tamilnadu epaper

தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு மத்திய அமைச்சர்–தி.மு.க. எம்.பி.க்கள் மோதல், கடும் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு  மத்திய அமைச்சர்–தி.மு.க. எம்.பி.க்கள் மோதல்,  கடும் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, மார்ச் 11


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்டம் நேற்று துவங்கியது. கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க. எம்.பி.க்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. இக்கட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும் மார்ச் 10-ந்தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 24 நாட்கள் இடைவெளிக்கு பின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது.


தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு


காலை 11 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றச்சாட்டை எழுப்பிப் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:


“பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இந்த நிதியை பெற்றுள்ளன. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. இதனை ஏற்க முடியாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது


மாநிலங்களை பழிவாங்க பள்ளி மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சரியா? மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. எனவே, கட்டாயமற்ற மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றாததால், நிதி வழங்க மறுப்பது கூடாது. எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காத நிலையை மத்திய அரசு உருவாக்குமா?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


யு டர்ன் அடித்தது ஏன்?


இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:


‘‘புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தி.மு.க. வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள்.


மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், இமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


ஜனநாயக முறைப்படி


செயல்படவில்லை...


தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரீகத்தில் இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் எதிர்காலத்தோடு தமிழக அரசு விளையாடுகிறது. மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது. மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள். மாணவர்களை தமிழக அரசு தவறாக வழி நடத்துகிறது.


புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்பது தொடர்பாக அவர்கள் எந்த தேதியில் என்னை சந்தித்தார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும். முதல்வர் ஸ்டாலின் இதை ஏற்க தயாராக இருந்தார். அவரது சகோதரி கனிமொழி இங்கே இருக்கிறார். தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் நியாயமற்ற முறையில் செயல்படக்கூடாது.


இவ்வாறு அவர் பேசினார்.


மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.


தி.மு.க. எம்.பி.க்கள் பற்றி


தவறான கருத்து:


திரும்பப் பெற்றார் பிரதான்


திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.


நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், தி.மு.க.வினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள் என்று கூறியதற்கு,தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறினார். இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்


கனிமொழி பேட்டி


இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ‘தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்று கூறியது வருத்தமளிக்கிறது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டு, என்னை விளக்கம் அளிக்க அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை’ என்றார்.


மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியது இல்லை. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர், கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். மத்திய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வேர் கூறினார்.


ஸ்டாலின் கண்டனம்


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:


"தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம்ஸ்ரீ திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!


நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டும்!தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.