tamilnadu epaper

துன்பங்கள் தீர்க்கும்... அனுமன் சாலீஸா

துன்பங்கள் தீர்க்கும்... அனுமன் சாலீஸா


அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடி யாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள்.


1. ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!

மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே!


2. ராமதூதனே! ஆற்றலின் நிறையே!

அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே!


3. மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!

தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே!


4. பொன் மேனியனே! பட்டாடை புனைவோனே!

ஒளிர்குண்டலமுடன் அலைமுடி கொண்டோனே!


5. இடி, கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!

மூஞ்சைப் பூணூல் தோளணிவோனே!


6. சிவனின் அம்சமே ! கேசரி மகனே!

உனதொளி வீரத்தை வணங்குது உலகே!


7. பேரறி வாளியே! நற்குண வாரியே!

ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!


8. தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!

ராமயிலக்குவ சீதையுன் மனவசம்!


9. நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!

கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!


10. அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டே

ராம காரியத்தை நலமுடன் முடித்தாய்


11. சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட

விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!


12. ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தே

பரதனைப் போல்நீ உடனுறை என்றார்!


13. ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்

பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!


14. சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்

ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்


15. காலன் குபேரன் திசைக் காவலரும்

கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ?


16. சுக்ரீவனுக்கு அரசை அளித்திட

ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!


17. உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்

அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!


18. தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே

சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!


19. வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே

ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!


20. உலகினில் முடியாக் காரியம் யாவையும்

நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!


21. ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!

நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!


22. உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!

காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்!


23. நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!

மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!


24. பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!

மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!


25. நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!

பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!


26. தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!

மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!


27. தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்

ராமனின் பணிகளை நீயே செய்தாய்!


28. வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!

அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!


29. நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!

நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!


30. ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!

தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!


31. எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்

கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!


32. ராம பக்தியின் சாரமே நின்னிடம்!

என்றும் அவனது சேவகன் நீயே!


33. நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!

தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!


34. வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!

ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!


35. மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்

அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!


36. துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!

வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே!


37. ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!

விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்!


38. நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ

அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்!


39. அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்

சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்!


40. அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்

அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே!

சங்கடம் நீக்கியே மங்களம் அருளும்

காற்றின் மைந்தனின் ரூபம்!

ராம யிலக்குவ சீதையுடனே

என்று மென்னுள்ளினில் வாழும்!


M. ராதாகிருஷ்ணன்,

அஞ்சல் துறை (ஓய்வு )

வளையம்பட்டு போஸ்ட்

வாணியம்பாடி -635751