தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று கன்னிப்பெண்களும், அவர்களைப் பெற்றோர்களும் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் வேண்டாத தெய்வங்களும் இருக்க முடியாது. இவர்களது கவலையைத் தீர்க்கும் அன்னை கபிஸ்தலத்தில் இருக்கிறாள்.
கோவிலின் அமைப்பு:
இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. உள்ளே நுழைந்ததும் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், நந்தியைக் கடந்தால் மகாமண்டபம் காணப்படும்.
அந்த மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபம் நுழைவு வாசலில் இடதுபக்கம் இரட்டை பிள்ளையாரும், வலதுபுறம் காசி விசுவநாதரும் அருள்பாலிக்கின்றனர்.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஏகாம் பரேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி காமாட்சி அம்பிகையின் சன்னிதி உள்ளது.
இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அன்னை அருள்பாலிக்கும் அழகே அழகு.
இறைவனின் கருவறை தேவ கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வட திசையில் துர்க்கை அம்மனும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேல் திசையில் பிள்ளையார், சுப்ரமணியர் சன்னிதிகளும், வட திசையில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.
சிறப்பு பூஜைகள்:
அஷ்டமியில் பைரவருக்கும், சதுர்த்தியில் விநாய கருக்கும், கார்த்திகை நாட்களில் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பௌர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
நவராத்திரியின் 10 நாட்களும் இறைவிக்கும், இறைவனுக்கும் தினம் தினம் விதவிதமான அலங்காரங்கள் செய்து பக்தர்களின் மனம் மகிழும்படி செய்கின்றனர்.
மார்கழி 30 நாட்களும் மற்றும் சோமவாரம், பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பொங்கல் திருநாளில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு. தை முதல் நாள் காவிரியில் தீர்த்தவாரியில், திரளான மக்களோடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்பது ஐதீகம்.
திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என இறைவனிடம் முறையிடுகின்றனர். அத்துடன் கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வணங்குகின்றனர். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர்.
அவர்களின் பிரார்த்தனை நிறைவேறுகிறது. 90 நாட்களுக்குள் அந்த பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி என கூறுகின்றனர் பக்தர்கள்.
அமைவிடம்:
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம்.
D. சம்பத் குமார்
அம்பிகா காம்ப்ளெக்ஸ்,
866/497 திருவொற்றியூர் நெடுஞ்சாலை,
பழைய வண்ணாரப்பேட்டை மார்க்கெட் எதிரில்,
சென்னை - 600021.