியருக்கு அருள கேட்டுக்கொண்டாள்.புத்திரப்பேறு யாவர்க்கும் எளிதில் கிடைப்பதன்று. அந்த நல்வினை இல்லாமல் இவர்களுக்கு கொடுப்பது விதி அல்ல என்று சிவபெருமான் பார்வதியிடம் சொன்னார். மீண்டும் அன்னை வலியுறுத்தவே, 'சரி நீ புத்திரியாக அவதாரம் செய் நாமே வந்து உன்னை மணந்து அருளுவோம். உமக்கு பணிவிடை செய்ய சப்த மாந்தர்களுள் சிறந்த சாமுண்டி இருக்கட்டும் என்று அருளினார்.
ஒரு நாள் அரசனும் அரசியும் தாமிரபரணியில் நீராடும் போது தாமரைப் பூவில் சங்குருவாக தோன்றினாள் அம்பிகை. அரசன் அதைக் கையிலேந்தி கரையேற அது ஒரு அற்புதமான பெண் குழந்தையாகக் கண்டான். பின்னர் மனைவியிடம் கொடுத்தான். இருவரும் சிவன் சன்னதிக்கு எடுத்து சென்று ஈசனுக்கு நன்றி சொல்லி விட்டு குழந்தையோடு அரண்மனைக்கு சென்று 'ராஜ ராஜேஸ்வரி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.சாமுண்டியும் ஒரு செவிலித் தாயாக வந்து குழந்தையை வளர்த்து வந்தாள்.
குழந்தையாக வந்த அம்பிகை எல்லா கலைகளையும் கற்று நன்றாக வளர ஆரம்பித்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கினாள். யாராலும் அவளை ஜெயிக்க முடியவில்லை. குறிப்பிட்ட வயது வந்ததும் மகளுக்கு தகுந்த மணவாளனை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கவலை பெற்றோருக்கு வந்தது. சதுரங்கத்தில் வெல்பவன் தங்கள் மகளுக்கு மாலை சூடுவான் என்று அறிவித்தார்கள். யாராலும் வெல்ல முடியவில்லை. கவலையில் ஆழ்ந்த மன்னனை ஒரு தவசி வந்து சந்தித்து சிவதல யாத்திரை செல்லுங்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும் என்று சொன்னார். அதன்படி தனது குடும்பத்துடன் பல தலங்களுக்கு சென்று கடைசியாக பூவனூர் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்கள்.அப்போது சித்த வேடத்தில் வந்த எம்பெருமான் தான் ராஜ ராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆட வந்திருப்பதாக சொன்னார். பின்னர் அவளோடு சதுரங்கம் ஆடி அம்பிகையை தோற்கடித்தார். என்ன செய்வது என்று திகைத்து நின்ற மன்னன் முன்பு சிவபெருமான் காட்சியளித்து அனைத்தையும் சொல்ல, மகிழ்ந்த மன்னன் அறிவித்தபடி திருமணம் நடத்தி வைத்தார். அம்பிகையை சதுரங்கத்தில் வென்றதால் இறைவன் சதுரங்க வல்லபநாதர்ஆனார். ராஜ ராஜேஸ்வரி அம்பிகையாக செவிலித் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கு தனி சந்நிதி உருவானது. இதுதான் பூவனூர் சாமுண்டீஸ்வரி வரலாறு.
இந்த கோயிலில் சாமுண்டீஸ்வரி சுவாமி சன்னதிக்கு எதிரில் வடக்கு முகமாக இருந்து தனி கோயிலாக அமைந்து விளங்குகிறது. சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் அம்பாள் குடிகொண்டுஇருக்கும் கோயில்கள் அரிது. புராதனமான சாமுண்டீஸ்வரி கோயில் தமிழகத்தில் உள்ளது இங்கு மட்டும்தான்.
இந்த அம்மன் விசேஷ சக்தி கொண்டவள். இங்கு பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனை 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமணத் தடை, புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.
எலிக்கடி, பிற விஷக் கடிகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப் படுபவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். இத்தலத்தில் தான் அகத்தியர் போகருக்கு விஷக்கடிக்கான மூலிகை சிகிச்சை முறைகளை போதித்துள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகத்தியர் பெருமானின் ஆசியோடு சாமுண்டீஸ்வரி சந்நிதி முன்பு மூலிகை வேர் ரட்சை கட்டப்படுகின்றது.
சாமுண்டீஸ்வரியை குலதெய்வமாக கொண்டவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ளனர். மேல் நாடுகளிலும் உள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் காது குத்தல் வைபவங்களை இங்கு வந்து நடத்தி செல்கின்றனர்.சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். கன்னி பொங்கல் அன்று கன்னி கப்பரை என்ற விழா நடைபெறும்.
மாதாமாதம் பௌர்ணமி பூஜை சாமுண்டீஸ்வரி சந்நிதி முன்பு நடைபெறும். கடம் வைத்து யாகம் நடத்துவார்கள். அதன் பிறகு கடம் கோவிலை வலம் வரும். அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு பூஜை செய்வார்கள். பெளர்ணமி ஒரு அற்புதமான நாள் அந்த நாளில் அம்பாள் வழிபாடு செய்வது நல்லது. அதுவும் சாமுண்டீஸ்வரி வழிபாடு இன்னும் சிறப்பு. தீய சக்திகள் அனைத்தும் நம்மை விட்டு விலகும். நம் சங்கடங்கள் தீர்ந்து வாழ்க்கை பிரகாசமாகும்.
===
-திருமாளம் எஸ்.பழனிவேல்