tamilnadu epaper

காசியில் பிச்சை எடுத்த இறைவன் ! பார்த்து சிரித்த பக்தன்

காசியில் பிச்சை எடுத்த இறைவன் ! பார்த்து சிரித்த பக்தன்


காசியில் உள்ள மக்களின் உண்மையான தர்ம நெறி பற்றி அறிய விரும்பிய காசி விஸ்வநாதர், ஒரு சமயம் பிச்சைக்காரன் போல வேடமிட்டு அங்கு பிச்சை எடுக்க தொடங்கினார். 


முதலில் அங்கு உள்ள செல்வந்தர்கள் வாழும் பகுதிக்கு சென்றார். 


ஆனால் ஒருவரின் வீடு கூட திறந்திருக்கவில்லை இவர் அம்மா அம்மா என்று கத்தி பார்த்துவிட்டு அங்கிருந்து நடுத்தர மக்கள் வாழும் பகுதிக்கு சென்றார்.


அங்குள்ள பல வீடுகளுக்கு ஏறி இறங்கினார் ஆனால் அனைவரும் கூறிய ஒரே பதில் இல்லை என்பதே.


 என்னடா இது இவளவு பெரிய ஊரில் பசிக்கு உணவளிக்க கூட ஒருவர் இல்லையா என நினைத்து இறைவன் கவலை கொண்டார். 


அதே காசியில் பல ஏழை மக்களும் வாழத்தான் செய்தனர். அந்த ஏழைகளின் கூட்டத்தில் தினமும் பிச்சை எடுத்து தன் பசியை போக்கிக்கொள்ளும் ஒரு தொழு நோயாளியும் இருந்தார். 


காசியின் ஒட்டுமொத்த கழிவு நீரும் ஆற்றில் கலக்கும் ஒரு பகுதியில் 4 நாய்கள் அந்த தொழு நோயாளியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தது. 


அந்த நாள் முழுக்க தான் எடுத்த பிச்சையின் மூலம் கிடைத்த உணவை அந்த தொழு நோயாளி அங்கு கொண்டு வந்தார். 


பின் அதை ஐந்து பங்குகளாக பிரித்தார். அதில் நான்கு பங்கை நாய்களுக்கு போட்டுவிட்டு மீதம் உள்ள ஒரு பங்கை தான் உண்பதற்காக எடுத்துவைத்தார்.


அப்போது அங்கு பிச்சைக்காரன் வேடத்தில் வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் பிட்சை கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல் தனக்கு வைத்திருந்த உணவை அவர் இறைவனிடம் நீட்டினார்.


 இதை கண்டு அதிர்ந்து போன இறைவன், என்னை யார் என்று தெரியுமா என வினவினார். 


நீங்கள் யாராக இருந்தால் என்ன?


 முதலில் உங்கள் பசியை போக்கிக்கொள்ளுங்கள் மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார் அந்த நோயாளில். 


இறைவன் மீண்டு அதட்டலாக, என்னை யார் என்று தெரியுமா என்றார். 


அந்த தொழு நோயாளி சிரித்தபடியே, காசி விஸ்வநாதர் தானே நீங்கள் என்றார். 


இந்த பதிலை எதிர்பார்க்காத இறைவன் வாயடைத்து போனார்.


ஒரு தொழு நோயாளியின் அருகில் வரவே மக்கள் அஞ்சுவர். 


அப்படி இருக்கையில் என் கை கொண்டு பிசையப்பட்ட உணவை ஒருவர் கேட்கிறார் என்றால் அவர் நிச்சயம் இறைவனாக தான் இருக்க முடியும். 


ஏன் என்றால் இறைவனை பொறுத்தவரையில் அனைவருமே அவர் பிள்ளைகள் தான். 


அவருக்கு பாரபட்சம் எல்லாம் கிடையாது.


 அதனால் நீங்கள் இறைவன் தான் என்றார். 


இறைவன் மீது அந்த நோயாளி கொண்ட புரிதலை கண்டு விஸ்வநாதர் மெய் சிலிர்த்து போனார்.