பெரியகுளம், மே 16-–
நாய் குரைத்ததால் மிரண்டு ஓடிய மாடுகள் மீது அரசு பஸ் மோதியது. இதில் 16 மாடுகள் பலியாகின.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுருளிச்சாமி, தன் நண்பர் தனசேகர் என்பவருக்கு சொந்தமான, 80 நாட்டு மாடுகளை சம்பளத்திற்கு மேய்த்து வருகிறார். பெரியகுளம் அருகே ஜல்லிபட்டியைச் சேர்ந்த சிங்கம் என்பவரது தோட்டத்தில் கிடை போட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில், நாய்கள் குரைத்த சத்தத்தால், தொழுவத்தில் இருந்த 20க்கும் அதிகமான மாடுகள் மிரண்டு, பாதுகாப்பு வேலிகளை உடைத்து ரோட்டில் அங்கும், இங்குமாக ஓடின. மாடுகளை பிடிக்க சுருளிச்சாமியும் ஓடினார். தேனி – திண்டுக்கல் பைபாஸ் ரோடு, டி.கள்ளிப்பட்டி, ஜல்லிப்பட்டி பிரிவு ரோட்டில் மாடுகள் சென்ற போது, கம்பத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில், 14 பசுக்கள், ஒரு காளை, ஒரு கன்றுக்குட்டி என, 16 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.
நான்கு மாடுகள் பலத்த காயமடைந்தன. பஸ்சில் இருந்த பல பயணியர், முன்புற கம்பியில் முட்டி காயமடைந்தனர். பஸ் டிரைவர் அழகர்சாமி, 35, என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.