tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் வடக்கு வாசல்செல்வி சிறப்பு

எங்கள் குலதெய்வம் வடக்கு வாசல்செல்வி சிறப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கபாலிபாறை கிராமத்தில் ..முக்கூடல்-பொட்டல் புதூர் பிரதான சாலையில் அமையப்பெற்ற திருத்தலமே அருள்மிகு பநீ வடக்குவாச்செல்வி ஆலயமாகும்.

      அஷ்டக்காளியரில் ஆறாவது பிறப்பான செண்பகவல்லி என்கிற வடக்குவாசல் செல்வி..இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள்.

     கயிலாயமலையில் சிவபெருமான் வடக்கிலிருந்து தென்புறமாக வீற்றிருக்க..அவருடைய முகம் பார்க்கும் விதமாக தென்திசையிலிருந்து வடக்குமுகமாக வாசல் கொண்ட கோயிலில் அமர்ந்து அருள்பாளிப்பதால் இப்பெயரில் அம்பாள் அழைக்கப்படுகிறாள்.

    ஊரின் வடக்கு எல்லையில் அமர்ந்து காவல்தெய்வமாக காத்தருள்வதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

   கடையம்..பொட்டல்புதூர்சாலையின் தென்புறம் விசாலமான இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது..ஆலயத்துள் வடக்குவாச்செல்வி அருள்பாளிக்க..அவ்வாலய கட்டுமானத்திற்கு அருகில் மேல்புறம் வானணைய பிரமாண்டமாய் நிற்கும் அரசமரத்தின் அடியில் கிழக்கு முகமாக பீடத்தில் அமர்ந்து..கன்னி விநாயகர் திருக்கரம் உயர்த்தி ஆசிர்வதிக்கிறார்..அவருக்கும் பின்புறம் வடக்குபார்த்த சிறு சன்னதியில் அருள்பாளிப்பதோ..சப்தமாதாக்களில் ஒருவரும்..வடக்குவாச்செல்வியின் சகோதரியுமான தங்கம்மன்.அருகருகே உள்ள நீர்நிறைந்த கீழக்குளம்..கருங்குளம் ஆகியவற்றிலிருந்து மேலேரும் இதமான காற்று..அரசமர குளுமையோடு சேர்ந்து வழிப்போக்கர்களை டைல்ஸ் பதிக்கப்பட்ட..பலிபீடத்தை நடுநாயகமாக கொண்ட முன் மண்டபத்தில்..சற்றுநேரம் இளைப்பாற அழைக்கிறது.

 

   துர்க்கையின் அம்சம் என்பதால் இந்த வடக்குவாச்செல்வியை இராகுகாலத்தில் வழிபடுவதால் பலன்கள் அதிகமாக கிட்டும் என்பது நம்பிக்கை.

   இத்திருத்தலத்தில் வைகாசி மாதம் கடைசி செவ்வாயில் கால்நாட்டப்பட்டு..ஆனிமாதம் முதல் செவ்வாயில் கோவில் கொடைவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முதல்நாள் சிறப்பு ஆராதனையோடு தொடங்கும் விழா..இரவு முழுவதும் வில்லிசையாக வடக்குவாச்செல்வி வரலாறு..கொம்புமாடன்..தளவாய் மாடன்..சங்கிலிபூதத்தார்..வரலாறுகளும் இசைக்கப்படுகின்றன.

    கபாலிபாறை கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தென்கிழக்கே கோவில் கொண்டிருக்கும் முக்கூடல் முத்துமாலையம்மன் முன்பாக பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றிலிருந்து ..மங்கள வாத்தியங்கள் முழங்க..அருளாளர்கள் திருக்குடங்களில் நீர் தேற்றி சுமந்துவந்து..அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.பக்தர்கள் பால்காவடி..பன்னீர்காவடி முதலான வேண்டுதல்களை நிறைவேற்றியவுடன்..

..கணியன் கூத்து..மகுட இசையோடு மதிய கொடை நிறைவடைகிறது.

   மாலை மசண்ட நேரத்தில் ஊர்மக்கள் தங்கள் தலைவாசலில் கல் அடுப்பில்..பனையோலையை எரியூட்டி பொங்கல் வைக்கிறார்கள்.பொங்கள் வைத்த சாம்பல் கரி போன்றவற்றை தலைவாசலிலேயே கூட்டிப்பரப்பி..அதன் மேலேயே கோலமிட்டு..பொங்கலை படைக்கிறார்கள்.

   பின் மாலைக்கொடை வில்லிசையோடு தொடங்க..குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு செல்கிறார்கள்..பத்துமணியோடு வில்லிசை விடைபெற...நல்லிரவு வரை குறவன் குறத்தி ஆட்டமும்..கணியான் கூத்தும் உச்சம் பெறும்.

   சாமக்கொடை ஆரம்பித்து அம்பாள் சிறப்பு ஆராதனைக்கு பின்..உற்சவ சொரூபம்..சிம்மவாகினியாக..கண்கவர் அலங்காரத்தோடு அழகிய சம்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்க..வாணவேடிக்கை குறவன் குறத்தி ஆட்டத்துடன்..மேலதாள இசைப்பண்ணோடு..வீதியுலா செல்வாள் செல்லியம்மன்.

   இல்லங்கள்தோறும் தீபாராதணையை ஏற்று..அருள் மழையை அள்ளி வழங்கி ...விடிந்த பிறகே ஆலயம் திரும்புவாள் அன்னை.

    ஆனால் அதற்கு முன்பே பரிவார தெய்வங்களுக்கான கெடா வெட்டு முதலான சம்பிரதாய படையல்கள் நிறைவு பெற்றிருக்கும்.

    அம்மன் உற்சவமூர்த்தம் ஆலயத்துள் நிலைபெற்று...அபிஷேக ஆராதனை முடிவுற்ற பின்..கோவில் கொடைவிழாவை முன்நின்று நடத்தி சிறப்பித்தோர்.. அருளாளிகள்..ஊர் முக்கியஸ்தர்கள்..ஆகியோருக்கு மரியாதை செய்விக்கப்பட்ட பின்...வரிப்பிரகாரம் உபயதாரர்களுக்கு படைப்புச்சோறும்...வாழைப்பழம்..பாக்குவெற்றிலை...விபூதிகுங்குமம் அடங்கிய பிரசாத பையும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

   வருடம் தவறாமல் இத்திருவிழாவை அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையோடு நடத்திவருகின்றனர்..பாப்பாக்குடி காவல்துறையினரின் அறிவுறுத்தல்..மேற்பார்வையில்..கபாலிபாறை கிராம இளைஞர்கள் கட்டுக்கோப்பில் சிறப்பாக இக்கொடைவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

     சென்றவருடம் குடமுழுக்கு கண்ட இவ்வாலயத்தில்‌...வருடந்தோரும் நவராத்திரி விழா பத்துநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

   ஒவ்வொரு மாதம் மூன்றாம் செவ்வாய் சிறப்பு வழிபாடும்..குங்கும அபிஷேகமும் நடைபெறுகிறது.குறிப்பிட்ட பவுர்ணமி தினங்களில் விளக்கு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

   பல ஊர்கள்..பலதிசைகளில் பிழைப்புதேடி சென்று வாழும்...தன் பிள்ளைகளை...வடக்குபார்த்து அமர்ந்த நிலையில் அருள்பாளித்து இடர்நீக்கி இன்பமாய் வாழச்செய்வாள் வடக்குவாச்செல்வி..அவள் நாமம் வாழ்க..!*

------------------

*அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை*