வீட்டில் சங்கினை வைத்துப் பூஜிப்பது மகாலட்சுமியைப் பூஜிப்பதற்குச் சமம்.செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் சங்கினைப் பூஜிப்பது லட்சுமி வாசத்தினை நிலைத்திடச் செய்யும் எளிய வழி ஆகும்.
சங்குகளைத் தரையில் வைக்கக் கூடாது. சங்கில் எப்போதும் பிரணவ ஒலி எழுந்து கொண்டே இருக்கும். இதன் விசேஷ அதிர்வு கள் தரையில் பட்டால், நமக்குத் தோஷம் உண்டாகும்.
சங்கினை தீர்த்தப் பாத்திரம் போன்றவற்றின் மேல் நிமிர்ந்த நிலையில்தான் வைக்க வேண்டும். பூஜையறை யில் வைக்கப்படும் சங்கு, எப்போதும் ஜல சம்பந்தத்துடன் இருக்கவேண்டும் என்பர்.
சங்கின் தலைப்பகுதி வடக்கு நோக்கியும்; நுனிப்பகுதி தெற்கு நோக்கியும் இருக்கும்படி வைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சங்கினைக் குப்புறக் கவிழ்த்து வைக்கக் கூடாது.
ஓர் இலை அல்லது தட்டில் நெல்லைப் பரப்பி அதன்மேல் சங்கை வைத்துப் பூஜிப்பது சிறப்பு. இதனால் அன்ன தரித்திரம் ஏற்படாது. நெல்லுக்குப் பதிலாக அரிசியும் வைக்கலாம்.
சங்கு வழிபாடு தரும் பலன்கள்
ஆலயங்களில் செய்யப்படும் சங்கா பிஷேகம் மிகுந்த புண்ணிய பலன்களை தரக் கூடியது. அதேபோல், வீட்டிலுள்ள விக்கிரகங் களை சங்கில் இட்ட புனிதநீர் கொண்டு திருமஞ்சனம் செய்வதும் மிகவும் விசேஷம். இதனால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.
ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு இணையானது ஒரு வலம்புரிச் சங்கு. ஆயிரம் வலம்புரி சங்குகளுக்குச் சமமானது ஒரு சலஞ்சலம். ஆயிரம் சலஞ்சல சங்குகளுக்குச் சமமானது ஒரு பாஞ்சசன்யம். எங்கு இவை முறையாக ஆராதிக்கப்படுகின்றனவோ, அங்கே செல்வ வளம் நிறைந்து இருக்கும்.
சங்குகளில் கோமடிச் சங்கு விசேஷமானது. ஒரு கோமடிச் சங்கினைப் பூஜிப்பது, கோடி வலம்புரி சங்குகளைப் பூஜித்த புண்ணியத்தைத் தரவல்லது.கோமடிச் சங்கினால் அபிஷேகித்து சிவபெருமானை வழிபடுவது, பசுவின் மடியிலிருந்து நேரடியாகப் பாலைச் சொரிந்து பூஜிப்பதற்குச் சமமான புண்ணியத்தினைத் தரவல்லது.
துளசி மற்றும் தாமரை மலர்களால் சங்கைப் பூஜித்தால் திருமகள் கடாட்சம் பெருகும். வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
சங்கில் இட்டு அபிஷேகம் செய்த பாலைப் பிரசாதமாக அருந்தி வந்தால், முகப்பொலிவு - தோற்றப்பொலிவு உண்டாகும்.
சாதாரண நீர், சங்கில் இடப்படும்போது புனித நீராக மாறிவிடும் என்கிறது சாஸ்திரம். அந்த நீரை நாள்தோறும் பிரசாத மாகப் பருகி வந்தால், நோய்களின் தாக்கம் கட்டுப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சங்குகளை வாங்கி ஆலயங்களுக்கு அளிப்பதால், ஜன்மாந்திர பாவங்கள் தீரும். சங்கை தானமாக அளிப்பதால் திருமாலின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். வம்சவிருத்திக்குக் குறைவு ஏற்படாது.
சங்கினை முறையாக வழிபடுவோர் இல்லத்தில் எதிர்மறை வினைகள் அணுகாது. கண்ணேறு, திருஷ்டி பாதிப்புகள் ஏற்படாது. அந்த வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
பிரம்ம முகூர்த்த காலத்தில் சங்கு தீபம் ஏற்றி வழிபட, குபேரன் அருள் எளிதில் கிடைத்திடும். சங்கின் ஸ்பரிசம் கிருமித்தொற்றினை அழிக்கவல்லது.
கோமாதாவாகப் போற்றப்படும் பசுக்களின் கழுத்தில் சங்கு அணிவிக்கும் வழக்கம் உண்டு. இப்படி பசுவுக்கு அணிவிக்கப்பட்ட சங்கினை, வீட்டு நிலைப் படி உயரத்தில், கருப்புக் கம்பளிக்கயிற்றில் கட்டி வைத்தால் கெட்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையாது என்பது நம்பிக்கை.
செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும்.
16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரைச் சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.
பிரம்ம முகூர்த்தக் காலத்தில் சங்கு தீபம் ஏற்றி வழிபட, வீட்டில் குபேர சம்பத்து உண்டாகும்!
சங்கு தோன்றிய வரலாறு என்ன
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது, தோன்றிய அரிய பொக்கிஷங்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய திவ்ய பொருள்களில் சங்கும் ஒன்று என்கின்றன புராணங்கள்.
சங்கினைத் தனதாக்கிக் கொள்ள எண்ணிய பெருமாள், திருவலம்புரத்தில் தவமியற்றினார். ஈசனின் அருளால் சங்காரண்யம் எனும் தலத்தில் அதனைப் பெற்றார். மீண்டும் வலம்புரம் எனும் தலத்தில் அதைத் தாங்குவதற்கான கரங்களைப் பெற்றார் என்பது புராணத் தகவல்.
சங்க சூடன் எனும் பெயர் கொண்ட அசுரன், அரிய வரங்களைப் பெற்றுப் பலசாலியாகத் திகழ்ந்தான். மூவுலகங்களையும் ஆட்டிப்படைத்தான். இறுதியில் சிவபெரு மான் தன் சூலாயுதத்தால் அவனை அழித்தார். அப்போது கடலில் விழுந்த அவனுடைய எலும்புகளே சங்குகளாக விளைகின்றன என்று சொல்லப்படுகிறது.
இங்ஙனம் கடலிலிருந்து சங்கசூடனால் கிடைக்கும் சங்கு தங்களுக்கே சொந்தமானது என அசுரர்கள் உரிமை கொண்டாடினார்கள். இந்நிலையில் அசுரர் தலைவனான பாஞ்சன் என்பவனுடன் திருமால் போரிட்டு, சங்கினைக் கைப்பற்றினார். ஆகவே, அவரின் திருக்கையில் இருக்கும் சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர் ஏற்பட்டதாம்.
கிருஷ்ணாவதாரத்திலும் ஒரு திருக்கதை சொல்லப்படுவது உண்டு. குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ''குருதட்சணையாக என்ன வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு 'பாஞ்ச ஜன்யம்’ எனப் பெயர் வந்தது என்பார்கள்.
கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.
கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்
திருமால் தனது கரங்களில் ஏந்தியுள்ள சங்குக்குத் தலம்தோறும் பல பெயர்கள் உண்டு. என்பார்கள். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள். பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai