லக்னோ, ஏப்.15-
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோவை வீழ்த்தி சென்னை அணி 2-வது வெற்றியை ருசித்தது.
லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 30-வது லீக்கில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. சென்னை அணியில் டிவான் கான்வே, சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷேக் ரஷீத், ஜாமி ஓவர்டான் சேர்க்கப்பட்டனர். லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் திரும்பினார்.
‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து உள்ளூர் ரசிகர்கள் முன் மார்க்ரமும், மிட்செல் மார்சும் லக்னோவின் பேட்டிங்கை தொடங்கினர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ரம் (6 ரன்) தூக்கியடித்த பந்தை ராகுல் திரிபாதி சூப்பராக கேட்ச் செய்தார். இதைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் பூரன் (8 ரன்), அன்ஜூல் கம்போஜ் பந்து வீச்சில் எல்.பி. டபிள்யூ. ஆனார்.
3-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்சுடன், கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்தார். ஸ்கோர் 73-ஐ எட்டிய போது மார்ஷ் (30 ரன்) ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஆயுஷ் பதோனி தனது பங்குக்கு 22 ரன் எடுத்தார்.
39 பந்துகளில் 40 ரன்களே எடுத்திருந்தார். நடப்பு தொடரில் முதல்முறையாக அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் ( 63 ரன்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்குர் (4 ரன்) கடைசி பந்தில் கேட்ச் ஆனார். முன்னதாக அப்துல் சமத் 20 ரன்கள் சேர்த்த நிலையில், ரன்அவுட் ஆகிப் போனார்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 57 ரன்கள் திரட்டினர். இருப்பினும் இந்த சீசனில் லக்னோவின் குறைந்த ஸ்கோராக இது பதிவானது. சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ரச்சின் ரவீந்திராவுடன், புதிய தொடக்க ஆட்டக்காராக ஷேக் ரஷீத் இறங்கினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து (4.5 ஓவர்) நல்ல தொடக்கம் தந்தனர். ஷேக் ரஷீத் 27 ரன்களில் (19 பந்து) பெவிலியன் திரும்பினார். சிறிது நேரத்தில் ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் (22 பந்து), மார்க்ரம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
ராகுல் திரிபாதி (9 ரன்), ரவீந்திர ஜடேஜா (7 ரன்) இருவரும் ரவி பிஷ்னோயின் சுழலில் சிக்கினர். விஜய் சங்கரும் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு இம்பேக்ட் வீரர் ஷிவம் துபேவுடன் கேப்டன் டோனி கூட்டணி அமைத்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரில் 19 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.
இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ்கான் வீசினார். இதில் முதல் 2 பந்தில் 2 ரன் எடுத்தனர். 3-வது பந்தில் ஷிவம் துபே பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றிருந்த சென்னை அணி ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. லக்னோவுக்கு இது 3-வது தோல்வியாகும்.
எனக்கு ஏன்
ஆட்ட நாயகன் விருது?
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் மகேந்திரசிங் தோனி அளித்த பேட்டியில், "எனக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது கொடுக்கிறார்கள்? நூர் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்" என்று கூறினார். அவர் கூறுவது போல நூர் அகமது விக்கெட் ஏதும் வீழ்த்தாவிட்டாலும் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கன பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
ஷேக் ரசீத் இன்று மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் எதிராக வலைகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்றும் கூறினார்.