tamilnadu epaper

சோழர்குல நாயகியின் சேர்த்தி

சோழர்குல நாயகியின் சேர்த்தி


தனக்காக காத்திருக்கும் நாயகிக்காக ஆற்றைக் கடந்து செல்லும் அரங்கனின் வைபவத்தை தெரிந்துக்கொள்வோம். வாருங்கள்.


"கோழியும் கூடலும் கோயிலும் கொண்ட கோவலரே ஒப்பர்

குன்ற மன்ன

பாழியந்தோளுமோர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்

வாழியரோ இவர் வண்ணம் எனில் மாகடல் போன்றுளர், கையில் வெய்ய

ஆழியன்றேந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒரு வரழகியவா”


"அழகியவா" என்றழைத்த திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பாசுரம் இது . இங்கே கோழியும் கூடலும் கோயிலும் என்று கோழியூர் கோவலரே ஆன அரங்கனை அழைக்கிறார். 


கோழியும் கூடலும் அது என்ன? கோழியூர் என்று அழைக்கப்பட்ட உறையூர்.சோழர்களின் தலைநகரமாக விளங்கிய ஒப்ப்ற்ற நகரம்.  

 

 தமிழகத்தை ஆண்ட சோழமன்னரின் காலம் அது. "சோழ நாடு சோறுடைத்து" என்ற வாக்கின்படி நெல்வளத்துடன் செழுமையாக திகழ்ந்தது நந்தசோழனின் ராஜ்ஜியம். ஆனால் அவனுக்கோ ஒரு குறை இருந்தது.எத்தனை செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் வேண்டுமே.


குழல் இனிது யாழ் இனிது என்பர்

தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.


குழந்தைப்பேறு கிடைக்க மிகுந்த பக்தியோடு பரம்பொருளான பெருமாளிடம் வேண்டிக்கொண்டான். தீவிர பக்தனான நந்த சோழனுக்கு அருள்புரிய இசைந்தான் கருணாமூர்த்தியான கண்ணன். ஒரு நாள் நந்த சோழன் குதிரையில் பயணித்துக்கொண்டிருந்தான்.வழியில் இருந்த தடாகத்தில் தாமரை பூக்கள் பூத்து குலுங்கின. அதில் அவன் மனம் லயித்தது. அதில் ஒரு தாமரை போல் மலர்ந்த அழகிய குழந்தையையும் கண்டான். ஆச்சர்யமாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தனக்காகவே மாதவன் தன் மார்பில் உறையும் மகாலட்சுமியை தடாகத்தில் தாமரை போல் தந்து இருக்கிறான் போலும் என மனம் மகிழ்ந்து அந்த குழந்தை கையில் எடுத்து கொஞ்சினான். தாமரை தடாகத்தில் தோன்றிய மஹாலட்சுமி அம்சமான அக்குழந்தைக்கு கமலவல்லி எனப் பெயரிட்டான். அவள் நாளொரு மேனி பொழுது ஒரு வண்ணமாக வளர்ந்து வந்தாள். பருவ வயதைத் தொட்டாள். தன் தோழிகளுடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். 


 அங்கே மனம் மயக்கும் இராஜாதிராஜன் அழகிய வாலிப தோற்றத்தில் குதிரையில் கம்பீரமாக அரங்கன் உலா சென்றான்.


 "யார் இவர்? என் மனம் அவர் பின்னாடி சென்று விட்டதே. அவரை மீண்டும் காண தவிக்கிறதே", என புலம்பினாள் கமலவல்லி .



அவன் தான் மாமாயன் ஆன பாம்பணையில் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கநாதன். அவள் முன் அழகனாய் வீரனாய் குதிரையில் தென்பட்டவர் அவரே. அவனது லீலா விநோதஙாகளில் ஒன்று. அவரது அழகில் மயங்கினாள் சோழகுல நாயகி கமலவல்லி.அன்று முதல் அந்த அழகன் அரங்கன் மீது நாயகி கமலவல்லிக்கு தீராக்காதல் . அரங்கனும் அவள் மேல் மையல் கொண்டான். இதையறிந்த நந்த சோழனுக்கு என்ன செய்வது என தெரியாமல் தவித்தான்.


