tamilnadu epaper

சாலையோர திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு

சாலையோர திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு

கோவை:

சரிவர அகற்றப்படாமல் கோவை மாநகரில் சாலையோர திறந்தவெளிப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது.


கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், 5,600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல், சாலைகளில் தேங்கியுள்ள குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினமும் 1,100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை, மாநகரின் பொது இடங்களில் அரை டன், ஒரு டன், இரண்டு டன் என வெவ்வேறு கொள்ளளவுகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன.


பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை இத்தொட்டிகளில் கொட்டி வந்தனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பை, லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வெள்ளலூரில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டு வந்தது. இச்சூழலில், தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணி மாநகராட்சியால் தீவிரப்படுத்தப்பட்டால், சாலையோர பொது இடங்களில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. இருப்பினும், தூய்மைப் பணியாளர்கள் சரிவர வராததால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை சாலையோர பொது இடங்களில் கொட்டி வருகின்றனர்.


இச்சூழலில், கடந்த சில நாட்களாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாநகரில் குப்பை சேகரிப்புப் பணி தொய்வடைந்து, குப்பைக்கழிவுகள் தேங்கிக் காணப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, “மாநகரில் பேட்டரி ஆட்டோக்கள், இலகு ரக வாகனங்கள், லாரிகள் என 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் குப்பைகழிவு சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் சமீபத்தில் மாற்றப்பட்டது. பழைய ஒப்பந்த நிறுவனத்தினர், தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெற்ற இஎஸ்ஐ தொகை, பிஎஃப் தொகையை, பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கவில்லை.


இதனால் இஎஸ்ஐ, பிஎஃப் தொகையை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 2ம் தேதி ஓட்டுநர் தூய்மைப் பணியாளர்கள் உக்கடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 3ம் தேதி மாநகரில் சில இடங்களில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, புதிய ஒப்பந்த நிறுவனத்தினர், வெளிமாநில தொழிலாளர்களை வைத்து குப்பை சேகரிக்க திட்டமிட்டனர்.


இதற்கு தற்போதுள்ள பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பை சேகரிப்புப் பணி தொய்வடைந்ததால், நகரில் பல்வேறு இடங்களில் சாலையோர திறந்தவெளி இடங்களில் குப்பை தேங்கிக் காணப்படுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தினர் இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்” என்றனர்.