tamilnadu epaper

திரும்பிப் பார்க்கிறேன்

திரும்பிப் பார்க்கிறேன்


இலக்கியத் துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர். சுற்றுலாத் துறையில் நாற்பதாண்டுகளாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரையே கவிஞர் இரா. இரவியின் வசிப்பிடம். வாழ்விடம். இலக்கியம் மற்றும சுற்றுலாத் துறை கவிஞர் இரா. இரவிக்கு ஏராளமான பல்வேறு துறை சார்ந்த மனிதர்களை சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. கவிஞர் இரா. இரவி தான் சந்தித்த, நாற்பத்தாறு மனிதர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தை, அவர்கள் மூலம் தான் கற்றதை, தான் பெற்றதை கட்டுரைகள் மூலம் வாசகர்களுக்கு பகிர்ந்துள்ளார். 


சுற்றுலாத்துறை கவிஞர் பல பிரமுகர்களை சந்தித்து உரையாடுவதற்கு ஒரு நல்ல களமாக அமைந்துள்ளது. இலக்கிய ஈடுபாட்டின் காரணமாகவும் உடல்நிலை காரணமாகவும் விருப்ப ஓய்வு பெற விரும்பிய போது முனைவர் வெ. இறையன்பு அவர்களும் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களும் விருப்ப ஓய்வு பெற வேண்டாம் என்று அறிவுறுத்தியும் விருப்ப ஓய்வு பெற்றதை வருத்தமுடன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பேச்சைக் கேட்காமல் நடந்து கொண்டது விருப்ப ஓய்வு பெற்றதுதான் என்றும் தெரிவித்துள்ளார். 


அணு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கும் கவிஞர் இரா. இரவிக்கும் ஒரு நல்ல தொடர்பு உண்டு. அவரைப்பற்றியும் எழுதியுள்ளார். அவருக்கும் எழுதியுள்ளார். அவருக்காகவும் பல வேலைகள் செய்துள்ளார். விமானம் புறப்படும் நேரத்தை அப்துல் கலாமுக்கு யாரோ தவறாக சொல்லியதால் தாமதமாக புறப்பட்டு வந்துள்ளார். இத்தகவல் தெரிவிக்கப்பட்டு இரவி விமான நிலைய மேலாளரிடம் பேசி விமானத்தை பத்து நிமிடங்கள் தாமதப்படுத்தி ஏற்றி அனுப்பியுள்ளார். அப்துல் கலாமும் தாமதமானதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோரிய பண்பினையும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின்போது அப்துல் கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர். 


கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சென்னைக்கு செல்ல டிக்கெட் புக் செய்த விமானம் ரத்தான தகவல் அறிந்து மேலாளருக்கு தகவல் தெரிவித்து வேறு விமானத்தில் டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்த தகவலையும் தெரிவித்துள்ளார். கலைமாமணி கு. ஞானசம்பந்தன் கலைஞர் தொலைக்காட்சி பொறுப்பிலிருந்த ரமேஷ் பிரபா விமானத்திற்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்து போர்டிங்கக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியதைத் தொடர்ந்து போர்டிங் பாஸை எடுத்து தயாராக வைத்திருந்து அவர் வந்ததும் தந்து வழியனுப்பியதாக கூறியுள்ளார். 


எழுத்தாளர் தொ. பரமசிவன் உடல்நிலை சரியில்லாமல் சக்கர நாற்காலியில் வந்ததால் விமானம் ஏற மருத்துவச் சான்றிதழ் தேவை என மறுத்ததை அறிந்து தானே முன் வந்து தன் பொறுப்பில் சென்னைக்கு மருத்துவத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இவையெல்லாம் இரா. இரவி விமான நிலையத்தில் உதவி சுற்றுலா அலுவலராக இருந்ததால் சாத்தியமாயிற்று. 


