சித்திரை தமிழ் வருடத்தில் முதல் மாதம். இந்த மாதத்தின் தொடக்கம் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது. சித்திரை தொடக்க நாள் வருடத்தின் தொடக்க நாள் என்பதால் அன்றைய தினம் அந்த வருடத்திற்குரிய பஞ்சாங்கத்தை வாசிப்பது அவசியம்.
தமிழ் புத்தாண்டில், வீட்டிலுள்ள பெரியவர்கள் பஞ்சாங்கம் வாசிப்பதும், அதை சிறியவர்கள் கேட்பதும், காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம். யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் ஆகிய ஐந்து அங்கங்களையும் கொண்டதால் இது பஞ்சாங்கம் எனப்படும். இதில் திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும். நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் அகலும். வாரம் ஆயுளை அதிகரிக்கும். யோகம் அறிவதால் நோயற்ற வாழ்வு உண்டாகும். அனுதினமும் கரணத்தைப் பற்றி அறிவதால், காரியம் சித்தியாகும்.
எனவே தினமும் பஞ்சாங்கம் படிப்பது அளவற்ற நன்மைகளைத் தரும். தினமும் படிக்க முடியாதவர்கள், சித்திரை முதல் நாளில் மட்டுமாவது, வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டுவிட்டு, அன்றைய தினத்துக்கான பஞ்சாங்கக் குறிப்பை படிக்க வேண்டும். வீட்டில் படிக்க வசதி இல்லாதவர்கள், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கலாம்.
தமிழ் வருடப் பிறப்பு அன்று, வேப்பம் பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இனிப்பும், புளிப்பும், கசப்பும் கலந்த இந்தப் பச்சடி, வாழ்வே இனிப்பும், கசப்பும்,புளிப்பும் கலந்ததுதான் என்னும் தத்துவத்தை உணர்த்துகின்றது.
சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.
சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.
சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது. சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது. சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது. சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.சித்திரைக்கு உள்ள மற்றொரு முக்கியச் சிறப்பு, அஸ்வினி நட்சத்திரத்தில் அது ஆரம்பிக்கிறது. அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் இந்த நட்சத்திரத்தின் அதிபதிகள் ஆவர்.
அவர்களைக் குதிரைகளாகக் கொண்டு ஒற்றைச் சக்கரத்தேரில் சூரியன் வான் மண்டலத்தில் பவனி வருகிறான் என்று ரிக் வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி நட்சத்திரத்துக்கு மருத்துவர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்துக்கு அதிபதியான அஸ்வினி தேவர்கள், "தேவ மருத்துவர்கள்" எனப்படுகிறார்கள்.
நம்முடைய பிறந்த நாளை நாம் பிறந்த நட்சத்திரத்தின் போது கொண்டாடுவது போல புத்தாண்டுப் பிறப்பை சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும்போது கொண்டாடுவதால், அந்த அஸ்வினி தேவர்களது அருளால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சூரியன் பல பிறந்த நாள்களைப் பெறுகிறது.
நாம் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் கணக்கெடுத்துக் கொண்டும் இருக்கிறான் சித்திர குப்தன் என்பார்கள். அவர் தோன்றியதும் சித்திரா பௌர்ணமியன்றுதான்.
அன்றைய நாளில் மக்கள் சித்திர குப்தனுக்காக விரதம் இருந்து, "எங்கள் பாவக் கணக்கை குறைத்து, மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்க வழித் துணையாக இருப்பாயாக" என்று வேண்டிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
சித்திரை மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் முதலில் நம் நினைவிற்கு வரும். அதிலும் குறிப்பாக சித்திரை திருவிழா என்றாலே உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தான்.இந்த திருவிழா கிட்டத்தட்ட 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதத்தில் வரக்கூடிய ‘சித்ரா பெளர்ணமி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலவின் முழு வெளிச்சத்தால் பூமியின் சில பகுதியில் ஒரு வகை உப்பு வெளிவரும், அதனை " பூமி நாதம்" என சித்தர்கள் அழைப்பார்கள். இது மருத்துவ துறையில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.
எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது பல மடங்கு பலன் தரக்கூடிய நாளாக விளங்குவது "அட்சய திருதியை".இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் தான் வருகிறது.இந்த தினத்தில் உணவு தானியங்கள், அரிசி, கோதுமை, தானியங்கள். பழங்கள். தயிர், மோர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் நமக்கு மன அமைதியும், செல்வமும் பெருகும்
சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடப்பது வழக்கம்.
சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று "லட்சுமி பூஜை" செய்வது நன்மை தரும். சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. .
மிகவும் புண்ணியமான இந்நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள், அரிசி, கோதுமை, தயிர், மோர், குடை, ஆடைகள், தானியம், பழம் போன்றவற்றை வறியவர்களுக்குத் தானம் செய்வதால் என்றும் அழியாத செல்வம் நம் வாழ்வில் தங்கும் என்பர்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
-சசிகலா திருமால்
கீழப்பழுவூர்.