tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் மூக்கனூர் ஶ்ரீ ஆதி ஶ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு:

எங்கள் குலதெய்வம் மூக்கனூர் ஶ்ரீ ஆதி ஶ்ரீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு:

தருமபுரியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மூக்கனூர் கிராமம். இந்த கிராமத்தில் ஶ்ரீ ஆதி ஶ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 

   பல்லவ வம்சத்தினரால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இது விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் வைஷ்ணவ பாரம்பரியத்தின் 108 அபிமான ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 

  விஷ்ணு மலை என்று போற்றப்படும் மூக்கனூர் மலை அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 

 

  விஷ்ணு வைகுண்டத்திற்கு சென்றபோது அங்கு பிருகு முனிவர் அவரை காண காத்திருந்தார். இதை கவனிக்காமல் விஷ்ணு சென்றதால் கோபமடைந்த பிருகு விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். பிறகு தவறை உணர்ந்த விஷ்ணு பிருகுவின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டார்.

 

   இதை பார்த்த லஷ்மிதேவி முனிவரின் மீது கோபம் கொண்டார். ஏனெனில் விஷ்ணுவின் மார்பில் லஷ்மிதேவி குடியிருந்தார். பிறகு வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்தார் லஷ்மிதேவி.

 

 வைகுண்டத்தில் இருந்த விஷ்ணுவும் பூமிக்கு வர எண்ணினார். தன்னுடைய பாதத்தை ஒரு மலையின் மீது வைத்தார். அதுதான் மூக்கனூர் மலை. விஷ்ணுவின் பாரம் தாங்காமல் மலையில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. மூக்கனூர் மலை மீது ஏறினால் விஷ்ணுவின் கால் தடத்தை தரிசிக்கலாம்.

 

   கீழே உள்ள ஆலயத்தில் ஶ்ரீ ஆதி ஶ்ரீனிவாச பெருமாள் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பத்மாவதி தாயாரும் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

 

   பத்மாவதி தாயாருக்கு முன்பாக நின்று லலிதா சஹஸ்ரநாமத்தை ஜெபித்தால் கேட்ட வரங்களை குறுகிய காலத்தில் தாயார் கொடுக்கின்றார். ஆழ்வார்களுக்கும் சன்னதிகள் உள்ளன.

 

   தினமும் ஆலயத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை தினத்தில் மட்டும் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக பசு, கன்றுகளை தானம் செய்கின்றார்கள். சில பக்தர்கள் துலாபாரத்தில் தானியங்களை தானம் செய்கின்றார்கள்.

 

   பிருகு மகரிஷி இந்த பெருமாளை வணங்கியதாகவும், ராமானுஜர் சிதம்பரத்தில் இருந்து மேல்கோட்டைக்கு செல்லும்போது வழியில் இந்த பெருமாளை தரிசனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

  மலையின் உச்சியில் மகாவிஷ்ணுவின் பாதம் இன்றளவும் உள்ளது. இந்த பாதத்தை தரிசிக்கவே மக்கள் கூட்டம் கூட்டமாக மலை ஏறுகின்றனர். மலையின் உச்சியில் வற்றாத குளம் ஒன்று உள்ளது. அதிகமான வெப்பம் நிலவிய காலத்திலும் இந்த குளம் வற்றாமல் இருக்கிறது.

 

   இதுமட்டுமல்லாமல் இந்த ஆலயத்தில் திருமணங்களும் நடைபெறுகிறது. பாவங்களை நீக்கி நல்வழிப்படுத்தும் ஶ்ரீ ஆதி ஶ்ரீனிவாச பெருமாளை வணங்குவோம்.. அவரின் அருளை பெருவோம்..!

 

     - வெ.ராஜம்மாள், கீரைப்பட்டி,

அரூர், தருமபுரி - 636903.