காவல்துறையில் பணிபுரிந்த தன் கணவர் கள்ளச்சாராய கோஷ்டியுடன் நடந்த சண்டையில் இறந்து விட, காவல்துறை பணியையே வெறுத்தாள் கல்பனா. "உசுருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை" என்பாள்.
அவள் மகன் பிரபுவோ சின்ன வயதிலிருந்தே அப்பாவைப் போல் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்கிற கனவுடனேயே வளர்ந்து, அதற்கான தகுதிகள் வந்ததும் காவல்துறை பணிக்கான விண்ணப்பத்தோடு வீடு வந்தான்.
அதிர்ந்து போன கல்பனா மகனை அதட்டி, மிரட்டி, எதுவும் பலிக்காமல் போக கடைசியில் அழ ஆரம்பித்தாள்.
அப்போதும் அவன் மனம் மாறாமல் போக, "இனிமேல் உன் கூட இருக்க மாட்டேன் கிராமத்து வீட்டுக்கே போய் தனியா பொழைச்சுக்கிறேன்" சொல்லி விட்டு, பையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அருகிலமர்ந்திருந்தவயதான பெண்மணியிடம் பேச்சு கொடுத்தாள் கல்பனா. "சிவகிரிக்கா?"
"ஆமாம் சிவகிரிக்குத்தான்.. இப்பதான் என்ற மகனை மெட்ராஸ் போக ரயிலேத்தி விட்டுட்டு வர்றேன்" என்றாள் அந்தப் பெண்மணி.
"மகன் மெட்ராஸிலா வேலை பார்க்கிறான்?"
"இல்லை... அவன் பாட்டாளத்துக்காரன்! மெட்ராஸ் போய் அங்கிருந்து ரயிலேறி டெல்லிக்கு போயிடுவான்"
"என்னது பட்டாளத்துக்காரனா ஆபத்தான வேலையாச்சே... உசுருக்கு உத்திரவாதம் இல்லாத வேலையாச்சே?"அங்கலாய்த்தாள் கல்பனா.
"தெரியும்!... என் புருஷன் கூடப் பட்டாளத்துக்காரர்தான்... கார்கில் போர்ல செத்திட்டார்!... என் மூத்த மகனும் பட்டாளத்துக்காரந்தான்.... எல்லையில் ஊடுருவிய எதிரிக கூட சண்டை போட்டுச் செத்தான்!.. இப்ப என் சின்ன மகன் போய்க்கிட்டிருக்கான்"
"இவ்வளவு நடந்துமா சின்ன மகனையும் அனுப்புறே?".
"ஆமா... பட்டாளத்துக்காரங்க யாரு?... இந்த நாட்டுக்கு... நாட்டு மக்களுக்கு காவல் தெய்வங்கள்!... உள்ளூர்ல போலீஸ்காரங்க எப்படியோ... அப்படி எல்லைல பட்டாளத்துக்காரங்க!..
நாட்டுக்காக உசுரை விடுவது கௌரவம்.... பெருமை!" அப்பெண்மணி சாதாரணமாய்ச் சொல்ல,
நீண்ட நேரம் அமைதி காத்த கல்பனா, சிவகிரி செல்லும் பஸ் வந்தும் அதில் ஏறாமல் வீடு திரும்பி, மகனிடம் சொன்னாள். "அந்த விண்ணப்பத்தை நாளைக்கே போட்டுடுடா"
முற்றும்
-------------
முகில் தினகரன் கோயம்புத்தூர்.