tamilnadu epaper

சைக்காலஜிஸ்ட்

சைக்காலஜிஸ்ட்


அன்று அப்பாவுக்கு ரிட்டையர்மெண்ட்.


மாலையும் கழுத்துமாய், நாலைந்து கிப்ட் பார்சல்களோடு, ஸ்வீட் பாக்கெட்டுகளோடு, கம்பெனி காரில் வந்திறங்கினார் அப்பா.


ஏறக்குறைய 30 ஆண்டுகள் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர். சாதாரண கிளார்க்காக உள்ளே நுழைந்து மேனேஜர் என்கிற பதவியோடு வெளியேறுகிறார்.


வழியனுப்ப வந்த கம்பெனி ஆட்கள் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேற நானும் தங்கை மேகலாவும் அப்பாவிடம் சென்று, அந்த பொருட்களை எல்லாம் வாங்கித் தனியே வைத்து விட்டு அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டோம்.


அதே நேரம் அம்மா பேசிய பேச்சு என்னை வெகுவாய் கோபம் கொள்ள வைத்தது. ஆனாலும் அடக்கி கொண்டேன்.


  "த பாருங்க... அதான் ரிட்டயர்ட் ஆயிட்டோமே!ன்னு சும்மா வீட்டிலேயே இருந்துக்கிட்டு, எப்பவும் படுத்துத் தூங்கிக்கிட்டு, சும்மாவாச்சும் வீட்டுக்குள்ளார அங்கேயும் இங்கேயும் நின்னுக்கிட்டு, சதா தொலைக்காட்சியையே பார்த்துக்கிட்டு, செல்போனை நோண்டிக்கிட்டு இருக்காதீங்க!"


  "சரி... வேற என்ன பண்ணனும்?" அப்பா பரிதாபமாய் கேட்க.


  "பக்கத்து வீட்டு ஆடிட்டர் கிட்டே சொல்லியிருக்கேன்... அவருடைய ஆடிட்டர் ஆபீசுக்கு சீனியர் லெவல்ல... நல்ல ஆபீஸ் எக்ஸ்பிரியன்ஸ் உள்ள ஆள் வேணுமாம்... உங்களைப் பற்றிச் சொன்னேன் ஆடிட்டர் ஆபீஸ்ல வந்து பார்க்கச் சொன்னார்!... இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு மறக்காம போயிடுங்க!".


  "முப்பது வருஷம் வேலை பார்த்து ரிட்டையர்டு ஆன மனுஷனை... ஒரு நாள் கூட ஓய்வெடுக்க விடாமல்... அடுத்த நாளே வேற வேலைக்குத் துரத்துறாளே இவங்கெல்லாம் ஒரு மனைவியா?" மனசுக்குள் திட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.


மறுநாள் அப்பா அந்த ஆடிட்டர் ஆபீஸ்க்குச் சென்ற பின் நேரடியாகவே அம்மாவை தாக்கினேன்.


 மெலிதாய் சிரித்தவள், "டேய்... ரிட்டயர்மென்ட் என்கிற வார்த்தை ஒரு ஆம்பளையை எந்த அளவுக்குப் பாதிக்கும் தெரியுமா?... "அவ்வளவுதான் நாம இனிமேல் எதுக்கும் ஆகாத கேஸு!... வீட்டுல இருக்கற மத்தவங்களுக்கு பாரம்தான்!"... அப்படின்னு நினைக்க வெச்சிடும்!.... மத்த நாட்களில் நாம பேசற சாதாரண இயல்பு வார்த்தைகள் கூட அவர்களைத் தாக்குற மாதிரித் தோணும்... காயப்படுத்தி விடும்!....

 "ப்ச்.... நாமதான் ரிட்டையர்டு கேஸ் ஆயிட்டோமே அதான் எல்லாரும் நம்மள இப்படிப் பேசிட்டிருக்காங்க"ன்னு மனசுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திடும்!... அது அவங்களுடைய மன ஆரோக்கியத்தைக் கெடுத்து மனநோயாளி ஆக்கிடும்!... அப்படி மன ஆரோக்கியம் வலுவிழக்கும் போது ஆட்டோமேட்டிக்கா உடல் ஆரோக்கியமும் கெட்டிடும்...."


நான் அம்மாவையே வெறித்துப் பார்த்தேன்.


  "வண்டி ஓடிக்கிட்டே இருந்தால்தான்டா வண்டில எந்தப் பிரச்சனையும் வராது.... அதே மாதிரி மனுஷன் உழைச்சுகிட்டே இருந்தால்தான் அவனுக்கு எந்தப் பிரச்சனையும் வராது!... அந்த உழைப்புச் சங்கிலி அறுந்து போகாம இருந்தால்தான் ஆம்பளைகளும் ஆரோக்கியமாகவும்... சந்தோசமாகவும்.... இருப்பாங்க!...இப்ப புரிஞ்சுதா நான் ஏன் உங்க அப்பாவை...."


அம்மாவின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு "அம்மா நீ ஒரு சைக்காலஜிஸ்ட்ம்மா" என்றேன்.



(முற்றும்)

முகில் தினகரன்,

கோயம்புத்தூர்.