tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் பொதுவுடையார் ++++++++++++++++ கோவில்

எங்கள் குலதெய்வம்  பொதுவுடையார்  ++++++++++++++++  கோவில்

 

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 12 கி. மீ.தூரத்திலும், அதிராம்பட்டினத்திலிருந்து 5 கி. மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோவில்.

      இந்தக் கோவிலில்,புளிய மரத்தின் கீழ் தவம் புரிந்து வந்த வான்கோபர்,மகாகோபர் என்ற முனிவர்களுக்கு " இல்லறம் சிறந்ததா ? அல்லது துறவறம் சிறந்ததா? என்ற சந்தேகம் வந்தது.இறைவன், அவர்கள் முன் தோன்றி, " இல்லறமாயினும், துறவதுறவறமாயினும், நல்லறமாக இருந்தால், இரண்டுமே சிறப்பு " என்று கூறி, அங்கிருந்த வெள்ளால மரத்தில் ஐக்கியமானார் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.பொதுவான தீர்ப்பு சொன்னதால்,தமிழில் பொதுவுடையார் என்றும், வடமொழியில், மத்தியபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.எனவே இது குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

  வான்கோபர் அலங்காரத்துடனும், மகாகோபர் துறவிக் கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் வீற்றிருக்கின்றனர்.

    ஸ்தல விருக்ஷமாகக் கருதப்படும் வெள்ளால மரத்தைச் சுற்றிக் கருவறைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.சுவர்களுக்கு உட்பட்டப் பகுதியேகருவறையாகவும்,ஆலமரமே சிவபெருமானாகவும் 

விளங்குகின்றன.

     சிவபெருமானே ஆலமரத்தின் வடிவில் தோன்றி , பக்தர்களுக்கு அருட்காட்சி தருகிறார். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும்.

      ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனம் பூசி,அதன்மேல் வெள்ளியிலான நெற்றிப்பட்டம், கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பட்டு, திருவாசி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.எதிரே மரத்தைச் சார்ந்து ஒரு முகப்பு மேடை உள்ளது.அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் உள்ளன.

    இந்தக் கோவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவு 12 மணிக்குத் திறக்கப்பட்டு, விடியற்காலை 4 மணி வரை திறந்திருக்கும்.  

மற்ற நாட்களில் , பூட்டிய கதவிற்குத்தான் பூஜை. ஸ்வாமிக்கு அம்பாள் கிடையாது.

தைப் பொங்கல் அன்று மட்டும் ,அதிகாலை முதல் மாலை 7 மணி வரையில் நடை திறந்திருக்கும்.அன்று ஸ்வாமியின் மேல் சூரிய ஒளி விழுவது அற்புதம்.

  சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன்,துர்க்கை ,நடராஜர், பைரவர் என எல்லாப்பரிவார மூர்த்திகளும் கோவிலுக்கு வெளியே உள்ளனர். வீரசக்தி விநாயகர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

  இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு ஆலிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த இலையை வீட்டில் வைத்திருந்தால்,ஐஸ்வர்யம் பெருகும் என்றும்,நிலத்தில் போட்டால், விளைச்சல் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

   மாடுகளுக்கு கோமாரி போன்ற நோய்கள் தாக்கினால், பரக்கலக்கோட்டை பொதுவுடையாரை வேண்டினால், அவை பூரண நலம் பெறும்.பக்தர்கள் பலவித கோரிக்கைகளை முன் வைத்து வேண்டுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், அவர்கள் காணிக்கையாக தங்கள் நிலத்தில் 

விளைந்த நெல், உளுந்து, பயறு, ராகி, மிளகாய் போன்றவைகளை, அதற்குரிய பெட்டிகளில் சேர்க்கிறார்கள். பசு, ஆடு,கோழி முதலியவற்றைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.

பெண்கள் தங்கள் கூந்தல் நன்றாக வளர, தென்னம் விளக்குமாறு காணிக்கையாகத் தருகிறார்கள்.

    கார்த்திகை மாதம் நான்கு சோம வாரங்களும் மிகவும் விசேஷம்.அன்று நள்ளிரவில் , பொதுவுடையாருக்கு விசேஷ பூஜை நடத்தப்படும்.

தஞ்சை , நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பல ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் விடிய,விடிய இயக்கப்படும். பட்டுக்கோட்டையிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு பஸ் கிளம்பும்.

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்திருக்கிறார்.

          V.VENKATARAMAN, 

SECUNDERABAD.