"சுவாமி, தலைவர் தர்மா இன்னும் போகவில்லை. தன் மகள் திருமணத்தை தாங்கள் திருக்கரங்களால் திருமண நாண் எடுத்துக்கொடுத்து நடத்திவைக்க தங்கள் சம்மதம் தெரிவிக்கும்வரை இங்கிருந்து போகமாட்டேன் என்று வாசலில் தவம் இருக்கிறார்...
நம் திருப்பணிக்கெல்லாம் பணத்தை அள்ளி அள்ளிக்
கொடுத்தவர் சுவாமி!....
ஊர்ப்பெரியவர்! பெருஞ்செல்வந்தர்! பார்க்க பரிதாபமாக இருக்கிறது சுவாமி! தாங்கள் கொஞ்சம் மனம் இரங்கக்கூடாதா!"
" ம்..சரி வரச்சொல்!"
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஓடி வந்த தர்மா நெடுஞ்சாண்கிடையாக சுவாமியின் காலில் விழுந்து வணங்கினார்.
"எழுந்திரு தர்மா, உனக்கு பக்குவம் இல்லை!..ஞானம் இல்லை!..உன் பகட்டு இன்னும் போகவில்லை.. என்பதால்தான் இன்னும் யோசிக்கிறேன்.."
" எனக்கு பகட்டா.?.பக்குவம் வரவில்லையா?..
இத்தனை ஆண்டுகாலம் தங்கள் காலடியில் கிடந்து வளர்ந்தவன் சாமி!"
"சரி!..ஒரு நிபந்தனை!"
"சொல்லுங்கள் சாமி அதை தலைமேல் வைத்து கொண்டாட காத்திருக்கிறேன்!"
"நான் வருவதை விளம்பரப்படுத்தக்கூடாது!..
முதலில் எளியவருக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் சமபந்தி விருந்தளிக்க
வேண்டும்!..
.நீ மட்டும் வாசலில் நின்று என்னை வரவேற்க வேண்டும்!..என்ன
சம்மதமா?"
"சுவாமி!..அது என் பாக்கியம்!"
பிரமாண்டமான திருமணப் பந்தலின் வாயிலில் சுவாமிக்காக காத்து நின்ற தர்மா அதிர்ந்துபோனார்!..
எதிரே சுவாமி நிர்வாணமாக வந்துகொண்டிருந்தார்!..
முகம் சுளித்த தர்மா ஐயோ, என்று தன் தலையில் அடித்துக்கொண்டு மண்டபத்துக்குள் ஓடி அவசரம் அவசரமாக அங்கிருந்த தன் கட்சி தலைவரிடம் மங்கல நாண் எடுத்துக்கொடுக்கச்சொல்லி மகள் திருமணத்தை முடித்து திரும்புகையில் ...
எதிரில் பட்டு பீதாம்பரத்தில் நின்று கொண்டிருந்தார் சுருளி சுவாமிகள்!
"சுவாமி என்று நெகிழ்ந்த தர்மா
மீண்டும் சுவாமியின் சித்து விளையாட்டில் அதிர்ந்து போனார்.
" தர்மா,நான் திருமணத்திற்கு திகம்பரமாகவா வருவேன்?.."
"சுவாமி!..நான் பெரும்பாவி!..பகட்டு என் கண்ணை மறைத்துவிட்டது!என்னை மன்னித்து
விடுங்கள் சுவாமி!..
மன்னித்து விடுங்கள்!" என்று கதறியப்படி சுவாமி காலில் விழுந்தார் தர்மா.
"தர்மா, நீ..பக்குவப்பட தொடங்கிவிட்டாய்இனி ஞானம் கிட்டும்!.எழுந்திரு!"
"கண்ணீர் மல்க..எழுந்து நின்று கைவணங்கி உறைந்து போய் நின்று கொண்
டிருந்தார் தர்மா.
--- அய்யாறு.ச.புகழேந்தி,