நாகர்கோவில், மே 20–
எதிரிகள் கையில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. எனவே திமுகவினர் உஷாராக இருக்கவேண்டும் என்று கனிமொழி எம்.பி. எச்சரித்தார்.
குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்.பி. ஆலோசனை நடத்தினார். மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை வகித்தார். அமைச்சர் மனோதங்கராஜ், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் முன்னிலை வகித்தனர். இதில் கனிமொழி பேசியதாவது:
2026 சட்டசபை தேர்தல் நாம் இதுவரை சந்தித்திராத ஒரு தேர்தலாக இருக்கும். இந்த களம் நாம் கண்டிராத புதிய களம். ஏனென்றால் மத்தியில் இருக்கும் அரசு தன்னுடைய தேர்தல் வியூகத்தின் ஒரு பாகமாக தேர்தல் கமிஷனை மாற்றி கொண்டிருக்கிறது.
செயலற்ற அதிமுக
அதோடு அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக இத்தனை ஆண்டுகளாக செயலற்று எங்கே இருக்கிறார்கள் என தெரியாத இடத்தில் இருந்தார்கள். இப்போது டெல்லியில் ஒரு பலம் கிடைத்திருக்கிறது என நினைத்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறவர்களோடு கரம் கோர்த்திருக்கிறார்கள்.
இந்த தேர்தல் திமுகவை ஆட்சி பொறுப்பில் ஏற்றி வைக்கும் தேர்தல் மட்டுமல்ல, நமது முதலமைச்சரின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்து சொல்லும் தேர்தலாக, திமுக எதற்காக தோன்றியதோ அதன் அடிப்படையை பாதுகாக்க வேண்டிய, தமிழ்நாட்டின் உரிமைகளை, தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தலாக இருக்கிறது.
திசை திருப்பும் செயல்
சிலர் தமிழ்நாட்டில் ஒரு இடத்தை பிடித்து விடலாம் என நினைத்து அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்கள். பொதுவாக பாஜ தனது வியூகம் என்று எல்லா தேர்தலிலும் ஒன்றை உருவாக்குவார்கள். பாஜவுக்கு எதிராக பேசுவதுபோல் சிலர் பேசுவார்கள். ஆனால் பாஜவுக்கு எதிராக இருப்பதை திசை திருப்புவதை நோக்கமாக கொண்டிருப்பார்கள்.
இந்த யுக்தியை புரிந்து கொண்டு நாம் இந்த தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
நமக்குள் இருக்கும் மன மாற்றங்களை தேர்தல் வரை தள்ளி வைக்க வேண்டியது நமது தலையாய கடமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையில் தான் நமது வெற்றி இருக்கிறது.
எதிரிகள் கையில்..
தற்போது தேர்தல் கமிஷன் எதிரிகள் கையில் இருக்கிறது. பல தேர்தல்களில் ஒரு தொகுதியில் இருக்கும் 40 ஆயிரம் ஓட்டுகளை வேறு தொகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள்.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொகுதியிலேயே அது நடந்தது. 40,000 வாக்குகளை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டு புதிய வாக்குகளை வைத்து அவர்கள் வெற்றி பெற்றார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த பிரச்னையை நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே நம்முடைய வாக்காளர் பட்டியலை சரியாக பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் வரப்போகிறது எனவே உங்களுடைய கருத்துக்கள் மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.