tamilnadu epaper

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா


மயிலாடுதுறை, மே 6

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் உள்ளது சவுந்தரநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அகத்திய மாமுனிவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்த சிறப்புக்குரிய தலம். 

  சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முன்னோர்களுக்கு 16-ம் நாள் காரியம் செய்யத் தவறியவர்கள் சாந்தி ஹோமம் செய்து இக்கோயிலில் உள்ள சிவனையும் அம்பாளையும் தரிசித்து 16 முறை சுற்றிவர 21 தலைமுறை தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம். 

 இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் சீரமைப்பு பணிகளை முடித்து நேற்று குடமுழுக்கு நடத்தினர். காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூர்ண குதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். 

 புனிதநீர் ஊற்றல்

தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.