tamilnadu epaper

சங்கூதும் ஆண்டி

சங்கூதும் ஆண்டி

 சும்மா கிடந்த சங்கை
            ஊதிக் கெடுத்தான் ஆண்டி..."

இது வெகு காலம் தொட்டே நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் சொலவடை அல்லது பழமொழி ஆகும்.

அனைவரும் கேட்டுவிட்டு 'அப்படியா' எனப் புரிந்தது போல் போய்விடுவர்.

             "ஒரு சங்கு சும்மா கிடந்தது....
             ஆண்டி அதை எடுத்து ஊதினான்....

அது என்ன கெடுத்தான்... என்னவோ கெடுத்தான்..."
என நினத்துக் கொண்டு எவரும் ஆழ்ந்த பொருள் காணுவதில்லை...,
அவசர வாழ்க்கையில் ..

ஆக, இதன் பின்னணியில் ஒரு கதை இருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு நிகழ்ச்சி அந்த காலத்தில் நடந்தேறி இருக்க வேண்டும். அதனால் இம்மொழி தோற்றமாகி இருக்கலாம். நானறிந்த வரையில் இரு கதைகள் இதன் பின்னால் உளது எனக்கூறி அதை இங்கே சமர்ப்பிக்க விழைகிறேன்.

ஓர் ஆண்டி தினமும் காலையில் தன் செகண்டியை அடித்துக் கொண்டும், சங்கினை ஊதிக் கொண்டும் பிச்சை எடுக்கச் சென்று விடுவார். அப்படியாக, ஒருநாள் அவர் பிச்சை முடித்து இரவு சத்திரம் வந்து தங்கி இருந்தார். இரு திருடர்கள்  இவரை அணுகி, பக்கம் வந்தனர். தங்களின் திருட்டுக்கு அந்த ஆண்டியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, ஆடுகளை திருடச் சென்றனர்.

ஆட்டுப் பட்டியில், கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர்களின் காவலர்கள் இருவர் தூங்கிக் கொண்டிருந்தனர். திருடர்கள் இருவரும் ஆளுக்கோர் ஆட்டினை தூக்கி தோளில் போட்டனர். ஆடுகள் 'மே... மே..' எனக் கத்தின. உடனே ஒரு திருடன் ஆண்டியை பார்த்து, "சங்கை பிடிடா ஆண்டி..." என மெதுவாக கூறினான். அவன் சொன்ன சங்கு, ஆட்டின் கழுத்து... ஆனால் ஆண்டி பழக்க தோசத்தில் தன் கையிலுள்ள சங்கை எடுத்து ஊத, தூங்கிக் கொண்டிருந்த கீலாரிகள் விழித்துக் கொண்டு, திருடர்களைப் பிடித்து விட்டனர். சங்கை ஊதிய ஆண்டி தப்பித்துக் கொண்டான்.

மேலும் புராணத்திலும் ஓர் உதாரணம் காணச் செல்லலாம்.

           'வடவரையை மத்தாக்கி
           வாசுகியை நாணாக்கி...'

இவ்வரிகள் இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் கூறுவார். இப் பாட்டினை திருமதி. எம்.எஸ் அவர்கள் தன் இனிய குரலில் பாடியதைக் கேட்டால், பாரதியின் கூற்றைப் போல, தேன் வந்து பாயும்...எனலாம்.
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது, வந்த நஞ்சினை, சிவனாகிய 'பிச்சாண்டி' விழுங்கிட, அதைக் கண்ட பார்வதியம்மையார், சிவனின் சங்கினை ( கழுத்தை) பிடிக்க, சங்கு ஊதி ( வீங்கி) , நஞ்சு கழுத்தில் தங்க, நீல கண்டனாகி, சும்மா கிடந்த சங்கை கெடுத்துக் கொண்டார்.

அதுதான், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கக் கூடாது. அதாவது, தேவையில்லாமல் ஒரு விசயத்தில் தலையிட்டு, தமக்குத் தாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது என உட்பொருள் கொள்ள வேண்டும்.
நன்றி...
             
                       - துரை சேகர்
                         கோவை.