"கனவிலே தோன்றிய அரங்கன் பெண்ணின் மனதை கவர்ந்த கள்வன் நானே", என்றும் அழகிய மணவாளனாக அதாவது மாப்பிள்ளையாகி அவளை ஏற்றுக்கொள்கிறேன் என உறுதி கூறுகிறான். தாமரை தடாகத்தில் உதித்த நாளான பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தன்று சோழ குலவிளக்கான கமலவல்லியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டான். நந்த சோழன் தன் தவப்புதல்வி நினைவாகவே உறையூரில் கோயிலை உருவாக்கினான். உறையூர் நாச்சியார் கோவில் எனப் பெயர் பெற்றது . அதுமட்டுமல்ல திவ்யதேசங்களில் இரண்டாவது இடமாகவும் ஸ்ரீரங்கத்தின் உபகோயிலாகவும் விளங்குகிறது.


 அழகியமணவாளனான ஸ்ரீரெங்கராஜனும் , கமலவல்லியும் பங்குனி ஆயில்யம் தினத்தன்று ஒருசேர ஒரே மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் நிகழ்வே உறையூர் சேர்த்தி என பெயர்பெற்றது. 


இன்றும் தன் நாயகன் ஸ்ரீரங்கநாதனுக்காக காத்திருக்கும் கமலவல்லியை காண வருடம் காண, காவிரி ஆற்றை தாண்டி சில மைல்கள் கடந்து அவள் அவதரித்த பங்குனி ஆயில்யம் அன்று படைசூழ அங்கே செல்கிறார் ஸ்ரீரங்கநாதனாகிய நம்பெருமாள்.


தனது மாலையை அவளுக்கு அளித்து தனது நாயகியாக ஏற்று ஒருசேர ஒரே பீடத்தில் அமர்கிறார். பரம்பொருளுடன் இணைந்து தம்பதிகளாகி கமலவல்லி தாயாராக நமக்கு அருள்பாலிக்கிறார்.தாயார் தன் நாயகனுக்கு அழகிய சால்வை பரிசளிக்க அதை ஏற்றுக்கொள்கிறார் அழகிய மணவாளனாக நம்பெருமாள்.


இன்றும் அழகியமணவாளனாக காட்சி தரும் மூல மூர்த்தி கர்ப்பக்கிரஹத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீரெங்கநாதனே அழகியமணவாளன் ஆனதால் தனிப்பட்ட உற்சவமூர்த்தி கிடையாது. ஸ்ரீரங்கம் உற்சவமூர்த்தி நம்பெருமாளே ஒவ்வொரு வருடமும் பங்குனி ஆயில்யம் அன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆற்றை கடந்து அங்கே எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேவை சாதிக்கிறார். 


அந்த ஊர் மக்களும் மாப்பிள்ளையை கோலாகலமாக சீருடன் அழைப்பர் . மேளதாளத்துடன் மிக அழகாக அற்புதமாக மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் . அன்று கமவல்லி தாயார் அற்புத கோலத்துடன் மணப்பெண்ணாக ஸர்வ அலங்காரத்துடன் சேவை தருவார். 


பங்குனி ஆதிப்பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் ஆயில்ய நட்சத்திரம் கூடிய நன்னாளில் நடைபெறும் 



இருவரும் ஒருசேர தரும் காட்சியை சேர்த்தி என்பார்கள். இந்த சேர்த்தி சேவை சேவித்தால் கணவன் மனைவி ஒற்றுமை மேன்படும் என்பது ஐதிகம் . 


நவநீதத்துடன் கல்கண்டு வாங்கிக்கொடுப்பது மிக விசேஷம். 


இந்த வருடம் 08.04.2025 அன்று உறையூர் சேர்த்தி மதியம் நடைபெறும் . 


அன்று இரவு சத்தம் போடாமல் அரங்கன் அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கம் திரும்புவார் .


உறையூர் கமலவல்லி தாயாருடன் அழகியமணவாளனை சேவித்து அரங்கன் அருள் பெற வேண்டுகிறேன்.

 


-உமா முரளி,

ஸ்ரீரங்கம்.