எங்கள் குலதெய்வம் வேளிமலை முருகன் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள குமாரகோவில் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது வேளிமலை தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு நிறையபேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தக்கலை மார்க்கமாக இந்த கோயிலுக்கு செல்லலாம்.இங்குள்ள 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் வேளிமலை குமாரசாமி கோவில் குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து இங்கு பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் விழாக்களுக்கு கேரளக் காவல்துறையின் இசைக்குழு பங்கேற்கிறது.
ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு வேள்வி மலை என்று பெயர். இதுவே பின்னர் வேளி மலையாக மருவியது. கேரளத்தில் திருமணத்தை ‘வேளி’ என்பர். முருகப் பெருமான் இங்கு வள்ளியைக் காதலித்து, கடிமணம் புரிந்ததால், ‘வேளி மலை’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
வேள் என்பது இன்றைய கன்னியாகுமரி மாவட்டப் பகுதியை ஆண்ட ஆய் மன்னர்களின் குடும்பப் பெயர். ஆய் மன்னர்களின் பெயரால் வேள்+நாடு என்பது வேணாடு ஆனது. வேள் மன்னர்களின் மலையே வேளிர் மலை என்றானது என்பது முனைவர் அ.கா. பெருமாள் அவர்கள் கருத்து. கோயிலின் பழைமை குறித்த கல்வெட்டுகள் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்துதான் கிடைக்கின்றன. இவற்றில் இம்மலை வேளிர் மலை என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.
இங்கு சுமார் எட்டு அடி உயரத்தில் மணமகனாக முருகன் நிற்க, அருகில் சுமார் ஆறரை அடி உயரத்தில் வள்ளி மணமகளாக இருந்து அருளுகிறார்.
மேற்குப் பிராகாரத்தில் காசி விசுவநாதர் காட்சியளிக்கிறார். வடமேற்கில் உற்சவ மூர்த்தியாக இருக்கும் மணவிடைக் குமாரர் சந்நதி அமைந்துள்ளது. இவரே நவராத்திரியின்போது திருவனந்தபுரத்துக்கும், மார்கழித் திருவிழாவின்போது சுசீந்திரத்துக்கும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்பவர்.
வடக்குப் பிராகாரத்தின் இறுதியில் வள்ளி தெய்வானை சமேதராக ஷண்முகராக ஆறுமுக நயினார் விளங்குகிறார். ஆறுமுக நயினாரும் நடராஜரும் அடுத்தடுத்து தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர். திருமால் சிவதவமுனியாக இருக்கும்போது திருமகள் மான் வடிவு கொண்டு அங்கு வந்து நின்றாள். கருவுற்ற மான், வள்ளிக்கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் அழகிய பெண் குழந்தையை ஈன்றது. வள்ளிக்கிழங்கு செடியில் குழந்தை கிடந்ததை கண்டெடுத்த அப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் நம்பிராஜன், அக்குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். வள்ளி தக்க பருவம் வந்ததும் வேடுவர் குல வழக்கப்படி வள்ளி தினைப்புனம் காத்து நின்றாள். இந்த செய்தியை நாரதர், முருகனிடம் கூற, முருகனும் தினைப்புனம் நோக்கி சென்றார்.
வேடனாக, வேங்கை மரமாக, விருத்தனாக உருமாறி வந்த முருகன் வள்ளியுடன் ஊடல் பல புரிந்தார். இதை பார்த்து வள்ளி வெகுண்டு நிற்கும்போது தனது அண்ணனான விநாயக பெருமான் துணையோடு வள்ளியை காந்தரூப முறைப்படி திருமணம் செய்வதற்காக முருகன், தனது சுய உருவை காட்டினார். வள்ளியும் தனது பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினாள், முருகன் வள்ளியை மணமுடித்துக்கொண்டார்.
தலவிருட்சமான வேங்கை மரத்துக்கெனத் தனி சந்நதி அமைந்துள்ள தலம் இதுவாகும். முருகன் வள்ளியை மணம்புரியவிருந்த நேரத்தில் வள்ளியின் உறவினர் தினைப்புனம் நோக்கித் திரண்டுவர, வேங்கை மரமாக முருகப் பெருமான் மாறினார். புதியதாக ஒரு மரம் நிற்கவே அதனை அவரது உறவினர் வெட்டி விட்டனர் என்று சொல்லப்படுகிறது. வேங்கை மரத்தின் எஞ்சிய பகுதிக்கு வஸ்திரம் சார்த்தி தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கோயிலில் தட்சனுக்கு தனி சந்நதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான்.
அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சந்நதியில் காட்சி தருகிறார். ஆட்டுத்தலையுடன் காட்சி தரும் தட்சனுக்கு இங்கு தனியாக கோயிலின் மேற்கு வாசல் அருகில் சந்நதி அமைந்துள்ளது.இக்கோயிலில்இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் வள்ளிக்குகை உள்ளது. அருகிலேயே விநாயகருக்கு ஒரு சிறுகோயில் உள்ளது. வள்ளிக் குகை அருகிலேயே தினைப்புனம், வள்ளிசோலை, வட்டச்சோலை, கிழவன் சோலை என்றழைக்கப்படும் இடங்கள் அமைந்து உள்ளன. வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர், வேலவர், வள்ளி சிற்பங்கள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குமார கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்று, பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் நடைபெறும் வள்ளி திருமணம். அன்று காலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், வள்ளி குகை அருகே உள்ள கல்யாண மண்டபத்துக்குச் செல்கிறார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். மண்டபத்தில் தீபாராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிற்பகலில் முருகன்- வள்ளி தம்பதியை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள். அப்போது முருகப் பெருமானுடன் குறவர்கள் போரிடும் ‘குறவர் படுகளம்’ எனும் நிகழ்ச்சி மலைப்பாதை நெடுகிலும் நடைபெறுகிறது. இறுதியில் கோயிலின் மேற்கு வாசலில் குறவர்கள் முருகப் பெருமானிடம் தோல்வியடைந்து சரணடையும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அங்கு மலையில் வாழும் குறவர் இனத்தவரே கலந்து கொள்கின்றனர்.
இரவு 8 மணியளவில், அபிஷேக- ஆராதனைக்குப் பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்தில் முறைப்படி வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் தேன், தினைமாவு மற்றும் குங்குமம் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
முருகப் பெருமானுக்கு இடப் புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி. இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும் (தெய்வானையின் விக்கிரகம் இல்லை). இதுவே இந்தக் கோயிலின் சிறப்பு.
திருக்குளத்தின் அருகே கஞ்சி தர்மத்துக்கான ‘கஞ்சிப்புரை’ அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ‘கஞ்சி தர்மம்’ விசேஷமானது. இது நோய் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களால் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் முடிந்ததும் அந்த இடத்தில் தொழுநோயாளிகள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். இதனால் தங்களது நோய் விலகும் என்று நம்புகிறார்கள்.
ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் முதல் கந்த சஷ்டி விரதத்துக்குக் காப்புக் கட்டி ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை, கார்த்திகை கடைசி வெள்ளிக் காவடி, மார்கழி சுசீந்திரம் தேரோட்டத்தையொட்டி மக்கள் மார்சந்திப்புக்கு முருகன் செல்லுதல், தைப்பூசம் திருக்கல்யாண கால் நாட்டும், பங்குனி அனுஷ நட்சத்திரத்தில் இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்
-M.A.MURUGAN AGNI
BOOPALPATTI