செல்வி ஜெ. ஜெயலலிதா பேசியதால் ஜெயா தொலைக்காட்சியிலும் திரு. ரமேஷ் பிரபா தொடர்பால் கலைஞர் தொலைக்காட்சியிலும் நேர்முகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது என்றார். அதே போல் கோகுல இந்திராவிற்கு செய்த உதவி இரவியின் பணிமாற்றத்தை நிறுத்தியது என்றும் தெரிவித்துள்ளார். 

   

கவிஞர் இரா. இரவி ஒரு நாத்திகர். நீதியரசர் கற்பக விநாயகம் திருக்குறள் பற்றி பேசியதில் கடவுளைப் பற்றிய கருத்தில் தனக்கு உடன்பாடில்லையென ஒரு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதி மதுரை வந்த போது நேரில் சந்திக்க அழைப்பு விடுத்து பாராட்டியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அது முதல் நீதிபதியுடனான நட்பு தொடர்கிறது என்கிறார். நீதிபதியே என்றாலும் தன் கருத்தைத் துணிந்து கூறியுள்ளார். 


நீதியரசி விமலா உரையாற்றியதைக் குறிப்பெடுத்து அவருக்கே அனுப்பி நினைவாற்றலுக்காக அவரிடம் பாராட்டுப் பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார். 


எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்களின் மகன் நீதியரசர் மகாதேவன் திருக்குறளை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்று தீர்ப்பு வழங்கினார் என்றும் இலக்கியங்கள் குறித்த அவரின் உரை ஓடும் நதி போல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 


முனைவர் வெ. இறையன்பு இ. ஆ. ப. அவர்களுக்கும் கவிஞர் இரா. இரவிக்கும் ஒரு நெருக்கமான உறவு உண்டு. இரவிக்கு அதிகாரியாகவும் இருந்துள்ளார். அன்பான வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். முனைவர் வெ. இறையன்பு மூலம் தான் பெற்ற நன்மைகளை நன்றியுடன் கூறியுள்ளார். தனக்காக மட்டுமல்லாமல் மதுரை மக்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் இறையன்பு இ. ஆ. ப. அவர்களிடம் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். இறையன்பு அவர்கள் ஓய்வு பெற்றாலும் அவருடன் நட்பிலேயே உள்ளார். அரசு நடத்தும் புத்தகக் கண்காட்சியில் பேசுவதற்கு இறையன்பு தொகை வாங்குவதில்லை என்பதுடன் இறையன்பு தனக்கு செய்த உதவிகளை நன்றியுடன் கூறுவார் என்றும் தான் செய்த உதவிகளை நினைவிலும் வைத்துக் கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


புத்தகக் கண்காட்சிகளில் பேசுவதற்கு வெ. இறையன்பு போல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தொகுப்புகளுக்கு எழுதும் அணிந்துரைகளுக்கு தொகை வாங்குவதில்லை என்கிறார்.


கவிஞர் இரா. இரவி தொகுப்புகளுக்கு மட்டும் விமர்சனங்கள் எழுதுவதில்லை. திரைப்படங்களுக்கும் எழுதி வருகிறார். பெரியார் திரைப்படத்திற்கு எழுதி நடிகர் சத்யராஜிடம் பாராட்டு பெற்றதாகவும் மாயாண்டி குடும்பத்தாருக்கு எழுதிய விமர்சனம் திரைப்படக் குழுவினரால் விளம்பரமாக செய்தித் தாள்களில் வந்ததாகவும் அதை வாசித்து விட்டு புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அலைபேசியில் அழைத்து பாராட்டியதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்றும் முதல்வரான பின்னும் கடித போக்குவரத்து தொடர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். இது உண்மை என்றும் எழுதியுள்ளார். இதே போல அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திராவிற்கும் போர்டிங் பாஸ் எடுத்து வழியனுப்பி வைத்ததையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


சேதுபதி மேல்நிலைப்பள்ளி குறித்து பல தகவல்கள். மகாகவி பாரதியார் அப்பள்ளியில் நூறு நாள்கள் தமிழாசிரியராக பணிபுரிந்த தகவலைத் தந்துள்ளார். தமிழ் பாட வேளையைக் குறைத்ததற்காக தமிழாசிரியராக பணிபுரிந்த அரசன் சண்முகனார் ராஜினாமா செய்த தகவலும் உண்டு.


சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சராசரி மாணவனாகவும் இல்லாமல் பத்தாம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை கவிஞர். ஆனால் கவிஞரான பிறகு இலக்கியவாதி என்று அறியப்பட்ட பின் சேதுபதி பள்ளியிலேயே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். படிப்பை விட படைப்பே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. நடுவராகவும் கலந்து கொண்டுள்ளார். பாடத்திட்ட தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். பல்கலைக் கழகங்களில் கவிஞரின் கவிதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.


எழுத்தாளர் இறையன்பு இ. ஆ. ப. குறிப்பிட்டது போல தாம் செய்த நன்றியை பிறரிடம் கூறாதது போல HCL சிவ்நாடார் செனாய்நகர் இளங்கோ மாதகராட்சி மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த செய்த கோடிக்கணக்கிலான உதவியை எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். உதவிகள் செய்வது செய்தவருக்கும் செய்யப்பட்டவருக்கும் மட்டுமே தெரிய வேண்டும்.


ஒரு கட்டாயத்தில் ஒரு மோசமான திரைப்பாடலை விரும்பி கேட்டதற்காக ஒரு வாசகர் விமர்சனம் செய்ய திரைப்படத்திற்கு பாடல் எழுதவே கூடாது என்று முடிவெடுத்ததாக கவிஞர் கூறியுள்ளார். ஆனால் மதுரை பற்றியும் அம்மா பற்றியும் எழுதிய கவிதைகளுக்கு கலாகேந்திர நாட்டியப்பள்ளியில் இசையமைத்து பாடியதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.


பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், சொல்லின் செல்வி சங்கீத் ராதா, தமிழறிஞர் சுந்தர ஆவுடையப்பன், கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன், ஏர்வாடியார் எஸ். ராமகிருஷ்ணன், கார்த்திகேயன் மணிமொழியன், கரிமேடு காமராசர் ஜான்மோசங், கலாம் கே. ஆர். சுப்பிரமணி, கவிக்குயில் இரா. கணேசன், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன், திருநாவுக்கரசு இ. கா. ப., மதுரை உலா ரெ. கார்த்திகேயன் புகைப்படக் கலைஞர், சித்தரஞ்சன் மோகன் தாஸ் இ. ஆ. ப., பொறியாளர் ஐ. சுரேஷ், கவி பாரதி மு. வாசுகி, முனைவர் ச. சந்திரா, ஹலோ பண்பலை செல்வ கீதா ஆகியோர் குறித்தெல்லாம் சிறு குறிப்புகள் தந்துள்ளார்.


இலக்கியவாதிகள் பற்றியதான இத்தொகுப்பில் அம்மாவின் அப்பாவான தாத்தா அ. வ. செல்லையா பற்றியும் ஒரு சிறு கட்டுரை உள்ளது. தன் பகுத்தறிவு சிந்தனைக்கு அவரே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மானமிகு பி. வரதராசன் பெரியார் நெறியாளரும் பகுத்தறிவு சிந்தனைக்குக் காரணமானவர் என்கிறார்.


பார்வையற்றோருக்கு ஒரு விடுதியை நடத்தி வந்த பார்வையற்றவரான பழனியப்பன் மரணமடைய அவர் தம்பி கோபி அமெரிக்காவில் தன் பணியை விட்டு வந்து அண்ணன் செய்த பணியைத் தொடர்வது பாராட்டிற்குரியது. பழனியப்பன் குருதிக் கொடை வழங்கியதாகவும் தானும் அவருடன் இணைந்து குருதிக் கொடை வழங்கியதையும் தெரிவித்துள்ளார். மேலும் விடுதிக்கு நன்கொடை வழங்கி வருவதையும் குறிப்பிட்டுள்ளார். 


