tamilnadu epaper

கொலுத் திருவிழா

கொலுத் திருவிழா

கலை உணர்வால் 
களிமண்ணில்
பலப்பலவாய் சிலைகள் 
செய்தான் மனிதன்!
போதாதென்று 
மரம்,செடி கொடிகளோடும்
திறம்படவே செய்தான் 
சிலைகளை மனிதன்!
தானே இறைவனின்
படைப்பென்றாலும்
தானும் படைத்து உயிர் தரவே
வெறும் சிலைகளுமிங்கே 
இறைவர்கள் ஆயின;
கொலுப்படிகளைக் கொண்டு வந்து
கொலு வரிசை பலவற்றில்
மனம் நிரம்பிய கடவுளரை 
ஆலயம் விட்டுத் தம்
அகங்களிலே அமரவைத்தும்
ஆட வைத்தும்
ஆனந்தம் பேரானந்தமென
கள்ளமில்லாச் சிறுபிள்ளையாகி
கவலை மறக்கவே
கொலுவைக்கும்
நாளைக் குறித்தான் 
மனிதன்!
அகிலம் காக்கும் தேவர் யாவரும்
அன்புக்கடிமை ஆகாதவரோ!
அதனாலன்றோ
புரட்டாசி மாதம்
பக்தனின் மனத்தைப்
புறந்தள்ளாது
வருகின்றனர் பூமிக்கு
இறைவரும் தேவரும்
வழக்கமாய் என்றும்!
கொலு வீற்றிருக்கும்
இறைவரையும்
பெருவாழ்வு வாழ்ந்த
மானிடரையும்
கொலுவிலமர்த்தி
அழகு பார்த்து
அழகு பார்த்துக்
கொண்டாடும் கொலுப் பண்டிகை!
என்றும் தொடரும் நம்மில்லத்தில்!
உறவும்  நட்பும் ஓன்றிணைய
நவரசச்சுவைகளை நா ருசிக்க.  - 
இயல் இசை நாடகம்
இல்லம் நிரம்ப
உள்ளமெலாம் உற்சாகம் நிறைய
வைப்போம் கொலுவை
நவராத்திரியில்!
பெறுவோம் விரும்பிடும்
 வெற்றிதனை
இறைவன் அருளால் 
என்றென்றும்!
*******
அன்புடன், 
தெ. ,முத்துக்குமார், மைசூர்.