tamilnadu epaper

உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் கட்சிப் பொறுப்பிலேயே இருக்க முடியாது - ராமதாஸ் பேச்சு

உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் கட்சிப் பொறுப்பிலேயே இருக்க முடியாது - ராமதாஸ் பேச்சு

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது.


இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராம்தாஸ் பேசியதாவது, “(வன்னியர்களுக்கு) 10.5% இடஒதுக்கீடு வழங்காததால், போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும். போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம். 45 வருடமாக உங்களுக்காகவும், அனைத்து சமூதாய மக்களுக்காகவும் போராடியும், போராடி சில வெற்றியும் பெற்றவன் இந்த ராமதாஸ்.


ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். 50 தொகுதிகளில் நாம்மால் எளிதாக வெல்ல முடியும். ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.


இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.


சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்எல்ஏ ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும்.


வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என இது எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது.


உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல” என்று தெரிவித்தார்.