கவிஞர் இரா. இரவி இரத்தம் தானம் செய்வதுடன் புத்தகங்களையும் நூலகங்களுக்கு தானம் வழங்கி வருகிறார். மற்றவர்களையும் தூண்டி வருகிறார். தான் நூல்கள் வழங்கிய இறையன்பு நூலக நிறுவனர் நா. பார்த்தசாரதியையும் பாராட்டியுள்ளார். இறையன்பு அவர்கள் இரண்டு லட்ச ரூபாய் அளித்தும் நா. பார்த்தசாரதி அவர்கள் நூலகத்திற்கே பயன்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார். புத்தகங்கள் வாசிப்பதுடன், விமர்சிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், சேமிப்பதை விட நூலகங்களுக்கு வழங்கி விடுவது நல்லது என்கிறார். வீட்டினர்க்கு விருப்பமில்லாத போது படைப்பாளிக்கு இக்கேள்வி எழுந்துவிடுகிறது. கவிஞர் இரா. இரவி சூழ்நிலை உணர்ந்து செயல்பட தொடங்கிவிட்டார். 

 

கவிஞர் இரா. இரவி தான் எழுதிய திரை விமர்சனங்களையும் தொகுத்து திரைச் சுவடுகள் என்னும் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பு வெளிவர அருட்தந்தை வெளியிட்ட திரைமொழி தொகுப்பே காரணம் என்கிறார். 


எழுத்து வேந்தர் இந்திரா செளந்தர ராஜன் அவர்களையும் எழுத்தாளர் இறையன்பு இ. ஆ. ப. அவர்களையும் இணைத்து நண்பர்களாக்கியவர் கவிஞர் இரா. இரவி. எழுத்து வேந்தர் இந்திரா செளந்தரராஜனுக்கு கடவு சீட்டுக்கு காவல் நிலையத்தில் ஆட்சேபனை இல்லை சான்று வழங்க இரவி உதவியுள்ளார் என்பதும் தெரியவருகிறது. 


கவிஞர் இரா. இரவி திரும்பிப் பார்க்கிறேன் என்று பலரை, பல செய்திகளை நினைவுக்கூர்ந்துள்ளார். கவிஞர் இரா. இரவி மற்றவர் குறித்து எழுதி இருந்தாலும் இரவியின் நினைவுக் குறிப்புகளாகவும் உள்ளன. கவிஞர் தன் வரலாறு எழுதுவதற்கு ஒரு முன்னோட்டமாகவும் இருக்கிறது. இரவியுடன் பழகியவர்கள் இலக்கியவாதிகளாக மட்டுமல்லாமல் இந்திய ஆட்சி பணியாளர்களாக, இந்திய காவல்துறை பணியாளர்களாக, நீதிபதிகளாக, சுற்றுலா துறை அதிகாரிகளாக, முனைவர்களாக என பல்வேறு வகையினர் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் இறையன்பு இ. ஆ. ப. அதிகம் இடம்பெற்றுள்ளார். பேராசிரியர் இரா. மோகன் குறித்து கவிஞர் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கவிஞர் இரா. இரவி செய்த உதவிகள் அளப்பரியவை. ஒரு மனிதரை குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட விமானத்தில் அனுப்பி வைப்பது என்பது பெரும்பணி. கவிஞர் இரா. இரவியின் எழுத்து நடை இயல்பாக வாசகர்களிடையே உரையாடுவது போலுள்ளன. வாசகர்களிடையே பகிர்ந்தள்ளார் .கவிஞர் இரா. இரவி இன்னும் திரும்பிப் பார்க்க வேண்டும். நாம் வாசிக்க வேண்டும். 


வெளியீடு 

வானதி பதிப்பகம் சென்னை 


-கவிஞர் இரா. இரவி 9842193103 

பொன். குமார் 9003344742