tamilnadu epaper

சேலத்தில் தம்பதி கொலை- வட மாநில வாலிபர் கைது

சேலத்தில் தம்பதி கொலை- வட மாநில வாலிபர் கைது

சேலம்:


சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் எட்டி குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70), இவரது மனைவி வித்யா (65), பாஸ்கரன்-வித்யா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டின் முன் பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் என்ற தினேஷ், வாசுதேவன் என்ற ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.


இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டில் வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதனை பார்த்த அவர்களது மகன் வாசுதேவன் கதறினார்.


தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அவர்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.


சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கடப்பாறை, சம்மட்டி உள்பட பயங்கர ஆயுதங்களால் தம்பதியை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பாஸ்கரன் மற்றும் வித்யா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.



அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடியதுடன் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பது தெரிய வந்தது.


அவரை சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேடினர். தொடர்ந்து வீட்டையும் கண்காணித்தனர். அப்போது வெளியல் சுற்றி விட்டு ரத்தக்கரை படிந்த உடையை மாற்றுவதற்காக இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சந்தோசை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.


தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-


டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது உடன் வேலை செய்பவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை கட்ட முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.


அப்போது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்த போது அங்கு பாஸ்கரன் தம்பதியினர் அணிந்திருந்த நகைகளை பார்த்து அந்த நகைகளை கொள்ளையடித்து கடனை அடைக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார்.


அதன்படி நேற்று மதியம் இந்த தம்பதி தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ் கடப்பாறை மற்றும் சம்மட்டியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வித்யாவை சம்பட்டியாலும் கடப்பாறையிலும் முதலில் தலையில் தாக்கினார்.


அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பாஸ்கரனையும் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகையுடன் தப்பி சென்ற சந்தோஷ் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.


இரவாகி விட்ட நிலையில் குளித்து விட்டு உடையை மாற்றுவதற்காக வீட்டிற்கு வந்த போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். இன்று சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை நடந்து 4 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கமிஷனர் அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினார். இந்த கொலையில் கொலையாளியை கைது செய்ய கேமரா பதிவுகள் உதவியதாகவும், ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் கேமரா பதிவால் குற்றவாளியையும் இதே போல 4 மணி நேரத்தில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.