சில வருட இடைவெளிக்குப் பிறகு பக்கத்து ஊரில் இருக்கும் என்னுடைய நண்பன் நரேந்திரனைப் பார்க்கப் போயிருந்தேன்.
மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்ற அவன், "என்னடா பரசு, வருஷக்கணக்கா காணாமப் போயிட்டே? ஐயா அவ்வளவு பிஸியோ?" என்றான் கிண்டலாக.
"வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு. அதான் வர முடியல. உன் உடம்பு எப்படி இருக்கு? பிபி, ஸூகர் எல்லாம் கண்ட்ரோல்ல இருக்கா?" என குசலம் விசாரித்தேன்.
" ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலேயும், உன்னோட புண்ணியத்திலேயும் நல்லா இருக்கேன். உன் மனைவி,பையன், பொண்ணு எல்லாம் எப்படி இருக்காங்க? பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்றதா உத்தேசம்?"
" பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்குது...." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய ஒன்பது வயது பேத்தி ஸ்வேதா," வாங்க தாத்தா. எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?" என்றபடியே என் அருகில் வந்தாள்.
அவளுக்காக நான் வாங்கி வந்திருந்த கேக், சாக்லேட் ஆகியவற்றை அவள் கையில் கொடுத்துவிட்டு,"இந்த தாத்தாவுக்கு ஒரு பாட்டு பாடிக் காண்பி பார்க்கலாம்..." என்றேன்.
உடனே அவள் சற்றும் தாமதிக்காமல்-
"காத்து மேல
காத்து கீழ
காத்து சைட்ல
காத்து ரைட்ல
வீட்டு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைட்ல பாத்தா குப்பமேடு மா..." எனப் பாட திகைத்தேன் நான்.
'என்ன கண்றாவி இது? இந்த காலத்துப் பசங்க செல்போன்ல ரீல்ஸ் பார்த்து ரொம்பதான் கெட்டுப் போயிட்டாங்க....' என மனதிற்குள் நான் வசைபாடிக் கொண்டிருக்க...
"உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது..." என்றவாறு என் அருகில் வந்த நரேந்திரன்," என் பேத்தி 1330 திருக்குறளையும் மனப்பாடமா சொல்லுவா. தேவாரம், திருவாசகம் பாடல்களையும் அவ்வளவு அழகாப் பாடுவா." என்றான் என் முதுகில் தட்டியபடி.
நான் வாயடைத்து நின்றேன். ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*