அங்காளம்மன் பார்வதி தேவியின் ஒரு அம்சமாகும். அங்காளம்மன்
சக்தியின் ஒரு உக்கிர வடிவமாகும். பல கிராமங்களில் அங்காளம்மன்
கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் வணங்கப்பட்டு
வருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மன்னார்குடி பிரதான சாலையில்
வேளுக்குடி என்ற ஊரில் உள்ளது அங்காளபரமேஸ்வரி ஆலயம்.
சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இந்த கோயில். சிவபெருமானின்
திருவிளையாடல்களில் ஒன்றாகிய தட்சன் நடத்திய வேள்வியோடு
தொடர்புடையது இந்த கோயில். இந்த வேள்விக்கு திருமால், பிரம்மன்,
அக்கினி, இந்திரன், சூரியன் உள்ளிட்டவர்களை அழைத்து ஈசனை மட்டும்
அழைக்கவில்லை. இதனை அறிந்த பார்வதி தந்தை நடத்தும் வேள்விக்கு
சென்று வரவும், ஈசனை அழைக்காமல் விட்டது தவறு என்பதை அவருக்கு
சுட்டிக்காட்டவும் ஈசனிடம் அனுமதி கேட்கிறார். அவர் அனுமதி தர
மறுக்கவும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழுந்தது . ஈசன் அனுமதி
இல்லாமலே பார்வதி தேவி வேள்வி நடக்கும் இடத்துக்கு செல்கிறார்.
அங்கு அவர் தன் தந்தையால் அவமதிக்கப்படுகிறார். ஐம்பெரும் பூதங்களே
முழு முதல் ஆதி கடவுள் என்று சொல்லி ஏளனமாக சிரிக்கிறார் தட்சன்.
அந்த ஐம்பூதங்களையும் ஆட்டி வைப்பவர் என் இறைவன் என்று தேவி
பதில் உரைக்கிறார். எதையும் பொருட்படுத்தாமல் தட்சன் ஐம்பெரும் பூதங்களை
அன்னை மீது ஏவி விடுகிறான். அந்த பூதங்களை தன் பாதத்தால் அடக்கினாள்
அன்னை. அப்போது அவர் கங்காளமும் திரிசூலமும் தாங்கிய அகில மகா
சக்தியாக அங்காளம்மனாக காட்சியளித்தார். தொடர்ந்து அன்னையோடு போர்
தொடுத்தான் தட்சன். அவன் அனுப்பிய இரண்டு அரக்கர்களில் ஒருவனை பாதத்தால்
மிதித்தும் மற்றொருவன் குடலை பிடுங்கி மாலையாக அணிந்து பெரியாச்சியாக
மாறி காட்சியளித்தாள் அங்காளம்மன். பின்னர் இந்த வேள்வி நகரில் இருந்து
இருளன் என்பவன் துணையோடு கைலாயம் திரும்பினாள். சிவபெருமானிடம்
சென்று தனது செய்கைக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அந்த வேள்வி
நடந்தது இந்த வேளுக்குடியில் தான்.
தட்சனின் வேள்வியை அழிக்க சிவபெருமான் அகோர வீரபத்திரரை
அனுப்பி வைக்கிறார். வீரபத்திரர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து
தோற்றுவிக்கப்பட்டவர். வீரம் காக்கும் கடவுள் என்றும் சொல்வார்கள்
பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணை தெய்வமாக வைத்து வழிபட்டு
வருகின்றனர். தட்சனின் வேள்வியை அழித்து அவன் சிரசை தன் கை வாளினால்
அறுத்தார் .
தட்சனின் ஆணவத்தை அடக்கி அவன் வேள்வியை சின்னாபின்னமாக்கியதும்
அங்காளம்மனான அன்னையும் ருத்ர மூர்த்தியான ஈசனும் மயானத்தில்
கூத்தாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை முன்னிலைப்படுத்தி சுமார் 600 ஆண்டுகளுக்கு
முன்பு இவ்வூர் மக்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று திரண்டு அங்காளம்மனுக்கு கோயில்
அமைத்தார்கள் . முதன்முதலாக சடையப்ப பூசாரி பொறுப்பேற்றார் அவர் பரம்பரையில்
வந்த பலர் பூசாரியாக இருந்து வருகிறார்கள்.பத்தாவது தலைமுறையாக
திரு.வி.எஸ்.ரமேஷ்குமார், திரு.வி.எஸ்.ராஜு இருவரும் கோயிலை கவனித்து
வருகிறார்கள். இந்த கோயில் உருவான வரலாறு இதுதான்.
இந்த கோயிலின் பெருமைகளை அறிந்த தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி
இங்கு வந்து தரிசனம் செய்தார். சடையப்ப பூசாரியின் கலை நிகழ்ச்சியை பார்த்து
பாராட்டி தான் பயன்படுத்திய கேடயம் மற்றும் வீர வாளினை பரிசாக அளித்தார்.
இந்த அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டுள்ளவர்கள் திருவாரூர், மன்னார்குடி,
பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட
பல இடங்களில் உள்ளனர்.
ஆண்டுதோறும் சிவராத்திரி கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த விழாவில் விஸ்வரூப தரிசனம், மயானத்தில் மயான ருத்திரர் ஆடும் கூத்து,
பெரியாச்சி ஆலயத்தில் இருந்து எழுந்தருளும் காட்சி இவை மூன்றும் முக்கியமானவை.
சிவராத்திரி மறுநாள் அமாவாசை அன்று அகோர வீரபத்திரர் வேடம் தரித்து
கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள்
தங்கள் குடும்ப நலன் கருதி நேர்த்திக்கடனாக ஆடு, மாடு, கோழிகளை செலுத்துவார்கள்.
ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஊரணி பொங்கல் என்று
அழைக்கக் கூடிய, ஊர் மக்கள் ஒன்று கூடி 108 க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள்
பொங்கல் வைப்பார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் மற்றும்
ஹோமம் நடைபெறும்.
2000 ஆம் ஆண்டில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இங்கு வருகை தந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த கோயிலுக்கான விருதையும் வழங்கினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் தருமபுரம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை
மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க, பில்லி, சூன்யம், ஏவல் செய்வினை
கோளாறு நீங்க இங்கு வந்து அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். ஒரு முறை
இந்த கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து வாழ்வில் எல்லா வளங்களையும்
பெற்று சிறப்பாக வாழுங்கள். காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில்