நாடு முழுவதும் மதுபோதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் குடிபோதை தொடர்பான நோய்கள் அதிகரிப்பு மருத்துவ நெருக்கடிகளை உருவாக்கி வருவதாக அரசு தரப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
டாக்டர் என்டிஆர் வைத்திய சேவா டிரஸ்ட் தரவுகளின் படி 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஆல்கஹால் தொடர்பான நோய்கள் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2014-19 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஆல்கஹால் நுகர்வு அதிகரிப்பின் காரணமாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருவதாக என்டிஆர் வைத்திய சேவா டிரஸ்ட்டின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்பு ஆரோக்கியஸ்ரீ என்று அழைக்கப்பட்ட என்டிஆர் வைத்திய சேவாத் திட்டத்தின் கீழ் ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் பாதிப்பினால் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 2014-19-ல் 14,026, ஆக இருந்தது 2019-2024-ல் 29,369 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 100%-க்கும் மேல் குடியினால் கல்லீரல் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனையடுத்து இவர்களுக்கான சிகிச்சை செலவும் ரூ.68.98 கோடியாக இருந்தது இப்போது ரூ.141.20 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல் ஆல்கஹால் நுகர்வு தொடர்பான நரம்பு மண்டல பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கையும் 1,276-லிருந்து 12,663 ஆக பல மடங்கு அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக சேவா டிரஸ்ட் தெரிவித்துள்ளது. அதேபோல் குடிபோதை பாதிப்பினால் சிறுநீரகம் பழுதடைந்து நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும் 49,060-ல் இருந்து 90,385 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் பாதிப்புகளுக்கு அளிக்கும் சிகிச்சை செலவுகள் ஒட்டுமொத்தமாக ரூ.598.77 கோடியிலிருந்து ரூ.941.65 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் தீபக் ரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது நாங்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்தோம். சட்டப்பேரவையையே இது தொடர்பாக முடக்கினோம். தரமற்ற மதுபானங்களின் மாதிரிகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தினோம்.
ஆந்திர மதுபான ஊழல் 2019-24 என்பது ஒரு மிகப் பெரிய ஊழல். தேசிய பிராண்ட் மதுவகைகளுக்குப் பதிலாக தங்களது ஜே-பிராண்ட் (முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைக் குறிக்கும் வகையில்) தரமற்ற மதுவகைகளை பிரயோகத்திற்குக் கொண்டு வந்தனர். இது ஆந்திர மக்களின் ஆரோக்கியத்திற்கு பெருங்கேடாக அமைந்தது.
இப்போது நாங்கள் புதிய மதுக்கொள்கையை வகுத்தெடுத்துள்ளோம். கலால் வரியில் மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய பிராண்ட் வகைகளைத் தரமான மதுவகைகளை வழங்குகிறோம். தரமதிப்பீடும் சரிபார்ப்பும் கறாராக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், ஆல்கஹால் தொடர்பான நோய்கள் அதிகரிப்பை கவனமேற்கொள்ள 3 நபர் கமிட்டியும் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 25 போதை மீட்பு மையங்களை மேம்படுத்துவதோடு 13 புதிய மையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மதுபோதை அடிமை ஆவது அதிகரிப்புக்கு சில காரணங்கள் சுட்டப்பட்டுள்ளன. அவை: கரோனா சமயத்தில் ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் மனச்சோர்வு காரணமாக மதுபோதையைப் புகலிடமாகத் தேடிக்கொண்டமை. இதன் மூலம் போதைக்கு அடிமையாதல் அதிகரித்தது.
மாநிலத்தின் தொழிற்துறை நெருக்கடி விளைவான பலதரப்பட்ட வேலையின்மை அதிக மக்களை குடியின் பக்கம் இழுத்தமை. மாநிலத்தின் மதுபானக் கொள்கை மற்றும் லிவர், கிட்னி நோய்களுக்கான காப்பீட்டுக் கொள்கையினால் ஆல்கஹால் நுகர்வினால் பாதிப்படைந்தோர் அதிகம் நோயை தெரிவித்தமை.
நோய்களின் தாக்கம் குறித்து அறிய புதிய தன்னார்வத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் ஆல்கஹால் நுகர்வினால் நோய்வாய்ப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் அதிகாரபூர்வ எண்ணிக்கைக்கு வந்தமை ஆகியன ஆகும்.