பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பிவைத்தான்.
இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார்.
அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம், "பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால்தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார் நாரதர்.
இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தான்.
பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான்.
நாரதர் மனம் இரங்கினார். "துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்” என்று ஆசி கூறி அனுப்பினார். பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி நின்றான்.
துர்வாச முனிவர், பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார். அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான், பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே, வல்லக்கோட்டை முருகப்பெருமான் திருக்கோவில். வள்ளி-தெய்வானை சமேத கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு முருகன் அருள்கிறார்.
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபய கரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இந்தப் பகுதி இருந்தது. அந்த அசுரன், தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதையடுத்து தேவர்கள், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருப்பெருமானும் தேவர்களின் துயரைத் துடைக்க எண்ணினார். அதன்படி அசுரனை அழித்து அவனுக்கு முக்தி அளித்தார்.
மேலும் அசுரனின் வேண்டுகோள்படி, இந்த ஊர் ‘வல்லன் கோட்டை’ என்று சிறப்புபெறும் என்றும் அருளினார். அந்த வல்லன்கோட்டையே, தற்போது 'வல்லக்கோட்டை' என்று மருவி உள்ளது.
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.
அருணகிரிநாதர், தலயாத்திரையாக பல ஆலயங்களுக்குச் சென்று வந்தார். திருப்போரூர் முருகனை தரிசித்த அவர், அன்றிரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார்.
அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், ‘கோடைநகர் மறந்தனையே..’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர், கனவில் தோன்றிய முருகப்பெருமானை நினைத்தபடி, திருத்தணி செல்லும் வழியில் வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார். மேலும் முருகப்பெருமானின் மீது எட்டு திருப்புகழ் பாமாலை பாடினார்.
இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது.
பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள், வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறும்.
காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.
ஏழு வெள்ளிக்கிழமைகள் நாம் தொடர்ந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம். பெறுவோம்!
-வி.சி. கிருஷ்ணரத்னம்,
செங்கல்பட்டு.
--------------------------------------------------
F1, மங்கள் ஃபிளாட்ஸ்,
காட்டாங்குளத்தூர் & போஸ்ட்
செங்கல்பட்டு மாவட்டம்,
பின் - 603 203.